Wednesday, August 25, 2021

 சிவபெருமான் அப்பத்துக்கு அரசனைப் பழிவாங்கிய படலம்






இற்றைக்கு ஏறத்தாள இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவரும் சைவமும் தமிழும் தளைக்க இடையறாது பணிபுரிந்தவருமான யாழ்ப்பாணம், நல்லூர் ஸ்ரீ ல ஸ்ரீ ஆறுமுக நாவலரின் உரை நடையில் ஒரு கதை: 

மே மாதம் 18 ஆம் திகதி

ஈழ வளநாட்டை ரஜதேவேந்திரன் என்னும் இனச்செருக்கும் தன்னாணவமும் மிக்க ஆரியகுலத்தவன் அரசியற்று நாளிலே வடகோடியிலே காடுகளும் கழனிகளும் நிரம்பப்பெற்றதும் திருக்கோயில்களில் சிவவழிபாடுகளும் மடங்கள் தோறும் சிவனடியார்க்கு அன்னதானமும் அன்றாடம் நிகழ்வதுமான சரித்திரப் பெருமைபெற்ற பழம்குடியிருப்பென்னும் தலத்துக்குத் தென்றிசையின் கிழக்குஎல்லைக்குச் சிறிது அப்பால் பேரையாறு என்னும் வற்றாத தீர்த்தம் வந்திக்கடலுடன் சங்கமிக்கும் புண்ணிய பூமியில் நன்செய் புன்செய் நிலங்கள் கண்ணுக்கெட்டியளவு தூரம்வரை பரந்திருக்க அவற்றினருகே காலம்காலமாய் உழுதுண்டு வாழ்வதையும் இல்லார்க்கு ஈவதையும் செவ்வனே செய்யும் எண்பதின்மருக்கு அதிகமாகாத மாந்தர் வாழும் ஓரூர் இருந்தது. அவ்வூரிலே அன்பால் நிறைந்தவளும் உடல் இயலாமற்போன கணவனுக்குப் பணிவிடை செய்பவளும் தன்வீட்டில் அப்பக் கடையொன்றினை அதிநேர்மையுடன் நடத்தி அதன் வருவாயையே தனது சீவாதாரமாகக் கொண்டவளும் அத்தெருவோரமாயிருந்த ஒரு கூப்பிட்டெல்லைச் சதுரமுடையதும் நான்கு படித்துறையுடையதும் கரையிலே சந்தியாமடமுடையதுமானதோர் குளக்கரையோரம் நின்ற குருந்தமரநிழலில் சிவலிங்கசொரூபியாய் வீற்றிருக்கும் சோமசுந்தரக் கடவுளை அன்பினாலே அருந்துவிப்பவளுமாகிய செந்தியென்ற நாமம்கொண்ட மங்கையொருத்தியிருந்தாள்.

செந்தி அருட்பாடல்களினாலும் அழகினாலுந் தெய்வப் பெண்களுக்குச் சமமானவள். நல்லொழுக்கத்தினாலோ அவர்களுக்கு மேலானவள். அவள் நாடோறும் கணவனோடு சூரியோதயத்துக்கு முன்னெழுந்து ஸ்நானஞ் செய்து சந்தியாவந்தனம் முடித்துக்கொண்டு சோமசுந்தர மூர்த்தி சிவலிங்கசொரூபமாய் எழுந்தருளியிருக்கும் குருந்தமரத்தடித் திண்ணையைச் சிவனுறையும் சிதம்பரமாகவே கருதி உளவாரப்படைத் திருந்தொண்டு செய்தும் ஏனைய அபிஷேகங்களை முறைப்படி இயற்றியும் சிவலிங்கப் பெருமானின் திருக்கோயிலைத் திருவலகிடுதலும் திருமெழுக்கிடுதலும் திருநந்தவனப் பணிசெய்தலும் புட்பங் கொய்து திருமாலை கட்டிச் சாத்துதலும் சுகந்த தூபமிடுதலும் திருவிளக்கேற்றலும் சிவதோத்திரஞ் சொல்லலும் சிவபிரானது புகழைக் கேட்டலுமாகிய திருத்தொண்டுகளைச் செய்தும் சிவனடியார்களைத் திருவமுது செய்வித்தும் வாழ்ந்துவந்தனள். இதுவே அவளது நியமம்.

சிவலிங்க பூஜையின் மகத்துவம் சிறிதும் அறியாத பெண்ணாயிருந்தபோதும் அவள் அன்றாடம் கண்ணும் கருத்துமாகச் செய்துவந்த திருத்தொண்டுகளை அவ்வூர் சனங்கள் பெரிதும் வியந்து போற்றிவந்தனர். காலக்கிரமத்தில் அக்குருந்தமரத்தடிச் சிவலிங்கமூர்த்தியின் உறைவிடமே அவ்வூர்ச் சனங்களின் திருத்தலமாயிற்று.

செந்தியும் அவள் கணவனாகப்பட்ட அத்தனும் சில வருஷங்களுக்கு முன்னர் எவ்வாறு காதல் வயப்பட்டு விவாகம் செய்துகொண்டார்கள் என்ற வரலாற்றை அவ்வூர்ச் சனங்கள் தமக்குள் அடிக்கடி பேசிப் பெருமைப்படுவதுண்டு. அவ்வூரிலே வேளாண்மையையே தமது சீவனோபாயமாகக் கொண்டிருந்த செந்தியின் அப்பனும் அம்மையும் பேதும்பைப் பருவமடைந்த தமது மகளான செந்தியின் பேரழகையும் கண்டு மகிழ்ந்தாராயினும் அவளின் ஷேமலாபங்களைப் பேணிப் பாதுகாக்கப் பெரிதும் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தார்கள்.

அஞ்ஞான்று கொடுங்கோலனான ரஜதேவேந்திரன் தனது பிரசைகளைக் கிள்ளுக் கீரையென எண்ணி அவர்கள் நலன்களைப் புறக்கணித்துவந்தான். அவன் தன் ஆளுமைக்குட்பட்ட நிலங்களோடு அவ்வூர்ச் சனங்களின் விவசாய நிலங்களையும் தனது சேனைப்படைகளின் பாதுகாப்புப் பிரதேசமாக்கவெண்ணித் தன்னாட்சிக்குட்படுத்தத் தலைப்பட்டான். அதுமட்டுமன்றிப் பழம்குடியிருப்பிலும் அதன் அண்மையிலிருந்த சிற்றூர்களிலும் சனங்களின் விருப்பத்திற்கெதிராகத் தனது இனத்தின் பாஷையையும் பௌத்தத்தையும் பரப்பச் சங்கல்பம்கொண்டு அவர்களுக்கு இடையறாத இன்னல்களைக்கொடுத்துவந்தான்.

ரஜதேவேந்திரனின் இந்த ஆக்ஞைக்கெதிரானவர்களெனக் கருதிய சனங்கள்மீதும் இளம் பராயத்தினர்மீதும் தனது ஈவிரக்கமற்ற சேனைப்படையினரை ஏவி அட்டூழியங்கள் பல புரிந்து பழங்குடியிருப்பைச் சுற்றியிருந்த இயற்கை வளன் மிக்க நிலமத்தைனையையும் புதை குழிகளாகவும் மயான பூமியாகவும் மாற்றத்தலைப்பட்டான். இவ்வாறாக வந்திக்கடலோரம் தாமுண்டு தம் தொழிலுண்டுவெனச் சீவகம் புரிந்துவந்த சனங்கள் சொல்லொணாத்துயரில் ஆழ்ந்தார்கள்.

அக்காலத்தில் வனப்பிரதேசமெங்கும் வல்லூறுகள் போல் அலைந்த அரசனுடைய சேனைப் படைகளின் காமப் பார்வையிலிருந்து தம் மகளைக் காப்பதில் செந்தியின் அப்பனும் அம்மையும் பட்ட அல்லல்களும் அவதிகளும் கணக்கிலடங்கா. அந்தவொரு தினத்தில் காட்டு நரிகள் ஓலமிடும் பின்னிரவில் யாரோ தம் வீட்டுக்கதவைத்தட்டிப் பெருங்குரலெடுத்து அழைத்ததையுணர்ந்து வேர்த்து விதிர்த்துப்போன செந்தியும் அவளின் அப்பனும் அம்மையும் தம்மை அவ்வேளை பாதுகாக்கத் துணிந்தாரேனும் பலாத்காரமாய்க் கதவை உடைத்துத் திறந்து கண்களில் கோபாக்கினி பறக்க உள் நுழைந்த சேனைப் படையினரைக்கண்டு திடுக்கிட்டுத் திகிலடைந்தனர். செந்தியின் அப்பனும் அம்மையும் அவளை அவர்களின் பார்வையில் படாதவாறு மறைத்தபடி அவர்கள் முன் உயிருக்கு மன்றாடுவோர்போல் எண்சாண் உடம்பும் ஒரு சாணாகி நின்றார்கள். அச்சம் காரணத்தால் அவர்களிடமிருந்து எந்தவொரு சொல்லும் எழவில்லை. கிரகத்தினுள்ளே நுழைந்த கும்பலில் சேனைத் தலைவனாகக் காணப்பட்டவன் சிங்கம் உறுமதுவதுபோன்று உறுமி அரசனுக்கெதிராகச் சதிசெய்வோரைத் தேடிவந்தோமென்று கூறியதும் அப்படி எவருமிங்கில்லையென செந்தியின் அப்பன் உத்தரமளித்ததும் அதனை நம்பாதவர்களாய் வீடு முழுவதும் இளவயதுடைய ஆண்மக்களைத் தேடி ஏமாற்றமடைந்து அவர்களகன்றார்கள். ஆயினும் அந்தக்கூட்டத்தில் கடைநிலைச் சேவகர்கள்போல் தோன்றிய இருவர் வீட்டின் பின் சுவரோரமாக ஒதுங்கி நின்ற செந்தியின்மேல் எல்லையின்று வளர்ந்த காமத்தால் விழுங்கப்பட்டு அவளையே விறைத்து நோக்கியவாறு அவ்விடத்தை விட்டகல விருப்பமின்றி வாசலில் தனித்து நின்றார்கள். இதனை அவதானித்த சேனைத் தலைவனாகப்பட்டவன் திரும்பிவந்து அவர்கள் இருவரையும் தமது பாஷையில் தூசித்துப் பெண்களைப் பாதுகாப்பது சேனைப் படையினரின் கடமையெனப் போதித்து அந்த வீட்டருகே அவர்களினித் தலைகாட்டுதலாகாதெனக் கட்டளையிட்டதும் யாவரும் அவ்விடத்தை விட்டகன்றார்கள்.

இது நிகழ்ந்து இரண்டு சாமங்கள் கழிந்தன. செந்தியும் பெற்றாரும் மனக்கிலேசத்துடன் தமக்குப் பாதுகாப்பாக உற்றார்களைத் துணைக்கு வைத்துக்கொள்ளவும் இயலாமல் வீட்டில் தனித்திருந்தார்கள். அதற்கு அடுத்த நாட்சாமத்தில் ஆயுததாரிகளாய் வீட்டினுள் நுழைந்த அந்தவிரு கடைநிலைச் சேவகர்கள் செந்தியைத் தம்முடன் கவர்ந்து செல்ல எத்தனித்த வேளையில் அவர்களைத் தடுத்து நிறுத்த முற்பட்ட பெற்றாரை கருணையேதுமின்றிக் கொன்றொழிக்கவும் முயன்றனர். அவ்வேளை எவரும் எதிர்பாராத வகையில் அவர்கள்முன் தோன்றிய அவர்களின் சேனைத்தலைவன் செந்தியை அவர்களின் பிடியிலிருந்து மீட்டதோடல்லாமல் அக்கடை நிலைச் சேவர்களைத் துவம்சம் செய்து யமலோகத்துக்கு அனுப்பினான். அன்றிலிருந்து அத்தபத்து என நாமமுள்ள அச்சேனைத் தலைவன் செந்தியின்மீதும் பெற்றார்கள்மீதும் இரக்கமேற்பட்டு அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பதையே தனது கருமமாகக்கொண்டான். நாட்கள் செல்லச்செல்ல செந்தியின் நல்லொழுக்கத்தையும் சிவபக்தியையும் நேரிலே கண்டும் கேட்டும் பெரும் ஆனந்தத்தில் மூழ்கினான். ஆயினும் செந்தியைப் போன்றொரு தமிழ்ப் பெண்ணைப் புத்தசமயத்தவனும் வேற்றினத்தவனுமாகிய அச்சேனைத் தலைவன் விரும்பி விவாகம் செய்துகொள்ளல் தகுமோவென்று அறியாதவனாய் அவளின் மனக்கிடக்கையை அறிந்துகொள்ளும் ஆவல்வயப்பட்டவனாய் அதற்கொரு நாளைக் காத்திருந்தான்.

அத்தபத்து நீதி, மெய்ம்மை, இறைபக்தி, சீவகாருண்ணியம், கொடை, கல்வி முதலிய குணங்களை உடையவனென்பதைப் காலப்போக்கில் நன்கறிந்துகொண்ட செந்தியும் அவன்மீது காதல்கொண்டவளாகி அவன் தன்னைக் காணவரும் நாட்களில் இருவருமாய்ச் சோமசுந்தரக் கடவுள் எழுந்தருளியிருக்கும் திண்ணையில்வந்தமர்ந்து தமது எல்லையற்ற அன்பைப் பகிர்ந்துகொண்டார்கள்.

ஒரு நாள் அத்தபத்து செந்திலை அழைத்து இவ்வாறு சொல்வானாயினன், அன்பும் அறிவும் உருவான நங்கையே, நீ பாதுகாப்பாய் இருக்கிறாயென நான் அறியும் ஒவ்வொரு கணமும் நான் என் கடமையைப் பொறுப்புடன் செய்கிறேனென எண்ணிக்கொள்வேன். அதுமட்டுமன்றி நீ என்னை உன் மனதிருத்திப் போற்றுகிறாயென்பதையும் அறிவேன். அதுபோன்றே நானும் உன்மீதுற்ற காதலால் பேருவகையடைகிறேன். எனது கடமைக்காலம் முடிந்ததும் உன்னை வந்து காண்பேன். என்னை உனது கணவனாக ஏற்கச் சம்மதிப்பாயாயின் உனது ஆக்ஞைப்படியே உனது கரம் பற்றிக் குடும்பமாய்வாழ வழிவகுப்பேன் என்று உறுதிகூறி அவ்விடம் விட்டகன்றான்.

அத்தபத்து தன்கடமை நிமித்தம் அவ்வூரைவிட்டுச்சென்று மூன்றாண்டுள் கழிந்தும் செந்தியிடம் மீண்டும் வந்திலன். இதேகாலத்தில் விதிப்பயனாகச் செந்தியின் தாய் தந்தையர் ஒவ்வொருவராய் மரணிக்க அவள் அன்றிலிருந்து தான் காதல் வயப்பட்ட அத்தபத்து என்ற சேனைத்தலைவனைத் தன் விருப்பத்திற்கிணங்க அத்தன் என்ற பெயரில் தன் மனதிலிருத்தி அவனையே கண்கண்டதெய்வமாகக் கருதி அவன் வரவை வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள்.

அத்தன் மீண்டு வந்து சேரும் நன்னாளும் செந்தி செய்த பூர்வபுண்ணியத்தின் பயனாய்க் கிட்டியது. ஆயினும் இளம்வயதுடைய அத்தன் போரொன்றில் ஈடுபட்டபோது ஏற்பட்ட காயத்தால் ஒரு கால் இழந்தவனாய் செந்தியிடம் வந்து நின்றபோது அவனின் உடல் ஊனத்தைப் பெரிதுபடுத்தாமல் அவன்மீது தான்கொண்ட காதலையே பெரிதாகக் கருதி அவனைத் தன் கணவனாக வரித்துக்கொண்டாள். ஊர்மக்களின் வாழ்த்தொலியுடன் அவர்களிருவரின் விவாகம் குருந்த மரத்தடியில் எழுந்தருளானின்ற சிவலிங்கமூர்த்தியின் முன்பாக இனிதே நிறைவேறியது. அன்றிலிருந்து செந்தியும் அத்தனும் இருமனமொத்த தம்பதியராயும் இருமைக்குந் துணையாய் ஒழுகி வாழ்ந்துவந்தனர்.

இஃதிவ்வாறிருக்க, தனதுபிரசைகளிடத்தே இரக்கமின்மையும் அரசாட்சியின்மீது போராசையும்கொண்ட கொடுங்கோலனான ரஜதேவேந்திரன் தனது சேனைப்படைகளின் துணைக்கொண்டு வந்திக்கடலோரம் வாழ்ந்த மக்களை மீண்டும் வஞ்சிக்க ஆரம்பித்தான். காலம் காலமாக விவசாயத்தையே வாழ்க்கையின் வாழ்வாதாரமாகக் கொண்டுவாழ்ந்த அவ்வூர்ச் சனங்களின் நிலங்களையும் வீடுகளையும் தனது சேனை விஸ்தரிப்புப்பணியின் நோக்கத்துக்காகத் தன்வசப்படுத்த முனைந்த அரசனின் ஆஞ்ஞையைச் சிரமேற்கொண்டு ஆயுததாரிகளான சேனைப்படையினர் அவ்வூர் மக்களை உடனடியாக அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேறக் கட்டளை பிறப்பித்தனர். அதனை அறிந்ததும் அவ்வூர்ச் சனங்கள் அவனின் ஆஞ்ஞைக்கெதிராகப் பேசவோ தமது அதிருப்தியைக் காட்டவோ தைரியமின்றி இனித் தமக்கு என்ன நடக்குமோவென அஞ்சியவர்களாய் வாளாதிருந்தார்கள். செந்தியின் வீடும் தெருவோரமாகக் குருந்தமரநிழலில் பள்ளிகொண்டருளிய சிவலிங்கமூர்த்தியின் தலமும் அரசனின் கட்டளைக்குட்பட்ட நிலங்களெனச் சேனைப்படையினர் அறிவித்த காரணத்தால் செந்தியும் அத்தனும் தமதுயிருக்கு இன்னல் நேரிடினும் அரசனின் இந்த நீதியற்ற செயலுக்கு இணங்காதிருப்பதெனத் தீர்மானித்தனர். சிவபெருமான்மீது தாம் கொண்ட பக்தியின் நிமித்தம் அவரொருவரே தமக்குத் தீங்கு நேரிடும்போது தோன்றாத்துணையாய் உதவக்கூடியவரென நம்பிக்கைகொண்டு தொடர்ந்து சிவனை வேண்டுதல்செய்வதில் அக்கறையாயிருந்தனர்.

உண்மையறிவானந்த வடிவாகிய சொக்கலிங்கமூர்த்தி ஆதிகாலத்திலே பற்பல திருவிளையாடல்களைத் திருவுளத்தடைத்து சகல லோகங்களிலும் சஞ்சாரம் செய்து ஆன்மாக்கள் ஈடேறும்பொருட்டுத் தம்மடியார்மேல் திருக்கடைக்கண் சாத்தியருளினார் என்பது புராணவரலாறு. கலியுகத்திலும் அவ்வாறு இயற்றுதல் இயல்போவெனத் தம்மடியார்களுக்குச் சந்தேகம் ஏற்பட இடமுள்ளதென அவரின் பேருள்ளத்தில் ஒருகால் தோன்றியபோது இன்னொரு புதிய திருவிளையாடலைப் புரிந்து இன்றும் தம்மீது மாறாப் பெருமன்பு வைத்திருக்கும் அடியார்க்கு வழிகாட்டத் திருவுளங்கொண்டார்.

உயிர்களிடத்துள்ள பெருங்கருணையினாலே அறுபத்து நான்கு திருவிளையாடல்களைச் செய்தருளிய சிவலிங்கமூர்த்திக்கு ஒப்பும் உயர்வும் மூவுலகத்திலும் இல்லை. மலைகளுக்குள்ளே மகாமேருவும் தருக்களுள்ளே தேவதாருவும் தானங்களுக்குள்ளே அன்னதானமும் மனிதர்களுக்குள்ளே தருமம் செய்வோரும் இரத்தினங்களுக்குள்ளே சிந்தாமணியும் மூர்த்திகளுக்குள்ளே சோமசுந்தர மூர்த்தியும் மேலாகும். தோற்றமும் நடுவும் இறுதியுமின்றி அகண்ட பரிபூரணமாய் உயிர்களுக்குப் பந்தத்தையும் முத்தியையும் கொடுத்தருளும் சிவபெருமான் தம்மை வழிபடுவோருக்கு இச்சொக்கலிங்கத்திலே எந்நாளும் சாந்நித்தியராய் இருப்பார். அவர்கள் இடுக்கண்வருங்கால் கூப்பிட்டபோது உடன்வந்து உதவுவார்.

கணவன் மனிவியரான அத்தனும் செந்தியும் தம்மீது கொண்டுள்ள பக்தியைச் சோதிக்கத் திருவுளங்கொண்ட சோமசுந்தரக்கடவுள் ஒரு நாட்காலை முழங்காலளவுக்குக் கந்தலாகித் தொங்கும் நரைத்த பழம்துண்டும் பவழத் திருமேனியெங்கும் விபூதிப் பூச்சும் கீதம் பாடும் கனிவாயும் திருப்புன்முறுவலும் கிங்கிணி பொருந்திய திருவடிகளும் திருவடிகளிற் சிதைந்தறுந்த பாதுகைகளும் உடைய மிகச் சாதுவான கூலியாள் போன்ற வடிவம் உடையராகி அந்தத் தெருவோரத்து மருதமரத்தடிக்கு எழுந்தருளினார். அவரின் திருச்சிலம்பொலியுங் கீதவொலியுந் தருமகவொலியுஞ் செவிவாய் மடுத்தவுடனே வீட்டினுள்ளே நிலத்திலமர்ந்து தன் கணவனுக்குக் காலையுணவைப் பரிமாறிக்கொண்டிருந்த செந்தியும் பசியோடிருந்த அத்தனும் வீட்டின் முன்புறத்து விரைந்து வந்தார்கள். வந்தவுடனே கூலியாளாய் வந்தவரின் கோலத்தைக் கண்டு இவர் இந்தக் காலைவேளை நம்மைப்போல் பசியோடு வந்திருப்பாரோவென ஐயுற்று அன்று தமக்கெனச் சுட்ட அப்பத்தையும் பதார்த்தங்களையும் இவருக்கும் பரிந்து கொடுத்துண்ணலாம் என்ற எண்ணத்துடன் அழைத்தனர்.

அவர்கள் அங்ஙனம் அழைத்த அக்கணமே விரைந்து வந்து அவர்களை வணங்கியெழுந்த கூலியாள் வடிவினரான சோமசுந்தரக்கடவுள் அழுக்குப் பொருந்திய பழையவஸ்திரமொன்றை அரையிற் சுற்றித் திருமுடிமேல் வைத்த சும்மாட்டிற் கூடையைக் கவிழ்த்து, திருத்தோளில் மண்வெட்டியை வைத்துக்கொண்டு மிக்க பசியுடையார்போல முன் வந்து எனது அம்மையும் அப்பனும் போன்று அவதரித்தவர்களே “கூலி கொடுத்து என் வேலை கொள்வா ருண்டோ?” என்று கூவினார்.

தாயை நோக்கி வருங் குழந்தையைப்போலத் தம்மை நோக்கி வந்த அக்கூலியாளைச் செந்தியும் அத்தனும் ஐயன்மீர், எமது இடுக்கண்ணை எப்படி உங்களுக்குச் சொல்வோம். பஞ்சம் பிழைப்பதே இப்பொல்லாத காலத்தில் இயலாதிருக்கிறது. ஆயினும் வீடு தேடி வந்து இரப்பவர்க்கு உணவு கொடுத்து அவர்களின் பசியை ஆற்றுவதையே நமக்கு எல்லாம் வல்ல சிவபெருமான் பணித்த பணியென்றிருந்தோம். அதற்கும் சோதனை வந்துவிட்டதேயெனக் கலங்குகிறோம். அரசன் தண்டிக்கப்போகின்றான், நாயகனோ இயலாதவன், நாமோ ஏகுமிடமற்று இக்குடிலிலேயே வாசம்செய்து சிவனடியார்களாகவே என்றுமிருக்க விரும்பினோம். அவ்வாறாய அடியார்க்கு இத்துன்பம் வருவதோ என மழைபோலக் கண்ணீர் சொரிய அழுதாள்.

பேரழகுடைய பெண்ணே, அப்படியென்ன உங்களுக்கு வியாகூலம் நேர்ந்ததென அவர் வினவவும்,

உம்மைப்போன்று இளம் வயதும் திடகாத்திரமான உடலுமுள்ள ஒருவரைச் செய்யும்படியாய்த் தருவதற்கு எம்மிடம் வேலை எதுவும் இல்லையேயென எப்படிச் சொல்வோம். நாமே எமது இல்லத்தில் வாழ வகையற்றவர்களாகப் போனோம். பல வருஷங்களாக எமக்கு உறைவிடமாகவிருந்த இந்தக் குடிலும் எமக்கு வாழ்வாதாரமான இந்நிலமும் இனி அரசனின் சொத்து என்று சொல்லிப் படைச் சேவகர்கள் பிடுங்க வந்துள்ளார்களே. நாமென்ன இனிச் செய்வதெனத் தடுமாறியபோதில் உனையன்றி வேறொரு அடைக்கலமுண்டோவென அதோ எங்கள் முன்னாலுள்ள அந்தக் குருந்தமர நிழலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தர மூர்த்தியிடம் வந்து “எம்பெருமானே! அடியேம் ஒருபோதும் உம்மை மறவாது வழிபழி அடிமை செய்யு மியல்பினோம். நீர் அருளிச்செய்த நூல்வழியே முறைசெய்து வருவோம். இவ்வூரையும் சனங்களையும் அழிக்கவெண்ணிய பௌத்தர்கள் விடுத்த சருப்பம் வருகின்றது, தமியேமுக்குக் கருணை செய்தருளுமென்று சோமசுந்தரக்கடவுளை அன்றாடம் வேண்டி நிற்பதைத் தவிர வேறேதேனும் செய்ய வகையறியாது தடுமாறி நிற்கிறோம் என அழுத கண்ணும் சிந்திய மூக்குமாகத் தமது இயலாமையைச் சொன்ன செந்தியைக் கூலிவேலையாள்போல் வந்த சோமசுந்தரமூர்த்தி கருணையுடன் நோக்கி இவ்வாறு கூறலானார்,

வீடுதேடி வந்து இரப்போர்க்கு இல்லையென்னாது ஈய்ந்துவரும் உங்களைப் போன்ற சிவநேயச் செல்வர்களுக்குக் கேடுவர யாரேனும் நினைப்பரோ? சொமசுந்தரக் கடவுளுடைய திருமுடியிலே ஒரு மலர் சாத்தினவர் மற்றைத் தலங்களிலுள்ள சிவலிங்க மூர்த்திகளை நூறு பொன் மலராலே பூசித்த பயனைப் பெறுவர். அவரின் சந்நிதியில் நிருத்தமும் கீதமும் வாத்தியவொலியும் செய்வித்தவர் அசுரர்களாயிருப்பினும் மூவுலகத்தோரும் வணங்கும்படியாக வாழ்வர். ஆதலால் சிவனடியார்களாகிய உங்களுக்கு ஏற்பட்ட இன்னலை சிவனடியானான என்னால் இயன்றவரை தீர்த்து உங்களைக் கண்ணுக்குள் வைத்துக் காப்பேன். நீங்கள் பூசிக்கும் சிவனையும் அவனுறையும் இத்திருக்கோயிலையும் உங்கள் வாழ்விடங்களையும் காக்கும் பணியை எனக்குத் தருதல்வேண்டும். நீங்கள் தரும் கூலிக்கு வஞ்சகமில்லாமல நானுழைப்பேன், நீங்கள் கவலைகொள்ளா தொழிமிங்கள் என்று திருவாய்மலந்தருளினார். அன்றிலிருந்து செந்தியும் அத்தனும் பணிக்கும் சிற்றூழியங்களைச் சிறப்புறச் செய்து அவர்கள் தரும் அப்பத்தைக் கூலியாகப்பெற்று அதையே பூர்வபுண்ணியமாகக் கருதினாற்போல் சொக்கலிங்கமூர்த்தி அவர்களுக்குப் பாதுகாப்பாயிருந்தார்.

அன்றொரு நாட் காலை சேனைப் படையினர் பெரும் கோஷமெழுப்பி வந்து ஊரிலுள்ள அனைத்துச் சனங்களும் தம்மிடத்தை விட்டேகக் காலம் வந்ததென அறிவித்ததோடு வயல்களை எரித்து, ஊரினுள்ளே புகுந்து வீடுகளை அழித்தனர். அதுகண்ட சனங்களெல்லாம் மைந்தரை எடுப்பாரும் மைந்தரைக் காணாது அலமந்து அழுவாரும் மனைவியாரைக் கைப்பற்றிக்கொண்டு பிழைப்பாரும் எங்கே போவோமென்று எண்ணுவாரும், திகைப்பாரும் பொருட்களை எடுத்துப் பேணுவாரும் அவற்றை மறப்பாரும் விதியே இதற்குக் காரணமென்பாரும் அரசனின் செங்கோல் பிழைத்ததென்பாரும் ஊழிக்காலம் அண்மித்ததேயென அழுவாருமாக நிலைகுலைந்தனர். அதனையறிந்த செந்தியும் அத்தனும் இடியேறு கேட்ட நாகம்போல் விதிர்விதிர்த்து சோமலிங்கமூர்த்தியை மருதமர நிழலிலிருந்து அகற்ற இடமளியோமென்று அறைகூவல் விடுத்து அவரைச்சுற்றியே அன்னாகாரமின்றி அமர்ந்திருந்தனர். இதனையறிந்த சேனைத் தலைவன் அங்கே வந்து செந்தியையும் அத்தனையும் அங்கிருந்து உடனே வெளியேறும்படியும் இல்லையேல் அவர்களிருவரும் அவ்விடத்திலேயே கொல்லப்படுவார்களென்றும் அறிவித்தான். ஆயினும் சேனைத் தலைவனின் கட்டளைக்குக்கீழ்ப்படிய மறுத்த செந்தியையும் அத்தனையும் அங்கிருந்து பலாத்காரமாக அகற்றித்தெருவில் வீசியெறிந்தான்.

சோமலிங்கமூர்த்தி சிவலிங்கசொரூபியாக எழுந்தருளியிருந்த திண்ணையைக் காலன்போல் வந்து உதைத்த சேனைத்தலைவன் அத்திண்ணையைப் பெயர்த்தெறியும்படி தன் படையினர்க்குக் கட்டளையிட்டனன். அடுத்தகணம் பேராரவாரத்துடன் திரண்டுவந்த படையினர் திண்ணையை உடைக்க முயன்றபோது செந்தி ஓடிவந்து குறுக்கே நின்றுகொண்டாள். நாம் வணங்கும் சிவலிங்கமூர்த்தியை இங்கிருந்து அகற்ற எவருக்கும் உரித்தில்லையென்று அவள் உரத்து ஒலியெழுப்பி ஆரவாரித்தாள். அப்போது அவளைப் பெண்ணென்றும் பாராமல் சேனைப் படையினர் மீண்டும் இழுத்துத் தெருவில் வீசினர்.

செந்தியும் அத்தனும் செய்வதறியாது சிவபிரானை வேண்டினர். “எம்பெருமானே! எம்பெருமானே! யாம் யாதுபிழை செய்தோம்? மகாமேரு மலையிலோ, மெய்யடியாரது நெஞ்சத்திலோ, வேதசிரசிலோ, எங்கேசென்றீர்? எங்கே சென்றீர்? இந்த உன்மத்தர்கள் உம் திருக்கோயிலை உடைத்து உமை இகழ நாம் பார்த்திருப்பதோ? கருணைகூர்ந்து எம் சிவலிங்கமூர்த்தியாய் நீவிர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலைக் காத்தருளும்.” என்று கண்ணீர் பெருக வேண்டி நின்றனர்.

தோற்றமும் நடுவும் இறுதியுமின்றி அகண்ட பரிபூரணமாய் உயிர்களுக்குப் பந்தத்தையும் முத்தியையுங் கொடுத்தருளும் சிவபெருமான் தம்மை வழிபடுவோருக்கு இடுக்கண் வரும் காலத்தில் விரைந்துவந்து அருள்புரிவாரன்றோ. அப்போது நடப்பவற்றை அவதானித்தவாறு ஒதுங்கி வேலையாள் உருவத்தில் நின்ற சோமசுந்தரக் கடவுள் சேனைப் படையினரைப் பார்த்து இந்தப் பெண்ணுக்கு இவ்வாறு இடையூறும் இன்னலும் கொடுப்பீர்களாயின் இது இன்று உங்கள் அரசனுக்கே தீங்காய் முடியுமென எச்சரித்தார். அவரைக்கண்டு எள்ளி நகையாடிய படையினர் அவரை இழுத்துச் சென்று மருதமரத்தோடு கட்டிவைத்துவிட்டு மீண்டும் சிவலிங்கமூர்த்தி கோயில்கொண்டருளிய திண்ணையை இடித்துச் சிவலிங்கத்தை ஆயுதங்களால் புரட்டி விழுத்த எத்தனித்தனர். அப்போது அத்திண்ணையில் திடீரெனத் தோன்றிய அக்கினிப் பிழம்பைக்கண்டதும் அனைவரும் திகில்கொண்டு அங்கிருந்து ஓடலாயினர். அடுத்த கணம் மருதமரத்தில் கட்டப்பட்டிருந்த சிவனார் மாயமாய் மறைந்துபோனார். இதுவென்ன அதிசயமென செந்தியும் அத்தனும் இஃதொரற்புதம்! இம்மாயையைச் செய்ய வல்லவர் இச்சிவலிங்க மூர்த்தியேயன்றி வேறு யார் என்று அரற்றி ஆனந்த வெள்ளத்தில் அழுந்தினர். எம்பெருமானே! உம்திருவுளம் யாது? எல்லார்குந் தந்தையும் தாயுமாகிய சுவாமீ, நீரே அடியேங்களுக்குத் தந்தையும் தாயும் ஆவீர். அங்ஙனமிருக்க எம்மை ஆட்கொள்ள நீவிர் வேலையாள் வேடம் பூணல் தகுமோ என்று அவர்கள் தம்மை அருள்பாலிக்கவந்த சிவலிங்க மூர்த்தியைத் துதித்துவேண்டினர். அவ்வேளை அவர்கள் முன்னே சிவபெருமான் ஞானப்பேரொளி வடிவாய்த் தோன்றி, பூதகணங்கள் மொந்தையும் தண்மையும் முழங்க, திருநந்திதேவர் முழவம் தாக்க, விட்டிணு இடக்கை யார்க்க, தும்புரு நாரதர் இசை பாட, பஞ்ச துந்துபிகள் ஒலிக்க பிரமா யாழ்கொண்டு சாமகீதம் பாட, தேவர்கள் பற்பகப் பூமாரி பெய்ய சங்கக் குண்டலம் அணிந்த திருச்செவியும், சந்திர கலையும், கங்கையும் தரித்த செஞ்சடையும், திருவெண்ணீறணிந்த திருமேனியும், மூன்றுதிருக்கண்களும், திருநகையும் விளங்க நிருத்தஞ் செய்தருளினார்.

செந்தியும் அத்தனும் அளவில்லாத சிவானந்தம் ஊறி, கண்ணீருண் மூழ்கிப் பெருமகிழ்ச்சியுற்று, இருகைகளும் குவித்து எமையாட்கொள்ளவந்தவரே உங்கள் திருவிளையாடலை யார்தாம் அறிவர், எம்பெருமானே, எமக்கு மட்டுமல்ல இங்கு வாழும் இன்னலுற்ற அத்தனை உயிர்களுக்கும் அருள்வாய். என்றும் யாம் உம்மை வழிபட்டு எம்கடன் செய்யும்வகையில் எம்மை உய்விப்பாயெனத் துதித்து வணங்கினர். அதற்கு சோமசுந்தரக் கடவுளானவர் குழந்தைகளே அந்தத் துர்க்குணமுள்ள அரசனுக்கு இதோ சென்று பாடம் புகட்டுவேன். இனிக் கவலையற்று வாழ்வீர்களாக என்று திருவாய்மலர்ந்து மறைந்தருளினார்.

அதே வேளையில், ஆரிய வழித்தோன்றல் ரஜதேவேந்திரன் எனுமந்தக் கொடுங்கோலன் பூலோக சுவர்க்கத்திலே, மந்தார நிழலிலே,தாமரைமன்று என்னும் அரசசபையிலே, முப்பத்துமுக்கோடி பிரசைகளும் சேவிப்ப, இரத்தினச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, தென்திசைக் குமரிகளுடைய நிருத்தத்தையும் கீதத்தையும் கண்ணுற்றும் செவிமடுத்தும் களிப்பாகிய கடலிலே மூழ்கியிருந்தான். தன்னைவிட அதிகாரப் பேறுடையோர் இப்பூவலகில் எவருமிலர் என்னும் இறுமாப்புடன் மனைவி மக்களும் உடன் பிறந்தோரும் புடைசூழ அவன் அமர்ந்திருத்த வேளையில்,

சிவபெருமான், தேவகுருவுக்குத் தேவகுருபோன்று திருவுருக்கொண்டு திருச்செவிகளிலே இரத்தின குண்டலங்களும் திருமார்பிலே கண்டிகையும் பிரகாசிக்க மோதிரம் இட்ட திருக்கரத்தை வீசிச் சிங்கேறுபோலப் பெருமிதத்தோடு நடந்து, “இங்கே அரசன் இல்லையோ? பெரியோர்கள் இல்லையோ? அரசன் செங்கோல் கொடுங்கோலாயிற்றோ? தெய்வமும் இல்லையோ? தருமம் ஒழித்ததோ?” என்று பெருங்குரலெழுப்பிக்கொண்டு கொடுங்கோலனின் அரச சபையை அடைந்தார்.

ஆயிரத்தெட்டுச் சூரியப்பிரகாசம் கொண்ட முகத்துடன் திடீரெனத் தன்முன் தோன்றிய தேவகுரு போன்றவரைக்கண்டு ரஜதேவேந்திரன் திடுக்கிட்டானாயினும் தன்னை ஒருவாறு தேற்றி எழுந்து நின்றுகொண்டான். அவ்வேளை அருகிலிருந்த அவனின் இளவல் கண்கள் சிவந்து தீப்பொறி சிந்தக் கோபாவேசத்தனாகி, என்னே மடத்தனம்செய்தனை. இவன் தமிழனென்று தெரிந்தும் நீ எழுந்து நின்று மதிப்பளிப்பதோ? எமதுமூதாதையர்களான தேவதீசர்களின் பராக்கிரமத்தை மறந்தனையோ என்று நிலமதிரும்படி வினாவினான்.

இது கேட்ட தேவகுருபோன்ற சிவபெருமான், குறுமதிகொண்ட தனையனே, ஜய வருஷத்து மார்கழி மாசத்தின் இருபத்தினாலாவதான இன்றைய தினத்தில் உனக்கும் உனதண்ணனுக்கும் உன்மத்தம் கொண்ட உன் குடும்பத்தினருக்கும் நீவீரே யமனாய் வந்து உமது அக்கிரமத்துக்கும் நீதி பிறழ்ந்த அரசாட்சிக்கும் ஒரு முடிவைத் தேடிக்கொள்வீர்கள் என்று எழுதப்பட்டுள்ள உங்கள் விதியை அறியாதிருக்கிறீர்களா? அறிவற்ற அரசனே, உன் பிரசைகளைக் காப்பதை விடுத்து உன்னையும் உன் குடும்பத்தாரையும் மட்டுமே காத்து இந்த அரியாசனத்தை இன்னமும் அலங்கரிக்கலாமென நினைத்தாயோ, அற்ப மானிடனே என அறைகூவல் விடுத்தார்.

அச்சொல் அக்கினியிற் காய்ச்சிய வேல்போலத் தன் செவியிற் புகுதலும் அரசன் சிம்மாசனத்தின் மீதிருந்து தூக்கி எறியப்பட்டுத் தரையில் விழுந்து அரற்றி, உயிர் ஒடுங்கி, அறிவொடுங்கிச் சிறிது பொழுது கிடந்து அறிவு சிறிதுவர எழுந்து இரண்டு கைகளையுஞ் சிரமீது கூப்பி, அழுது, கண்ணீர் வெள்ளத்தாழ்ந்து நின்றான். அவனைச் சுற்றியிருந்தோரும் “யானும் விழுந்தேன், யானும் விழுந்தேன்” என அரற்றினர். அப்போது சோமசுந்தரக்கடவுள் “மண்ணாசையும் பொருளாசையும் கொண்டு அதர்மம் தளைக்க அரசுசெய்தவனே, இந்த நாட்டின் செல்வங்களையும் மக்களின் செல்வங்களையும் உனக்குரியதாக்கிக்கொண்டாய், உன் பிரசைகளுக்கு நீயே எமனாகிக்கொண்டாய். இனியுன் கொடுங்கோல் நீடிக்க அனுமதியேன் உன்னைத் தண்டிக்கும் காலம் அண்மியது என்றுரைத்தார். அதற்கு ரஜதேவேந்திரன் சுவாமீ! தெய்வங்களையும் மனிதரையும் மதிக்காது நேற்றுவரை அறிவற்ற மூடனாக அரசாட்சிசெய்துவிட்டேன். அடியேன் செய்த பிழையைப் பொறுத்து என்னை மன்னித்தருளும் என்று விண்ணப்பஞ் செய்து தேவகுருவின் திருவடியில் வீழ்ந்தான்.

அதற்குச் சிவபெருமான் நீயும் உன்னைச் சுற்றியுள்ள அறிவிலிகளும் உம்முன்னைய பிறப்பாகிய அசுரவேடுவ குலத்தில் பிறந்து உழல்வீர்களாக எனத் திருவாய்மலர்ந்து அக்கணமே மறைந்தருளினார்.

சிவபெருமான்அப்பத்துக்கு அரசனைப் பழிவாங்கிய படலம் முற்றுப் பெற்றது

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment