Saturday, August 28, 2021

ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்: தமிழ்முரசு

படித்தோம் சொல்கிறோம் - முருகபூபதி

லெட்சுமணன் முருகபூபதி
Melbourne, Australia
April 26, 2015

மீண்டும்  தட்டிவேனில்  பயணிப்போமா?
ராஜாஜி  ராஜகோபலன்  என்ற  வழிப்போக்கனின்  வாக்குமூலம்

வாழ்க்கையில்  நாம்  சந்திக்கும்  மனிதர்கள் அனைவரையும் தொடர்ந்து  நினைவில்  வைத்திருப்பது சாத்தியமில்லை. இலங்கையில் இலக்கிய  உலகிலும் ஊடகத்துறையிலும் நான் நடமாடிய   1970 - 1987  காலப்பகுதியில் நான் சந்தித்த கலைஞர்கள், படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள் ஏராளம்.

அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் அந்த வரிசையில் சந்தித்தவர்களும் ஏராளம். எனது எழுத்துக்களை படித்த ராஜாஜி ராஜகோபாலன் என்பவர் முதலில் என்னுடன் மின்னஞ்சலில் தொடர்புகொண்டபொழுது -  அவர் தமிழ் நாட்டிலிருக்கும் தமிழகத்தவர் என்றுதான் முதலில் நம்பினேன். பின்னர் - அவரது தொடர்ச்சியான தொடர்புகளில் கனடாவிலிருக்கும் இலங்கையர் என்றும், ஒரு சட்டத்தரணி என்றும் அறிந்துகொண்டேன். கொழும்பில் நான் பணியாற்றிய காலத்தில் சட்டவரைஞர் திணைக்களத்திலிருக்கும் நண்பர்களை பார்க்கச் சென்றவேளையில்  ராஜாஜி ராஜகோபாலனும் என்னைச் சந்தித்திருப்பதாகச் சொன்னார்.



அவரது முகமும் பெயரும் எனது  நினைவிலிருந்து  எப்படியோ தப்பியிருக்கிறது. தற்பொழுது அவரது  ஒரு  வழிப்போக்கனின் வாக்குமூலம் என்ற கவிதைத்தொகுதி எனது  மேசையில் கடந்த ஆண்டு   கடைக்கூறிலிருந்து  என்னையே   பார்த்துக்கொண்டிருந்தது. தமிழ்நாடு சிவகங்கை வளரி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்நூலுக்கு அருணா சுந்தரராசன்  பதிப்புரையும் கே.எஸ். சிவகுமாரன் இரசனைக்குறிப்பும் மேமன் கவி அறிமுகமும் எழுதியிருக்கிறார்கள்.

நானும் ராஜாஜி ராஜகோபாலன் போன்று ஒரு வழிப்போக்கன்தான். வழியில் கண்டதையெல்லாம் மனதில் மாத்திரம் பதிவுசெய்யத்தெரியாமல் வாசகரிடமும் பகிர்ந்துகொள்ளும் வழிப்போக்கர்கள்தான் படைப்பாளிகள்.

செய்யுள் இலக்கியத்தில் நாம் அறிந்த பிரிவுகள் கவிதை,  பாடல், காவியம், கவிதை நாடகம்.  இதில் கவிதை நாடகங்களை மேடையிலும் பார்த்திருப்பீர்கள். கவிதையில் திரைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன. பாத்திரங்கள் அனைத்தும் கவிதையிலேயே பேசும் ஒரு ஆங்கிலப்படம் அண்மையில் பார்த்தேன்.

செய்யுள் இலக்கியத்தின் ஒரு பிரிவான கவிதையும் மரபுக்கவிதை - வசன கவிதை -  புதுக்கவிதை என்று பிரிந்திருக்கிறது.

1970 களில் புதுக்கவிதைக்கு ஆதரவாகவும் எதிராகவும் இலங்கையிலும் தமிழகத்திலும் பலர் களத்தில் குதித்தனர். புதுக்கவிதைக்கென ஏடுகளும் தோன்றின. இலங்கையில் புதுக்கவிதையாளர்கள் வீறுகொண்டு எழுந்தனர்.

மகாகவி உருத்திரமூர்த்தி குறும்பா என்ற வடிவத்தை அறிமுகப்படுத்தினார். வேறும் சிலர் ஹைக்கூ வடிவத்தில் கவிதைகளை எழுதினர்.

இந்தப்பின்னணிகளுடன்  ராஜாஜி  ராஜகோபாலனை  பார்க்கின்றோம். அவரது  கவிதைகள் இலங்கையில்  மல்லிகை, அலை, வீரகேசரி, தினகரன் முதலானவற்றில் வெளியாகியிருக்கின்றன.



எனினும் 2014 ஆம் ஆண்டில்தான் இவரது  நீண்ட  கால வழிப்பயணம்  வாக்குமூலமாக நூல் வடிவில் வெளியாகியிருக்கிறது. இவர் இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில் இதழ்களில் எழுதியிருந்தபோதிலும்,  விமர்சகர்களின் பார்வையில்  கண்டுகொள்ளப்படவில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறார்.

பொதுவாகவே பெரும்பாலான படைப்பாளிகளின் நூல்களிலிருந்தே விமர்சனங்கள்  வெளியாகும். அங்கீகாரத்திற்காகவும் தேசிய விருதுகளுக்காகவும் புகழ்பெற்ற விமர்சகர்களின் முன்னுரைகளுக்கு காத்திருந்த பலர் எம்மத்தியில் வாழ்கின்றனர்.

1970 - 1980 காலப்பகுதியில் இந்த வழிப்போக்கனின் கவிதைகள் நூலுருப்பெற்றிருக்குமானால்  -  சில வேளை அங்கீகரிக்கப்பட்டவர்களின் முன்னுரை அதற்கு கிடைத்திருக்குமானால், ராஜாஜி  ராஜகோபாலனும் இலங்கையில் சிறந்த அறிமுகத்தை பெற்றிருக்கக்கூடும்.

உடனுக்குடன் கருத்துச்சொல்லி இவரை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது வசைபாடுதற்கும் அப்பொழுது முகநூலும் இல்லை. நல்லவேளை - அதனால் அவர் முகவரி தொலைக்காமல் மீண்டும் உயிர்ப்பித்துள்ளார்.

இந்நூலில் அவரது உயிர்ப்பு துலக்கமானது.

புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இலக்கிய சுவாசத்துடன் வாழும் ஈழத்து படைப்பாளிகள் தொடர்ந்தும் ஈழத்தின் காற்றையே சுவாசிக்கின்றனர் என்றும், இன்னமும் அவர்கள் தாம் வாழும் புதிய  தேசங்களின் காற்றை உள்வாங்கவில்லை என்றும் விமர்சனங்கள் வெளியாகின்றன.

ராஜகோபாலன் என்ற வழிப்போக்கனாலும் தான் பிறந்து - தவழ்ந்து - வளர்ந்த  அற்றைத்திங்கள் தடங்ளை மறக்க முடியவில்லை. கடக்க முடியவில்லை. அதற்கு பதச்சோறாகவே அவரது கவிதைகள் விளங்குகின்றன.

கனடாவில் இயந்திரமயமான வாழ்க்கைச்சூழலுக்குள், கொடிய பனிக்குளிருக்குள், காலை எழுந்து வெளியே செல்லு முன்னர் வீட்டு  வாசலில் நடைபாதையில் மலர்ந்து  குவிந்துள்ள பனிப்படலங்களை கொத்தியும் வெட்டியும் கிண்டியும் அகற்றிவிட்டு இரவில் நாறிப்பிடிப்பிற்கு எண்ணெய் தடவி, மீண்டும் மறுநாள் காலையில் அந்தத் திருத்தொண்டை முடித்துக்கொண்டு வேலைக்குச் செல்லும் மனிதர்கள் ஆசுவாசம் தேடுவது பழைய  நினைவுகளில் இருந்துதான்.

கனடாவில் குளிர்காலத்தில் பனிக்கட்டிகளை உடைத்து வழித்தடத்தை சீர்படுத்தும் எந்தவொரு ஈழத்து மனிதனதும் மனசாட்சியை தொட்டுக்கேட்டால் அது சொல்லும் அவன் முன்னர் வாழ்ந்த  தாயகத்தின் ஏக்கம் பற்றி.

எல்லோரும் கவிஞர்கள் இல்லை. கவிஞனாக வாழ்பவன் தனது ஏக்கத்தை - தாபத்தை - ஏமாற்றத்தை - ஆதங்கத்தை கவிதையில் தருகிறான். அதனால் அது புலம்பல் இலக்கியம் அல்ல.

ராஜாஜியும் தனது கவிதைகளில் தாயகத்தை நினைவுபடுத்துகிறார்.

அவரது இதற்கு மேல் என்ன வேண்டும்? கவிதை  எனக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நினைவுபடுத்தியது.

மானிடம் போற்றுதல்  மேன்மை
மனிதவுயிரே என்றும் ருமை
வானமே எமது எல்லை
வாராது காண் என்றும் தொல்லை.

என்ற  வரிகள்   தன்னம்பிக்கையின்  ஊற்றுக்கண்.

வானமே எமது எல்லை என்று கூறும் கவிஞர் அடுத்த கவிதையில் ( அம்மா மெத்தப்பசிக்கிறதே) வானமே எங்கள் கூரையம்மா என்று ஒரு அகதி முகாம் குழந்தை பற்றி சொல்லி வைக்கிறார்.
அந்தக்குழந்தையின் எல்லை அவள் வாழும் அகதி முகாம் கூரைக்குள்ளால் இரவில் நட்சத்திரங்களும் நிலவும் தெரியும் வானம்.

எனினும் அவளது துயரத்தை தோற்றுப்போகும் உணர்வுடன் சொல்லாமல்

இருட்டினில் வாழ்ந்தே பழகிவிட்டோம்
இருப்பதை உண்டே பசி தீர்ந்தோம்
நாளும் ஒரு நாள் விடியுமம்மா
நாங்களும் மனிதர்கள் ஆவோமம்மா

என்று நிறைவு செய்கிறார்.

இந்த வழிப்போக்கனின் நண்பர்கள் சுற்றம் - சூழல் - இயற்கை மனிதர்கள் - பாதிக்கப்பட்ட மக்கள். இவரது சில கவிதைகளுக்கு மெட்டமைத்து பாடவும்  முடியும்.

இலங்கையில் ஒவ்வொரு ஊருக்கும் பிரசித்தமான ஏதாவது ஒரு உணவுப்பொருள் இருக்கும்.
அவ்வாறே கனி வர்க்கங்களும் இருக்கின்றன.

மாத்தறை பக்கத்தில் தொதல் நல்ல பிரசித்தம். சில மலையக ஊர்களில் கித்துல் கருப்பட்டி,  எங்கள் நீர்கொழும்பில் அரிசிமாவில் செய்த அல்வா. அதுபோன்று பருத்தித்துறையில் தட்டை வடை. பனங்கள்ளுக்கு மாத்திரம் அல்ல, எந்த மேலைத்தேய குடிவகை மோகத்தினருக்கும்  (குடிப்பிரியர்களுக்கும்) வாயில் விட்டு அரைப்பதற்கு சுவையானது பருத்தித்துறை தட்டை வடை. கனடாவிலிருக்கும் இந்த வழிப்போக்கனுக்கு தனது ஊர் மீதுள்ள பாசம் பருத்தித்துறை வடை என்ற கவிதை ஊடாகவும் வெளிப்படுகிறது.

ராஜாஜி ராஜகோபாலனுக்கு பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை கருணையுடன் பதிவுசெய்யத் தெரிந்திருப்பது போன்று காதல் வயப்பட்ட மனிதனின் உள்ளத்தையும் கனிவோடு பதிவு செய்யத் தெரிந்திருக்கிறது.

எழுதாத கடிதத்தில்தான் எத்தனையோ உள்ளன - என்ற கவிதையில்  வரும் வரிகளைப்பாருங்கள்:

மறைத்துக்கொண்டவை
மலர்க் கதவுகள்தானே
திறந்துகொள்ள நான்
தென்றலை அனுப்புவேனே.
---
வட்டக் கழுத்தைவிட்டு
எட்டிப் பார்க்குமோவென்று
ஒவ்வொரு சொல்லின் முடிவிலும்
இழுத்துவிடுவாயே சேலையை
--
ஒருகோடு மட்டுமே கீறி
ஓவியமாக்கு என்றேன்
இரு நுனிகளையும்  இணைத்து
இதயம் ஆக்கிவிட்டாய்.
--

பாரதியாருக்கு சில தென்னைமரங்களுக்கு நடுவே ஒரு வீடும் களித்துச்சிரிக்க ஒரு பெண்ணும் தேவைப்பட்டது. கண்ணதாசனுக்கு ஒரு கோப்பையும் கோல மயிலும் தேவைப்பட்டது. (ஆனால் - அதன் அர்த்தம் வேறு - ஒரு ஓவியனுக்கு தேவைப்பட்ட வர்ணம் நிரம்பிய கோப்பையும்  தூரிகையாக  மயில்  இறகும்)

ஆனால் - ராஜாஜி ராஜகோபாலன் இறைவனைக் கண்டால் என்ற கவிதையில் இறைவனிடம்  என்ன  கேட்பார் என்பதற்கு ஒரு நீண்ட பட்டியலையே தருகின்றார். இந்த நீண்ட கவிதைக்கும் மெட்டமைக்க முடியும். ஒரு மானிட நேசனின் ஆத்மக்குரலாக அந்த வேண்டுதல் அமைந்திருக்கிறது. அதில் சுற்றம், உறவு, தேசங்கள், இயற்கை, உழைப்பு, மானுடம் என்பன துலக்கமாக பதிவாகியிருப்பதால் சர்வதேசப்பார்வை கொண்டதாகவும் அமைந்துவிடுகிறது.

தட்டிவேன் என்ற கவிதை எம்மை வடபுலத்திற்கோ அழைத்துச்செல்கிறது. எனக்கும் இந்தத் தட்டிவேனில் பயணித்த அனுபவம் இருக்கிறது. எனினும் எனக்குத்தெரிந்தும் கவனிக்கத்தவறிய ஒரு செய்தியை இவர் பதிவுசெய்கின்றார்.

இந்தத்தட்டிவேனில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் முதியவர்கள்தான். இளம் யுவதிகள்,  இளைஞர்கள் சைக்கிளில் பவனி வருவார்கள். தட்டிவேன் நிற்பதற்கு Bus halt தேவையில்லை. பயணிகள் கைகாட்டி நிறுத்தும் எந்த இடத்திலும் அது நின்று ஏற்றும். எவரையும் கைவிட்டுச்செல்லாது.

ஆனால், சைக்கிள்களில் வரும் இளம் தலைமுறை அதற்கு ஏளனச்சிரிப்பை உதிர்த்து, கைகாட்டி கடந்து செல்லும். தட்டிவேனிடம் கருணை இருக்கும். முதியவர்களை எப்படியும் ஏற்றிச் சென்றுவிடும். வடமாகணத்தின் உள்ளுர் பொருளாதாரத்தின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்திற்கு சலுகை விலையில் கட்டணம் அறவிட்டது தட்டிவேன்.

தட்டி வேன் கவிதையில் வடபுலத்தைச் சித்திரிக்கும் கவிஞர் முதிய பெண்களை இவ்வாறு வர்ணிக்கின்றார்.

குறுக்குக் கட்டிய பெண்களும்
கடகம் தூக்கிய கிழவிகளுமே
உன் கைபிடித்த
ஐஸ்வர்ய ராய்கள்.
---

இளம் பெண்களை இப்படிச் சொல்கிறார்:

மெட்டி அணிந்த மங்கையர்
உன் பலகைத்தட்டில் ஏறியதில்லை
சேலை உடுத்தியவர்கள் உன்னைச்
சேர நினைப்பதில்லை
டியூட்டரிக் குமரிகள் உன்னைத்
திரும்பியும் பார்ப்பதில்லை.
---
ராஜாஜி ராஜகோபாலன் என்ற வழிப்போக்கனிடமிருந்து இலக்கிய உலகம் மேலும் எதிர்பார்க்கிறது. அவருடைய குதிரை இல்லாத ராஜகுமாரன் என்ற சிறுகதைத்தொகுதி வெளிவரவிருப்பதாக அறிகின்றோம்.

நடந்து திரிந்த இந்த வழிப்போக்கன், தொடர்ந்தும் குதிரையில்லாமலும் நடக்கவிருக்கிறார்.
அவர் வரும் வழியில் நாமும் காத்து நிற்கிறோம்.
---0---
letchumananm@gmail.com


Friday, August 27, 2021

நாராயணபுரம்

நாராயணபுரம்: புதுச்சேரி பசுபதி

புதுச்சேரி, தமிழ் நாடு

August 27, 2021


ஒரு நாவலை வழக்கமாக வாசிக்கிற விரைவில் நாராயணபுரம் என்ற இந்த நாவலை நான் வாசிக்க ஏலவில்லை. திரும்பத்திரும்ப மையம் மாற்றி குவிமுறை மாற்றி பக்கங்கள் மாற்றி மாற்றி மாற்றி வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
இனம்தெரியாத மகிழ்ச்சியைவிட வேதனையானது வாசிக்கும் விழிகளில் துளிர்க்கும் துளிகளாக; மனத்தைப் புரோட்டா மாவு பிசையும் தேர்ந்த மாஸ்டராக நாவலாசிரியரின் மொழி. இன்னும் எவ்வளவோ உணர்வுகளைப் பூட்டி வைத்துக் கொண்டுதான் என் கருத்தை இங்கு எழுதுகிறேன்.

இது சாதாரணமான நாவல் அல்ல. இலங்கை பற்றி ஈழத்தைப் பற்றி போரைப்பற்றி கொழும்பைப் பற்றி எத்தனையோ பேர் எவ்வளவோ எழுதியிருக்கிறார்கள். அவற்றில் நான் முத்துவேலரையோ,அப்பன் ஜனனி முதலானவர்களையோ காண ஏலவில்லை. உணரவும் முடியவில்லை. குறிப்பாக நித்யா கலைவடிவம் என்றால் திலகம் குடும்ப வடிவம். நித்யாவிடம் கலை இருந்தது. அது இசைக்கலை. குடும்பக் கலை, திலகத்திடம் இருந்தது. இந்தக் குடும்பங்களோடு வாழ்ந்து யோசேப்புப் போல மரித்துப் போயிருப்பேனோ என்ற தாக்கம், என் மூளையில் எழுந்தது.

ராஜாஜி ராஜகோபாலன் மாதிரி ஒரு எழுத்தாளனை நான் இதுவரை உணர்ந்ததில்லை. பார்ப்பதற்கு ஒதுங்கி இருக்கும் இயல்பு அதிகம் உள்ளவராக இருந்தாலும்; விஷ்ணுபுரம் பந்தாக்கள் நாராயணபுரத்தில் வராமல் பார்த்துக்கொண்டது என் நண்பர் ராஜாஜி ராஜகோபாலனின் படைப்பாற்றல், நாவலைச் செதுக்கிய திறனாலேயேதான் ஆகும். "அதுதான் விஷ்ணுபுரம் என்ற தலைப்புப் பெயர் ஏலவே வந்துவிட்டதே... இவர் வேறு எதற்கு நாராயணபுரம் என்று தலைப்பிட்டது என்று திரும்பத் திரும்ப சலித்துக் கொண்ட என் இதயம் இன்று சாந்தி அடைந்து விட்டது. நாராயணபுரத்தைத்தான் எண்ணத்தில் முதலாவதாக என்னால் இப்பொழுது கருதமுடிகிறது, விஷ்ணுபுரம் எல்லாம் அப்பால்தான். இந்த நாவல் ஒரு முறை படித்து முடிப்பதற்கானது அல்ல. என் நண்பர் நாயகர் இதை எனக்கு மெனக்கெட்டு வாங்கிக் கொடுத்ததன் நோக்கம் நிறைவேறிவிட்டது. எங்கள் நண்பரும் இங்கே என் வசிப்புக்கு அண்மையும் சேய்மையும் அல்லாததுமாகிய மூலைக்குளம் தாண்டி அந்தண்டைய காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை நகரில் வதிகிறவருமான ஈழத் தமிழரான சிவப்பெருமகிழ்வானவரிடம் இந்த நாவலை வாசித்த பின் கொடுக்கிறேன் என்ற வாக்கைக் கொடுத்திருக்கிறேன். ஆனால், எப்பொழுது கொடுப்பேன் என்று தெரிய முடியாத அளவு மீளவும் மீளவும் வாசிக்கிறேன்.

இதில் கவிதைகள் பலவுஞ் சரிசரி துண்டுதுண்டுகளாக விரவிக்கிடக்கின்றன. உவமைகள், பழமொழிகள், விவசாயத்தைப் பற்றிய நேர்மையான -அற்புதமான விளக்கங்கள் பற்பல. பெண்மையின் நளினம் நாவல் முழுதும் பகைப்புலனாய். இந்த இடத்தில் எனக்கு ராஜாஜி ராஜகோபாலன் ஒரு பெண்ணாக இருந்து தன்னை மறைத்துக் கொண்டெழுதுகிறாரோ என்று கூட எண்ணத் தோன்றியது.. ஆண் பெயரில் ஒருவேளை எழுதி வரும் இவர் -- இந்தப் பெண்மணியோ ~ பெண்கள் பெயரில் தம்மை மறைத்துக் கொண்டு ஆபாசமாக எழுதுகிற சாணிகளிடை எப்படிச் சஞ்சரிக்கிறார் என்னும் சந்தேகநோய்கூட சற்றுத் தூக்கலாய் நிலவியது. அமரத்துவமான இந்த எழுத்துக்களை படிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது எவ்வளவு சொன்னாலும் இந்த நாராயணபுரம் ஒருமுறை வாசிப்புக்கு பொந்திகைப்படாது. அவ்வளவுதான்.
- தேவமைந்தன்
[புதுச்சேரிப் பசுபதி]

நாராயணபுரம்

நாராயணபுரம்: புதுச்சேரி பசுபதி

புதுச்சேரி, தமிழ் நாடு

August 27, 2021


"பெண்கள் குடும்பத்தின் தூண்டாமணி விளக்குகள். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களிடம் குடும்பத்தின் மீதான பாசமும் பொறுப்பும் இயல்பாகவே பிறந்துவிடும். ஆண்களாகிய நாம் அதை அனுசரித்து நடந்தால் அவர்களுக்கும் நமக்கும் இடையிலுள்ள உறவுப் பாலம் உறுதியாகிவிடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒன்றே முதல் நோக்கமானால் இதைவிடப் பெரிதாக நாம் எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை."

"#கொழும்பு வாழ்க்கை சுகமானது தான். ஆனால் அதற்காக வீட்டையும் ஊரையும் வெறுத்து அந்த வாழ்க்கைக்கு ஆசைப்பட மாட்டேன். படிக்கவும் வேலைக்கும் எனத் தேடிப் போன இந்த நகரம் எவ்வளவு அழகாகவும் வசதியாகவும் கடற்கரையில் மாலை முழுவதும் காலாற நடக்க இதமாகவும் இருந்தால் அது பிறந்த ஊர் ஆகிவிடுமா? நெருக்கமான நகரத்தின் இடுக்கில் கால் நீட்டிப் படுக்க முடியாத அறையும் நாலடி முற்றமும் வீடாகிவிடுமா? கோடிப் புறத்தில் நிற்கும் ஒற்றைத் தென்னையும் பெயர் தெரியாத பூமரங்களும் தோட்டமாகிவிடுமா?"

நாராயணபுரம்

 நாராயணபுரம்: சிவநாதன் பாலகிருஷ்ணர்

Colombo, Sri Lanka/London, United Kingdom

August 9, 2021


நீண்ட காலங்களிற்குப்பின்னர் ஒரு நாவலை முழுமையாக வாசித்த திருப்தி, அதிலும் மற்றைய எழுத்தாளர்கள், எமது தமிழ் கதை எழுத உகந்ததல்ல என்று தமக்குத்தானே தீர்மானம் எடுத்து நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படுத்த ராஜாஜி அவர்களோ மண்வாசனை சிறிதும் குறையாமல் அத்துடன் ரசனையுடன் கையாண்டிருப்பது ஆச்சரியப்படவைக்கிறது. அவர் தவழ்ந்த, வளர்ந்த மண்ணிலேயே நானும் பிறந்து வளர்ந்ததால் அவர் சந்தித்த பாத்திரங்களை நானும் கண்டிருக்கிறேன்.

கதையோட கதையா கதை நடைபெற்ற காலப்பகுதியில் நடந்த “அட்டகாசங்களையெல்லாம்” எவருக்கும் நோகாதபடி கையாண்டது சிறப்பானது.
சொல்வதற்கு மிக அதிகம் உண்டு, சிறப்புகள் பல. ஒரே ஒரு குறை, (சந்திரனில் இருப்பது போலும்) தேவனின் இளவயதில் அவன் கெடுக்கப்பட்ட சம்பவம் அதுவும் ஆசிரியையால். இவை சில வேளைகளில் யாதார்த்தம் எனினும் எங்கோ நெருடலை ஏற்படுத்துகின்றதே!

மற்றபடி…. இம்முயற்சிமிகவும் பாராட்டுக்குரியதே…..!

நாராயணபுரம்

நாராயணபுரம்: புதுச்சேரி பசுபதி

புதுச்சேரி, தமிழ் நாடு

July 27, 2021


தேவன்: "எனக்குச் சங்கீதமெண்டால் நல்ல விருப்பம் என்று அய்யா சொல்லி இருப்பார்."

திலகம்: "ஓமோம், இப்பவும் சங்கீதம் படிக்கப் போறீங்கள் என்றும் சொன்னார்."
தேவன்: "ஓம் அதுவும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்குது. என்ர கூட்டாளி ராமுவும் நானும் அதை இசை என்று சொல்லுவம். எங்களுக்கு அது சும்மா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிற வேலை இல்லை. இசையை எங்கள் உயிருக்குச் சமமாக நேசிக்கிறம்."

"வித்துவானாக வாறதுக்காக நான் இசை பழகயில்லை. பாடுறபோதும் பாட்டைக் கேக்கிறபோதும் என்ர மனதுக்கு இதமாகவும் ஆறுதலாகவும் இருக்கும். உயர்ந்த இசையைக் கேக்கிறபோது ஆகாயத்தில் மிதப்பதுபோல் இருக்கும். ஆத்மாவோடு பேசுறதுதான் இசை."
திலகம்: "அதென்ன, இந்த மண்டபத்திற்கு வந்தவுடனை உங்களுக்குச் சங்கீதம் நினைவு வந்தது?"
தேவன்: "நல்ல கேள்வி கேட்டாய் போ. இந்த இடத்திலை இருந்து எத்தினையோ பேர் கச்சேரி பண்ணியிருக்கினம். நானும் சின்ன வயசிலையிருந்து நிறைய வித்துவான்களன்ர கச்சேரிகளைக் கேட்டிருக்கிறன். பிரபல வித்வான்களோட நாதஸ்வரக் கச்சேரிகளெல்லாம் கூட இங்கே நடந்திருக்குது. மூண்டு வருசத்துக்கு முந்தி ஒரு பெண் இஞ்சை பாட வந்திருந்தா. அவவன்ர பாட்டும் எனக்குப் பிடிச்சுக்கொண்டுது. பிடித்தமான ஆக்களோட கதைக்க விரும்பிறதும் வழக்கம் தானே. அவவோடையும் கதைச்சுப் பழகினன். அவவன்ர பெயர் தான் நித்யா."
~ *நாராயணபுர*த்தில் @Rajaji Rajagopalan

நாராயணபுரம்

நாராயணபுரம்: புதுச்சேரி பசுபதி

புதுச்சேரி, தமிழ் நாடு

July 26, 2021


ராஜாஜி ராஜகோபாலன் அவர்களுக்கு ஓர் ஏக்கம் இருந்திருக்கும்போல் உள்ளது. 'கவிதைக் காவிய'மாகத் தன் மூன்றாவது நூலை மாயவன் புகழ்பாடும்படியாக அமைக்க வேண்டும் என்று நினைத்திருப்பார் போலத் தோன்றுகிறது. இதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டால் நாவலின் முதலாம் பாகத்தில் *எல்லையற்ற பெருவெளி* என்று தொடங்கும் நாவலின் தொடக்கத்தை உட்கொண்ட முதற்பத்தி முதலாக ஐந்தாம் பத்தி முடிய அமைந்துள்ள வண்ணனையைக் காட்டலாம். *தூரத்துச் சவுக்கு மரங்களிலிருந்து சோவென்ற ஓசையுடன் காற்று வந்து வருடிச் செல்கிறது. கையோடு வெண்மணலையும் [அவர் மீது] வீசிவிட்டுச் சிறுபிள்ளை போல் நகைத்தபடி ஓடி ஒளிந்து கொள்கிறது* - *மனதுக்கு எட்டிய தொலைவில் முணுக்முணுக்கென என எரியும் நெய் விளக்கொளியின் ஜொலிப்பில் சக்கர வடிவாகக் கரந்துறையும் மூலவர்* - *தொட்டம் தொட்டமாய் ஒற்றைத் தென்னைகளும் வடலிப் பனைகளும் வானத்தை நோக்கி நீருக்குத் தவம் செய்கின்றன. மண் மேடுகளில் நாவலும் மகிழமும் ஈச்சையும் பாலையுமாக மணற்காடு நெய்தலும் மருதமும் முயங்கிய நிலத்தின் இலக்கிய வடிவமாய் அப்பிரதேசத்தின் தன்மையை பறைசாற்றுகிறது* ~ஆகியவை அவை. 'மணற்காடர்' என்று இவர் புனைந்து கொண்ட பெயருக்கான 'ஏது'வை, இத்திணைநிலத்தின் தன்மைநவிற்சி புலப்படுத்தாநிற்பதை ஓர்பவர் உணர்வர்.

முத்துவேலர், அவணிருந்த தேர்மூட்டுப் போதிமர நிழலில் கூடியிருந்த மக்களிடையே விருந்தினரன்ன ஈரறிஞர், அவ்விடத்தாலாய வரலாறு மொழிவதைச் செவிமடுத்துப் பெருமிதம் கொள்கிறார். காரணம், அப் பதியின் பெயர் வல்லிபுரம். ஈழத்து வடபுலத்துத் தலைநகரமாய் விளங்கியது. அவண் ஓர் நெய்தல் துறைமுகமிருந்தது. இந்து மாக்கடல் பெருவாணிகத்துக்கு நடுநாயகமாகத் திகழ்ந்தது. ஈழத் தமிழரின் தலைநகரான சிங்கை நகரும் அதுவே. அங்கிருந்துதான் புது நாடுகள் தேடி மக்கள் புலம் பெயர்ந்தனர். ஆதாரம்?

அவ் வீரறிஞர் சுட்டிய தொன்மைச் சின்னங்கள்..மணல்குன்றுகள், பற்றைக்காடுகள், கீச்சுக் கிட்டங்கள், கூரையோட்டுத் துண்டங்கள், கிணறு குளங்கள்; ஈமத்தாழிகள், புராதன புத்தர் - வினாயகர் படிமங்கள், கட்டடச் சிதிலங்கள் ... இன்னோரன்னவை அக்காலத்தே அகழ்ந்தாய்ந்து அறிந்தவை.

முத்துவேலர், இப்போது தன்முன்னே தோன்றும் *அமானுஷ்யமானதொரு அருள்சுரக்கும் மயக்கத்தை* நல்கும் விமானம் ஓங்கிய விண்ணகர மாயவன் தன்னைப் பணிந்து மொழிந்தார்:-
**மாயவா! என் குடும்பம் உனக்குப் பரம்பரை பரம்பரையாக ஊழியம் செய்து வருகிறது. நீ இங்கே வந்து காலூன்றிய வரலாறும் இந்த மண்ணின் வரலாறும் அலாதியானது. அதை உள்ளது உள்ளபடி எழுத எவருமே முன் வராமல் போகலாம். ஆனால் நீயும் வாழ்ந்து எங்களையும் வாழ வைக்கும் வரலாறுதான் எனக்கும் என் பின்னடிக்கும் வழிகாட்டப் போகிறது!**
- ஓமோம். முத்துவேலரின் பிரார்த்தனை நெடுங்காலம் தாண்டி, கனடா ஒந்தாரியோவில் கண்டுயின்று கனாக்கண்டிருந்த மணற்காடரின் கனவில் வந்து, "ஓம்.. அதை நீவிரேன் செய்யலாகாது?" என்று உசுப்பிவிடவேதான் **நாராயணபுரம்** நாவலுருவில் நம் கைகளில் வீழாநின்றது காண்மின் நண்பீரே.

- தேவமைந்தன்,
புதுச்சேரி
2021/7/26
[வளரும்]

நாராயணபுரம்

நாராயணபுரம்: சுபி நரேந்திரன்

London, England

May 2, 2021



திரு ராஜாஜி கோபாலன் எழுதிய 'நாராயணபுரம்' நாவலை சுவாசித்து முடித்து விட்டு அதன் நறு நறுமணத்தை உங்களோடு பகிர்கிறேன்.

நான் ஒரு பெரிய இலக்கிய வாதியோ, கதாசிரியரோ, அல்லது கவிஞரோ இல்லை. தமிழை உயிராய் நேசிக்கும் ஒரு சாதாரண முகநூல் வாசகி. கிட்டத் தட்டப் பத்து ஆண்டுகளாக இந்த குதிரை இல்லாத ராஜ குமாரனோடு முகநூலில் பயணிக்கிறேன். இவருடைய பகிர்வுகள் எதையும் தவறாது படித்து விடுவேன். சிறு கதைகளை படிக்க தொடங்கினால் அதை முடிக்காமல் விட முடியாத அளவுக்கு கதையோடு மனம் கட்டுப் பட்டு விடும். இவர் மேல் எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு.

யாழ்ப்பாணத்தில் வல்லிபுரம் கோவிலை சூழ்ந்த கிராமங்களில் இந்த கதை வளர்கிறது. கதை தொடக்கமே மணற்காடாய் பரந்திருக்கும் கடற்கரையும் அதை அண்மித்த 'மாயன் கோவிலின்' அழகும்தான். அந்த வர்ணனைகள் மனதை மிகவும் கவர்ந்து ஆசுவாசப் படுத்துகிறது.

யாழ்ப்பாணக் கிராமமும் அதன் மனிதர்களும் அவர்களின் பக்தி, விருப்பு வெறுப்பு என்று எல்லாமே அழகான எங்கள் ஊர் தமிழில் உரையாடலில் இயல்பாக கதை போகிறது. இந்த நாவலின் முழு வெற்றியும் இதில் பேசப்படும் கிராமத் தமிழில்தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். கிரமங்களில் மட்டும் பேசப் படும் நிறைய சொற்களை காண முடிகிறது. சாதாரணமாகவே ராஜாஜிக்குரிய நக்கல் நளின நகைசுவை டச் நாவல் முழுவதும் இருக்கிறது. பக்தி, அன்பு, கோவம், காதல், பயம் என்று எந்த உணர்வுக்கும் குறை இல்லை. நவரசங்களையும் குழைத்து அற்புத வண்ணம் தந்திருக்கிறார். எனக்கு மிகவும் ஆச்சரியமான விஷயம் என்ன வென்றால் இசையை இவர் இந்த நாவலில் கையாண்ட விதம்தான். இசையும் காதலும்இங்கு பெரும் பங்கை வகிக்கிறது. காதலை இசையோடு இணைத்து அழகாக படிப்பவர் மனக்களையும் சொக்க வைத்து விட்டார்.

முதல் தலைமுறையின் நாயகன் முத்துவேலர். கண்டிப்பு நிறைந்த அசல் யாழ்பாணத்து அப்பா. இவரில் எனக்கு சரியான கோவம் மகனின் படிப்பை இடையில் நிப்பாட்டியது மட்டுமில்லாமல் காதலுக்கும் எதிரியாகிவிட்டார். ஆனால் மரணப் படுக்கையில் மகனிடம் மன்னிப்பு கேட்டு எனது மனதை தொட்டு விட்டார். அவருடைய மகன் தேவன் இரண்டாம் தலை முறை நாயகன். இவருடைய மகன் அப்பன் மூண்டாவது தலை முறை நாயகன். மூன்று தலை முறைகளையும் கதை சொல்லி நிக்கிறது.

இவை எல்லா வற்றோடும் நாட்டின் போர் சூழலும் இணைந்தே வருகிறது. போர் அவலங்களை தனியாக சொல்லாமல் கதையோடு இணைத்து கொண்டு சென்ற விதம் பாராட்டுக்குரியது. அதே போல்தான் நாராயணபுரத்துக் கிராம வரலாறும் கதை போகிற போக்கில் அழகாக தூவப்ப பட்டுள்ளது.

என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்குப் புரியும் எழுத்து எனக்கு மிகவும் பிடித்தது. இதுவே மணற்காடரின் வெற்றி.
அருமையான
அனுபவத்தை தந்த ராஜாஜிக்கு மிக்க நன்றிகள்.

எல்லோரையும் இந்த நாவல் போய் சேர்ந்து பாராட்டுகளும் புகழும் ராஜாஜியை வந்து சேர மனமார வாழ்த்துகிறேன். God bless you.

இந்த நாவலை என்னை வந்தடைய செய்த எனது அன்பு நட்பு ஜோவுக்கும் J P Josephine Baba எனது மனமார்ந்த நன்றிகள்.

நாராயணபுரம்

நாராயணபுரம்: பாமா இதயகுமார்

British Columbia, Canada

April 19, 2021

மனநிறைவு தந்தது வாசித்து முடித்த திருப்தியும் மகிழ்ச்சியும் கூடவே. திரு. ராஜாஜி ராஜகோபாலன் அவர்களின் நாராயணபுரம் பற்றி தான் சொல்கிறேன். இதுபோன்று இனிதாவதொன்றில்லை என்று தொடங்கி 416 பக்கங்கள் எங்கள் கண்களை கட்டி அழைத்து சென்று இருக்கிறார் ஆசிரியர்.

யாழ்ப்பாணத்தின் தமிழ் மக்களின் பேச்சு வழக்கு முறை, அங்கு வாழ் மக்களின் வாழ்வியல் சூழல், சுற்றியுள்ள பள்ளிகள், கோயில் என்று எல்லாவற்றையும் காட்சி விபரின் போது கண் முன் காட்சிகளாக எங்கள் கற்பனை விரிய வைக்கிறது.
உண்மையை சொன்னால் எங்கள் மண்வாசனையை எங்களுக்கு நிறைய இடங்களில் ஞாபக படுத்தி ஒவ்வொரு இடத்திலும் ஆச்சரிய பட வைத்திருக்கிறார். எழுத்தின் சிறப்பை, அதன் அழகான வர்ணிப்பை, அந்த மண்ணில் பயணித்த அவரின் வாழ்வை, போராட்டk காலங்களோடு இணைத்து எல்லா கால கட்டத்துக்கு ஏற்ற ஒரு நாவலாக எங்கள் கையில் தவழ விட்டது அவருக்கு தவம், எங்களுக்கு வரம்.
கதையை பற்றி சொல்லிட விருப்பம் இல்லை, பலரின் ஆவலை தூண்டும் இந்த நாராயணபுரம் எல்லோர் கைகளையும் தழுவி செல்ல பிரிய படுகிறேன். நான் மெய்சிலிர்த்த தமிழ் சொற்கள் எங்கள் புழக்கத்தில் இருந்து எங்களை விட்டு விலகி போன்றவற்றை எல்லாம் ஒரே நாவலில் கொண்டு வந்து சேர்த்து ஆசிரியரின் சிறப்பு.
ஒரு பாரம்பரிய விவசாய குடும்பத்தின் கதை. நற்பண்புகள் பொருந்திய நாயகன் தேவன் மாணவனாகத் தொடங்கி அவனை சுற்றி வளர்கிறது கதை. அவனும் அவன் நண்பர்களும், தேவனின் காதல், கல்யாணம், வயதான பெற்றோர்களும் அவர்களின் சராசரி எதிர்பார்ப்பு , என்று மாறி காதல் கடந்து போக , அவன் பருவங்கள் மாற அவன், அவர் ஆவது தமிழரின் மரியாதைக்குரிய சொல்லாக காட்டப்படுகிறது சிறப்பு.
வாசிக்கும் போதே சிலவற்றை குறித்து வைத்தேன், நான் மறந்து போன போகாமல் ஞாபக படுத்திய சொற்கள், மற்றவர்களுக்கும் தெரிந்து கொள்ள என்று எழுதுகிறேன். விடுபேயன் இந்த சொல் வாசித்ததும் என்னையறியாமல் சிரிப்பு வந்தது. இங்கு மறந்து போன சொல். இதை நான் ஊண்டி வாசித்தேன். இந்த ஊண்டியும் கண்டேன் புத்தகத்தில்.

இந்த புத்தகத்தை குறிப்பாக தமிழ் பேசும் அனைவரும் வாசிக்க வேண்டும் எதற்கு எனில் புழக்கத்தில் இல்லாத அறியாத பல சொற்களை அறிந்து கொள்ள வாய்ப்பும் தருணமும்.
அருவருப்பு என்று பாவித்து பழகிய எங்களை அரியண்டப்படுத்தி நானும் இருக்கிறேன் என்று நினைவூட்டினார். உதாரணமாக யமக்காவல், பக்கீஸ் பெட்டி, துளவாரம், வாரப்பாடு, பறவாதிகள், துமிக்கிறது, கரவற்ற சொற்கள், வெப்பியாரம் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். குறிப்பாக ஒரு பழமொழி எள்ளு போட இடம் இல்லை என்போம், இங்கே ஈக்கு குத்த இடமில்லை என்ற பழமொழி எனக்கு புதிதாக இருந்தது.
நிச்சயமாக ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நாவல். காட்சிகளை அவரின் வர்ணிப்பு மீண்டும் வாசிக்க தூண்டியது. இந்த இலக்கியத் தொடர் எல்லோர் இதயங்களிலும் இடம் பிடித்து நீங்காமல் சம்மணக்கால் போட்டு இருக்கும் என்பது உறுதி.

வாழ்த்துக்கள். நாரணாயணபுரத்தைத் தரிசித்தேன், மாயவன் சிறப்பு மனதை தொட்டது. முதலில் வாசித்து மகிழ்ந்தேன், அழகான பிரசவம் நாராயணபுரம். வாழ்த்துக்கள் கதாசிரியருக்கு.

நாராயணபுரம்

நாராயணபுரம்: அருந்ததி குணசீலன்

Colombo, Sri Lanka

April 15, 2021

என் இனிய நண்பர் ராஜாஜி Rajaji Rajagopalan எழுதுவதை தவமாகக் கொண்டவர். அவர் வடித்த கிராமத்து விருந்து நாராயணபுரம் என்ற நாவல் என்னிடம் வந்து சேர்ந்ததை இட்டு மனம் மகிழ்கிறேன்.
கிட்டத்தட்ட நான் முகநூலில் அடியெடுத்து வைத்த நாளில் இருந்து என்னுடன் பயணிக்கும், உரிமையுடன் பழகும் நண்பர். அவ்வப்போது சிறுகதைகளை முகநூலில் அவர் பதியும் போது, என்னைப்போல் பலர் அவரவர் கருத்துகளை வெளிப்படையாக எழுதி அவருடன் வாதிடுவோம். அவ்வேளை மனம் கோணாது பதில் தந்து அசத்துவார். அந்த நாட்கள் தினமும் அவருடன் கருத்து மோதலில் ஈடுபடுவது சுவையாக இருக்கும்.
நாராயணபுரத்தின் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கியதில் இருந்து:

ஈழத்தின் கிராமிய அழகு,சமுக வாழ்வியல், அங்குள்ள மாந்தரின் மன உணர்வோட்டங் கள், பலதரப்பட்ட சுவையான கதாபாத்தி ரங்கள் போன்றவற்றை நாம் அலுக்காமல் தரிசிக்கும் படி வைத்துள்ளார் .
ஒரு காலத்தில் நாவல்களை ஓடியோடி ஒரே மூச்சில் வாசித்த என்னை, வாழ்வியல் மாற்றம், போர்க்காலத் தலையிடிகள், இடம்பெயர்வுகள், சிந்தனை மாற்றங்கள் நாவல் வாசிப்பதில் இருந்து என்னை தூரே தள்ளிவைத்தன. என்னுள் இரசனை மாற்றத்தை(மனோதத்துவ, ஆன்மீக சிந்தனைகள், மக்களை சிந்திக்க விட்டுச் சென்ற பெரியவர்களின் வாழ்வியல்) ஏற்படுத்தி விட்ட நிலையில்
இராஜாஜியின் நாராயணபுரம் என் கையில் கிடைத்துள்ளது. 🌹 🌹
அவரின் சிறப்பான கருத்துச் செறிவான எழுத்து ஆளுமை எனக்குத் தெரிந்தபடியால், விருப்புடன் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். ❤️ ❤️
இந்துசமுத்திரம் எழுப்பிய ஓங்காரத்தை அணைத்தபடி துயிலும் மணற்காட்டுப் பெருவெளியில், யாழ்நகரின் வடபுறம் அமைந்த புகழ் பெற்ற வல்லிபுரக் கோயிலை மாயவன் கோயில் என அழகாகப் பதிவிட்டு, அதன் எல்லையற்ற அழகை விபரிப்பதிலிருந்து, வீதியோரம் சாமரம் வீசும் மரங்க ளையும், மரங்களின் கீழேயிருந்து களை கட்டும் பெயர் போன ஓடக்கரை தோசை வியாபாரம் நாசியைத் துளைக்க, வழியெங்கும் கூவி விற்கும் வியாபாரிகள், இப்படியே வயல்வெளிகளையும் நீர்நிலை களையும் அணைத்தபடி துயிலும் அப்பிரதேசத்தைப் பற்றிய விவரணம் எம்மை அந்த இடத்துக்கு உணர்வோடு தூக்கிச் செல்கிறது என்றால் மிகையாகாது.
ஊர்வழக்கில் உள்ள சுவையான நையாண்டிகளை, கோவண வைரவியார் ஒழுங்கை, தாமர் ஒழுங்கை கந்தசாமி ஓடை என உள்ளூர்ப் பெருமக்களை நினைவு கூறும் இடங்களை அறிமுகப் படுத்துவதில் இருந்து, ஊரில் அடிப்படை சாதீய உணர்வுள்ள, பெருமைபிடித்த, நாட்டாமை போன்ற முத்து வேலரையும், அவருக்கு நேர் எதிர் குணத்தில் பிறந்த அவர் மகன் தேவனையும் அறிமுகப் படுத்துதலில் சுவாரஸ்யமாகத் திரில்..!! ஆகத் தொடங்குகிறது முதலாம் பாகம்.
😊 😊

ராஜாஜி, உங்கள் கனவுகளின் பெரு விருட்சமான உங்கள் நாவலை எழுதுவதற்கு நீங்கள் எவ்வளவு சிரத்தையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டிருப்பீர்கள் என்பதுவும் வாசகர்களின் விமர்சனத்தில் எவ்வளவு ஆவலுடனும் இருப்பீர்கள் என்பது புரிந்ததால் எனது சிறு முன்னோட்டத்தை எழுதியுள்ளேன். இது பலரையும் கவரும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

உங்கள் படைப்பு பலரையும் சென்று அடையட்டும் என வாழ்த்துகிறேன். 👍 👍
இப்படிக்கு
அருந்ததி குணசீலன்.

நாராயணபுரம் நாவல்

நாராயணபுரம்: முதல் அறிமுகம்

குப்பிழான் ஐ. சண்முகன்

கரணவாய், கரவெட்டி, இலங்கை

March 2, 2021



ராஜாஜி இராஜகோபாலனின் நாராயணபுரம் நாவல் வெளிவர இருப்பதையறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
எனது நீண்டகால நண்பரான (ஏறத்தாழ ஐம்பது வருடங்கள்) அவரின் வாழ் நாள் கனவு இதுவென்றே சொல்வேன். கடந்த ஐந்தாறு வருடங்களாக இதே சிந்தனையாகவிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தார்.
அவரின் வளரிளமைக்கால களமும், காலமுமே இந்நாவலில் விரிகின்றது. அவரது கிராமமும், அவரது சூழலிலிருந்த பிரபலமான வல்லிபுரக் கோவிலும், கோயில் உற்சவகாலங்களில் பனிப்புகார் நிரம்பிய காலை வேளைகளில் - உடல் நடுநடுங்க நடந்து சென்ற ஒற்றையடி பாதையும், இளமைக்கால நண்பர்களும், அவர்களின் சந்திப்புக்கள் - இலட்சியக்கனவுகளுமென நாவலின் முதற்பகுதி விரிவு பெறுகிறது.
நாவலின் பிற்பகுதியில் எமது சூழலில் போராட்டங்கள் கருக்கட்டும் காலங்கள் பேசப்படுகின்றது. குடும்பங்களிலிருந்து காணாமல் போன இளைஞர்களும், அவர்களைக் காணாது தவிக்கும் குடும்பத்தினரும், பின்னர் நிகழ்ந்த அவல முடிவுகளுமென கதை வளர்ந்து செல்கிறது.
முடிவாக, ‘நாராயணபுரம்’ என்கின்ற யாழ்ப்பாணத்து வல்லிபுரக்கோவிலில் சூழலிலுள்ள கிராமங்களின், மக்களின் வாழ்வின் இலட்சியங்களையும் கனவுகளையும், தவிப்புக்களையும் - இந் நாவல் பேசுகின்றது.
எங்கள் போராட்டம் கருக்கட்டிய 15, 20 வருட யாழ்ப்பாணத்து வாழ்வை இந்நாவல் பதிவு செய்கிறது. கிராமங்களின் அழகையும், போராட்ட உணர்வின் தகிப்புக்களையும் பேசும் இந் நாவல், முன் உதாரணங்களிலில்லாத ஒரு முக்கியமான நாவலென்றே சொல்வேன்.
கதையின் ஊடுபாவாக ஒரு காதல் கதையும் இழையோடுகின்றது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
(இரண்டொரு வருடத்தின் முன்பு, தட்டச்சுப் பிரதியாக இந்நாவலை வாசித்த நினைவுகளிலிருந்தே இதை எழுதியுள்ளேன்.)