Thursday, July 10, 2025

தடங்கள் சுவடுகளாகின்றன - கங்கைமகன்

 ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம் கவிதைத் தொகுப்பை முன்வைத்து


மன்மத ஆண்டின் கதாநாயகர்களில் ஒருவராய் என் ஆழ்மனதில் பதியம் வைக்கப்பட்டவர்தான் இக் கவிதை நூலின் நாயகன் திரு. இராஜாஜி  இராஜகோபாலன் அவர்கள். வாக்கு மூலங்கள் பதிவுசெய்யப்பட்டு நூல்வடிவம் பெறுகின்ற செய்திகேட்டு என் புலன்வழி வந்த விசாரணைகளை ஏற்கனவே பதிவாக்கியிருக்கின்றேன். சித்திரைப் புத்தாண்டன்று (14.04.2015) இந்த வருடத்திற்கான வெகுமதிப் பரிசாகத் தங்கள் நூல் என்கரம் கிட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நூலை எதிர்பார்த்து எழுதுவதற்கும், எதிரில் பார்த்து எழுதுவதற்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு. அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக வெளியீட்டின் முன்னான சில பகுதிகளையும்  இங்கே பதியம் வைக்கின்றேன்.

வெளியீட்டின் முன்..............

வேரறுந்த விழுதுகளாய் புலம்பெயர் மண்ணில் வாழ்வுதனைத் தொலைத்தவர்களாய் வாழ்ந்துவரும் இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களில் திரு. ராஜாஜி ராஜகோபாலன் அவர்களும் ஒருவராவார். வக்கீல் தொழிலில் கனடாவில் நல்ல அனுபவமும், புலமையும் பெற்றுப் புகழுடன் வாழ்பவர்.

எனது 1505 முகநூல் நண்பர்களில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களில் இவரும் ஒருவர் ஆவார். தன்னைத் தாழ்த்தி மற்றவர்களைப் பெருமைப் படுத்துவதில் இவர் மிகவும் பெருமைக்குரியவர்.

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். (குறள் 527)

என்ற குறளுக்கு அமையத் தனது உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் தமிழையும், தமிழ் இலக்கியத்தையும் தன் வீட்டுப் பெட்டிக்குள் தாராளமாக அடைத்து வைத்திருப்பவர். சிறுகதை, நாவல்கள், கவிதைகள் போன்றவற்றிற்கு அவர் தூவும் தமிழ் அழகு.

முகநூலில் எனக்கும், என் மனைவி புனிதா அவர்களுக்கும் நண்பராகி எங்கள் வீட்டுக்குள் தலைவாழை இலைபோட்டு விருந்து வைக்கக் காத்திருக்கும் உறவினர்போல் ஆகிவிட்ட மகிழ்ச்சி எனக்கு இருக்கின்றது.

இனிய உளவாக இன்னாது கூறல் கனி இருக்கக் காய் கவர்ந்தற்று (குறள்) என்பது போல அவரது இனிய தமிழ் நடைப் பேச்சுக்கள், கதைகள் என்னை மேலும் அவர்பால் பற்றுவைக்க நேர்ந்தது.

அவரது புதிய வெளியீடாக வெளியிடப்படவுள்ள "ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்" என்ற கவிதைத் தொகுதி சிறப்பான வெளியீடு காணவேண்டும் என்பதனை என் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதனைக் கருத்திற்கொண்டே இதனை இங்கு பதிவு செய்கின்றேன்.

வாக்குமூலம் என்பது வக்கீல்களுக்குப் பிரபல்யமான ஒரு சொல். இந்த வக்கீல் எதனைப் பிரபல்யப் படுத்தி இருக்கின்றார் என்பது அவரது வாக்குமூலத்தை அறிந்த பின்னரே நாம் புரிந்து கொள்ளலாம். நிட்சயமாக அவரது வாக்குமூலம் எல்லோரையும் விடுதலை செய்யும் என்பதே எனது கருத்தாகும்.

நூலுக்குள் நுழைந்த பொழுதுகளில்.......

ஈழத்தமிழர் சமுதாயத்தின் அவலங்களை ஒரு தனிமனிதனாக நின்று உலகிற்கு உணர்த்துவது என்பது மிகவும் இலகுவான விடையம் அல்ல. ஆசிரியரின சமூகப் பார்வை என்பது அவர் வாழும் நாட்டைவிடப் பிறந்த  நாட்டிலேயே சூல் கொண்டுள்ளது என்பது பாராட்டப்படவேண்டிய ஓர் கட்டாய நிலைப்பாடாகும். இலக்கியம் என்பது எக் காலத்தில் எழுகின்றதோ; அக்காலச் சமூகத்தைச் சித்தரித்துக் காட்டும்  கண்ணாடி போன்றது. அந்த வகையில் ஆசிரியர் அவர்கள் காலத்தின் கட்டளையைத்  தன் காலத்தின் கட்டாயமாகப் பதிவாக்கி இருப்பது பலறூற்றாண்டுகளுக்குப் பின்னர் இந்த நூலை வாசிக்கும் ஒருவருக்கு எக்காலகட்டப் பகுதியில் இது எழுதப்பட்டது என்பது வெள்ளிடைமலையாகக் காட்சியளிக்கும். இலக்கணங்களோடு உரசிப் பார்க்காமல், இதயங்களோட உரசி உரசிப்பார்த்து எழுதப்பட்டதாலோ என்னவோ வாசிப்போர் இதங்களில் நண்பர் இராஜாஜி அவர்களது முகமே விம்பம் ஆகின்றது.

காலம் ஒரு மனிதனைக் கருக்கட்ட வைத்து அதன் பிரசவத்தை உலகெங்கம் கொண்டு சென்றிருக்கின்றது என்பதனைத் தெளிவாகப் பிரதினிதித்துவப் படுத்துகின்றது அவரது நூல். வரலாற்றைக் காலமாக்கிக் காலத்தை வாழ்க்கையாக்கி உலகப் பாத்தியில் அவர் நட்டுவைத்த நாற்றுக்களின் நல்ல அறுவடையே இந்த வாக்கமூலமாகும். தேவை கருதிய உற்பத்தியா அல்லது உற்பத்தியின் பின்னான தேவையா என்பதனை வாசகர்களே தீர்மானிக்கட்டும் என்ற விதத்தில் இலக்குவைத்து எய்யப்பட்ட பல அம்புகளுக்குக் கர்த்தாவாக இந்த நூலாசிரியர் தன் உழைப்பால் உயர்ந்து நிற்கின்றார்.

கவிதைப் பொருட்களின் விம்பங்கள் கண்ணைவிட்டு அகலாமல் வாசிப்பவர் மனங்களில் பசுமரத்து ஆணிபோல் ஏற்றுவது என்பதுமிகவும் சாதாரணவிடையம் அல்ல. சங்கம் தொட்டு இன்று வரையுள்ள இலக்கியச் சமுத்திரத்தில் கிளிஞ்சல்களைக் கைப்பற்றி மூச்சத் திணறாமல் தமிழைச் சுவாசித்து அகராதிகளுக்கு அப்பால் தன்னைத்தானே சிருஸ்டித்து விடைகண்டு இருக்கின்றார்.

பதினெண் மேற்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு இரண்டையும் குழைத்து நெடு நல்வாடைக்கு விடைகூறி, குறுந்தொகைக்குள் இந்த நூல் தானாக ஒழிந்து கொள்கின்றது. மரபுக் கவிதைகளை வென்று, மணிப்பிரவாள நடைக்கு மாசற்ற தமிழில் தன்னை நகர்த்தி இருக்கின்றார். ஒவியனால் ஓவியமும், சிற்பியினால் சிலையும் உருவாக்கம் பெறும் வேளைகளில் கவிஞர்களை யார் உருவாக்குகின்றார்கள் என்ற கேள்விவருகின்றது. கவிஞர்கள் தங்களைத் தாங்களே செதுக்குகின்றார்கள்  என்பதனை நிலைநிறுத்துவதற்காகவே காலத்திற்குக் காலம் கவிதைகளை வெளிக்கொணர்கின்றார்கள்.

தென்னை மரத்தில் 6 மாதங்கள் வாழும் ஒரு தென்னம் ஓலையானது தான் வாழ்ந்ததற்கான சுவடதனைத் தன் தாய்மரத்தில் விட்டுச் செல்கின்றது. ஆனால் பல ஆண்டுகள்  இந்தப் பூமியில் வாழக்கூடியமனிதன் எதை விட்டுச் சென்றான் என்ற கேள்வி மனித மனங்களிற் சலனங்களாக இருக்கின்றன. பல நூறு ஆண்டுகளின் பின்னரும் இந்த வழிப்போக்கனின் சுவடுகளைப் பின்பற்றிப் பலர் பாதயாத்திரை செய்வார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

அதிகமாக  நீதிமன்றங்களில் "நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை" என்ற வாசகங்கள் ஒலிப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். இந்த நூலினையும் நான் வாசிக்கின்ற போதுகளில் அந்த இரண்டு சொற்களும் என் காதிற்குள் ஆசிரியரது தாரக மந்திரமாகக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன..

மொழி என்பது தொடர்புச் சாதனம் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனுடைய கருத்துச் சுதந்திரத்தையும் காவிச் செல்லும் ஒரு பாரிய சக்தி ஆகும். மொழியால் காட்சிப்படுத்தப்படும் ஒரு விடையத்திற்கும், நமது ஆழ்மனத்தில் உறைந்து கிடக்கும் தேடல்களுக்கும் தெடர்புகள் அதிகம் உண்டு. ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது அதில் பார்த்த காட்சிகளில் ஒருசிலவே நம் மனத்திரையில் விழுகின்றது. அந்தக் காட்சியுடன் தொடர்புடைய ஒரு விடையம் எற்கனவே நம் ஆழ்மனத்தில் பதிந்திருந்ததுவே அதற்குக் காரணமாகின்றது. ஆனால் "ஒரு வழிப்போக்கனின் வாக்கமூலம்" காட்சிப் படுத்தும் அத்தனை காட்சிகளும் என் ஆழ்மனதில் பதிந்துவிட்டது என்றால் மனிதன் என்ற சமூகப் பிராணியின் தேடல்களுக்கு வழிப்போக்கனின் ஆசிரியர் நல்ல தீனிபோட்டுள்ளார் என்பதையே காட்டி நிற்கின்றது.

இலக்கியத்தில் போதைகொண்டு அடையத் துணிந்த  இலக்குகளில் 34 சிகரங்களை  இயல்பாகவே தாண்டியிருக்கும் இந்த ஆசிரியர் இன்னும் பல சாதனைகள் செய்யவேண்டும் என்பதனைச் சமூகத்தின் அறைகூவலாக இங்கே முன்வைக்கின்றேன்.

"சொல்லுக சொல்லின் பயன் உடைய; சொல்லற்க

சொல்லின் பயன் இலாச் சொல். -(குறள் 200)......

என்ற குறள்கூறும்  வழியில் நின்று இந்தக் கவிஞன் என்ன கூறுகின்றார் என்பதனைப் பார்ப்போம். காதல், மானம், வீரன் என்ற கட்டுக் கோப்பில் வந்த தமிழன் சங்ககாலம் தொட்டு இன்றுவரை ஏனோ தனக்குள் வாளெடுத்துப் பிளவுபட்டான் என்பதனை உண்மை என்று ஒருநிலைப் படுத்தியவர்கள் பழம்தமிழர் என்ற வரலாறு ஒரு பக்கமிருக்கப் போர்க்காலச் சூழலில் அதன் முன்னும், பின்னமாகக் கண்டெடுக்கப்பட்ட பொக்கிசங்கள் மனதைத்தொடும் காட்சிகளாக இங்கே பதிவாக்கப்பட்டிருக்கின்றன.

போர்க் காலத்தில் பங்கருக்குள்ளும், அது ஒய்ந்தகாலங்களில் அகதி முகாம்களிலும் பிறந்து வளர்ந்த குழந்தைகள் சாப்பாடு இல்லாத வேளைகளைத் தங்கள் சாதாரண வாழ்க்கை ஆக்கிய காட்சியை அருமையாகக் கூறியள்ளார்.

அம்மா மெத்தப் பசிக்கிறது

அப்பம் இருந்தால் இப்போ தா

அப்பம் இன்றேல் முத்தம்தா

அதுவே எனக்குப் போதுமம்மா...

விதைகளுக்குள் விருட்சத்தைக்காட்டி; கொம்பாலும் கொடியாலும் தோரணம்கட்டி மகிழ்ந்து, பூக்களுக்கும் கனிகளுக்கும் புத்துயிர் அளித்துத்  தந்தையாய்த்,  தாயாய்த், தெய்வமாய் மரங்களை நேசித்திருக்கின்றார் இந்தக் கவிஞர்.

தாங்கும் தண்டில்

தந்தயைத் துதிப்பேன்

அணைக்கும் கொடிகளில்

அன்னையை நினைப்பேன்

அமைதியின் ஆட்சியில்

இறைவனைக் காண்பேன்.

ஈழத் தமிழர்களுக்குச் சிங்களவர்களால் பிரச்சனை என்றால் இந்தியா வரும் மச்சான் என்று என் பள்ளித் தோழர்களுடன் அந்த நாட்களில் நான் கதைத்து ஆறுதல் அடைந்த நாட்களை எண்ணிப் பார்க்கின்றேன். ஏனோ தெரியவில்லை இந்தியா வரவில்லை. இது ஒருவேதனையான உண்மை. ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்தவற்றைக்கூறி இறுதியில் தமிழகத்தை நையப் புடைத்த துணிவு பாராட்டத்தக்கது.

இங்கே

எமது சரித்திரம் செந்நீரால் எழுதப்படுகின்றது.

தமிழகமே இதை நீ

தெரிந்து கொண்டதாகக் காட்டிக் கொண்டாலே போதும்..(ஓ தமிழகமே)

சமூகப் பின்னணியும், கிராமப்புறப் பின்புலமும் அமைந்து காணப்படுகின்றது "அரசடி வைரவர்" என்ற தலைப்பு. ஒருமுறை அனைவரும் வாசித்துப் பாருங்கள். அதனை இடிக்கவரும் புல்டோசரை நிறுத்துங்கள்

தேசம் முன்னேறுகிறதாம், தெருக்களைப் பெருப்பிக்கின்றார்களள்

புல்டோசர் வருகின்றது பேசாமல் நிற்கின்றாயே!..... (அரசடி வைரவர்)

சங்ககாலத்தில் பகலில் ஒரு பெண் தங்கள் வீடு, கண்ணுக்குத் தெரியும தூரம் வரைதான் வெளியில் செல்லலாம். அதே பெண் இரவு நேரம் என்றால் படலையடி வரைதான் வெளியில் செல்லலாம். அதுவும் ஒரு கூப்பிடு தூரத்திற்குமேல் இருக்கப்படாது. இங்கு "விடுங்கோ ஆரோ வருகினம்" என்ற கிராமியத் தலைப்பும், அதற்குக் கொடுத்திருக்கும் வார்த்தைப் பிரயோகங்களும் படிப்பவர் மனதைப் பாகாக்கி விடுகின்றது.

எப்ப பார்த்தாலும் இழுக்கிறதும், இடுப்பிலை கையை வைக்கிறதும்,

இதுதான் உங்கடை விருப்பம் எண்டால், இப்பவேசொல்லுங்க நான் போறன்....(விடுங்க ஆரோ வருகினம்)

இறைவனைக் கண்டால் என்ற தலைப்பில் 85 கேள்விகளைக் கேட்கத் துணிந்த இந்த மாமனிதரை நான் மதிக்கின்றேன். ஒரு கேள்வியில் திருவள்ளுவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் என்பதனைப் படித்துப் பார்க்குத் அனைவரும் அறிந்து கொள்வார்கள். பெண்களின் கற்பிற்கும் ஒழுக்கத்திகும்  பல அதிகாரங்களை அமைத்த வள்ளுவர்; ஆண்களின் கற்பிற்கு ஒரேயொரு குறளை  மட்டுமே ஆக்கியுள்ளார்.

ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு - குறள் 974

அதாவது ஒரு ஆண்மகன் கற்புள்ள பெண்களைப்போல் ஒழுக்கமாக இருப்பதே அவனுக்குப் பெருமை என்பதே இதன் பொருள்.

இதனையே கவிஞரும் "ஆண்களின் கற்பு உரைத்திடக் கேட்பேன்" என்று இறைவனிடம் உரத்தகுரலில் கேட்பது மிகவும் பாராட்டத் தக்கது.  

நண்பர் ராஜாஜி அவர்கள் போனபிறப்பிலும் கவிஞராகவே இருந்திருக்கின்றார் என்பதைத் தன் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார். மரங்களை ஓரறிவு என்று பழித்தவர்கள் மத்தியில் இவர் மரங்களை நண்பர்களாக்கி நேசித்திருக்கும் பண்பு பாராட்டத்தக்கது.

போன பிறப்பில்

மரங்களைப் பாடாமல்

மாண்டு போனதால்

தேவர்கள் என்னைத்

திருப்பி அனுப்பிவிட்டார்கள்.! (மரங்களை நேசிப்போம்).

போன பிறப்பில் மட்டுமன்றி, நீங்கள் எல்லாப்பிறப்பிலும் கவிஞராக இருக்கவேண்டும் என்பதே என் வேணவாவாகும்.

தொட்ட  இடம் எல்லாம் துலங்குவதுபோல் இவர் கை பட்ட இடமெல்லாம் நூல் முழுக்கத் தளிர்விட்டிருக்கும் புதுமை இவருக்கு எங்கிருந்து கிடைத்த புலமையோ தெரியவில்லை.  

இந்த நூலைத் தலைப்பாகக் கொண்ட "ஒரு வழிப்போக்கனின் வாக்கமூலம்" என்ற பதிவில் சிறிலங்கா அரசியலில் பௌத்ததத்துறவிகளே அரசை ஆழுமை செய்கின்றார்கள் என்பதை மிகவும் நாசூக்காகக் கூறி வாசிப்பவர்களை உணர்வின் விழிம்பிற்கே நகர்த்திச் சென்றிருக்கின்றார் கவிஞர்.

புத்தர்

நீ அரச பதவியைத் துறந்த

துறவறம் பூண்டாய்

ஆனால் இங்கே

துறவறம் பூண்டவர்கள்தான்

அரசியலை நடத்துகின்றார்கள். .... ஆணித்தரமான உண்மை இது.

காளமேகப் புலவர் காலத்துச் சிலேடைகளுக்கு இங்கே பஞ்சமில்லை. கல்யாணம் கட்டியவர் கடிவாளம் எவர் கையில் இருக்கிறது.

தட்டிவான்,  தோசைக்கடை, பருத்தித்துறை வடை, போன்றவை ஜனரஞ்சகப் போர்வைக்குள் இங்கு பத்திரமாகப் பேணப்பட்டுள்ளன.

எந்தக் கவிதையை எடுத்து எப்படிப் பார்த்தாலும் தராசுத் தட்டின் நிறை எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியே இருக்கின்றதன. எதை எடுக்க, எதை எழுத என்பதைத் தீர்மானிப்பதற்கே பல தேர்வுகளைச் செய்ய வேண்டி இருக்கின்றது. ஒவ்வொரு கவிதைகளாகச் சொல்லி அவற்றின் மூலத்தைத் பதிவாக்கவேண்டும் என்ற அவசியம் இந்தக் கவிதை நூலுக்குத் தேவை இல்லை. அனைத்துத் தலைப்புகளும் எடுத்துக்கொண்ட பொருளுக்குப் பொன்னாடை போர்த்து நிற்கின்றன.

நண்பர் ராஜாஜி அவர்களின்  இந்த நூலுக்கு இப்படி ஒரு சிறிய விளக்கத்தை எழுதுவதை நான் பெருமையாக நினைக்கின்றேன். அவர் மேலும் பல பொக்கிசங்களை வெளியிட வேண்டும். அதுமட்டுமன்றி அரிய, பெரிய புலமைப் பரிசில்களையும் அவர் பெறவேண்டும் என்பதனை எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மனம்  மகிழ்கின்றேன். வளங்கள் பல பெற்று,  வான் முட்டும் சிறப்படைந்து வாழ்க வாழ்கவென இதயத்தால் வாழ்த்துகின்றேன். வளரி எழுத்துக் கூடத்தினருக்கும் எனது நன்றிகள்.

அன்புடன்

கங்கைமகன் 

27.04.2015

வெறும் மனிதர்கள்- வீரகேசரி 1978

இரு மலர்க்கரங்கள் என்முன்னால் நீண்டன.

எனக்கு மிகவும் பழக்கமான கரங்கள்.

பால்போன்ற வெள்ளைக் காகிதத்திலான ஒரு உறை அந்தக் கரங்களைத் தொட்டிலாக்கி மெத்தெனப் படுத்திருந்தது. எழுந்து நின்று இரு கைகளாலும் பெற்றுக்கொண்டேன்.

நன்றி, சியாமளா. இப்படி உட்காருங்கள்.

சியாமளா என் எதிரேயிருந்த கதிரையில் அமர்ந்தாள்.

நான் இன்னும் அவள் முகத்தை நிமிர்ந்து நோக்கவில்லை. நோக்கவேண்டிய தேவையோ துணிவோ எனக்கு இருக்கவில்லை. அந்த முகத்தில் தொன்றும் அழகை ஆறுதலாய் நின்று பருகி அனுபவிக்கும் உரிமை என்னிடமிருந்து எப்போதோ கை நழுவிப்போனதொன்று. அழகை அதற்கென்ற உரிமையோடு அனுபவிப்பதில்தான் நியாயம் இருக்கிறது. கள்ளமாக எனக்குள்ளேயே அதை அசைபோடுவேனென்றால் அந்த அழகின் தூய்மைதான் குறைந்துவிடாதோ?

இது எனது திணைக்களத்தில் எனக்கென்று ஒதுக்கப்பட்ட தனி அறை. என் முன்னால் ஒரு பெரிய மேசை இருந்தது. பளிங்குபோல் வர்ணம் அடிக்கப்பட்ட மேசையில் எல்லாமே ஒழுங்காக இருந்தன. ‘பேப்பர் வெயிட்’ முதல் எல்லாமே ஒரு அமைதியான ஒழுங்கு. என்னையே நான் மாற்றிக்கொண்டபிறகு எனது சுற்றாடலையா மாற்றிக்கொள்ள முடியாது?

எனது எதிர்பாராத விருந்தாளியுடன் நான் இன்னும் எதுவுமே பேசவில்லை. சியாமளா என் பின்னால் இருந்த சுவரில் சாய்ந்து தொங்கிய ஒரு நவீன ஓவியத்தையோ அல்லது பக்கத்து யன்னலூடாகத் தெரியும் வானத்தில் வழுக்கியோடும் மேகச் சிதறல்களையோதான் அந்த ஓரிரு விநாடிகளுக்குள் பார்த்து நேரத்தைச் சமாளித்துக் கொண்டிருக்கவேண்டும். அவளுடைய முகத்தில் தோன்றிய அமைதியும் தூய்மையும் என் மேசையின் மேற்பரப்பில் துல்லியமாய்த் தெரிந்தன. அந்தப் பிம்பத்தில் நான் ஐக்கியமாகிவிட்டேன். அதன் பிரதிபலிப்புகள் என் நெஞ்சில் எத்தனை நளினமான மயக்கத்தை உணர்த்தினவோ! இதுவும் ஓரிரு விநாடிகளுக்குள்தான்.

“சத்யம்!” இனிய நாதத்தில் தோய்த்த ஒளிப்பிசிறுகள்...

அந்த அழைப்பு என்னுள் நிறைந்ததும் நான் நிமிர்ந்துகொண்டேன். அவள் குரலில் தோய்ந்திருக்கும் பிரேமையை என்னுடைய பெயரை அழைக்கின்றபோது மட்டுமே கேட்டு அனுபவிக்க முடியும். அத்தனை ஆழமாக, இதயத்தின் பரிபூரண நிறைவாய்ப் பரிணமிக்கக்கூடிய வேறு ஒரு சொல் எதுவும் அவளிடத்தில் கிடையாது என்பதை நன்கறிந்திருந்தேன். இந்த ஒன்றே என்னுடைய கர்வத்துக்குப் போதுமானது - ஒரு அழகிய, அறிவுள்ள பெண்ணின் காதலைப் பெற்றவன் என்ற கர்வம். அப்படி அவள் அழைக்கின்றபோது எனக்குள் ஏற்படும் ஒவ்வொரு கால அணுக்களையும் அனுபவிப்பதில் நான் கொள்ளும் கர்வம் என்னிடம் இன்றிருக்கும் எல்லாக் கர்வங்களிலும் பார்க்க உயர்ந்தது.

அவளின் இதழ்கள் எதையோ கூறுவதற்குத் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தனவென்றே நினைத்தேன். எனக்குள்ளேயிருந்த அத்தனை ஆவலையும் திரட்டி அவளை நான் நோக்கினேன். ஒரு கணத்துக்குள் ஆயிரமாயிரம் அர்த்தங்களைச் சிருஷ்டித்தபடி அவை அப்படித் துடித்தனபோல் தோன்றின. என் ஆவலின் உத்வேகம் அதிகரித்தது. ஆனால் அவளின் இரக்கமற்ற இதழ்கள் ஒரேயொரு புன்முறுவலோடு என் தாபத்தைச் சிதறடித்தன. நான் ஆண்மகன்; திரும்பவும் மௌனியாகிவிடலாமா? ஏதாவது பேசவேண்டும்; பேசி அவளையும் பேசவைக்கவேண்டும்.

“சியாமளா. உங்கள் முன்னால் இந்த உறையை நான் திறக்கலாமா?” இப்போது அவள் இமைகள் மூடிக்கொள்ளச் சிரித்தாள். ஒளி சிந்தும் பற்கள் நிரையில் நின்று வெண்கோலமிட்டு விளையாடுவதுபோலிருந்தது.

அந்தச் சிரிப்புக்கு என்ன பொருள் இருக்கும்? இப்போதெல்லாம் அவளிடம் அந்தப் ‘பொல்லாத சிரிப்பை’ முழுமையாகக் காணமுடியாவிட்டாலும் என்னுடைய சில கேள்விகளுக்குப் பதில் கூறும்போது சொற்களுக்குப் பதிலாகச் சிரிப்பினால் அந்த விடையைப் பூரணப்படுத்தும் வேளையில் அந்தப் பொல்லாத்தனம் சிரிப்பின் ஓரிரு இடங்களில் எப்படியோ புகுந்துவிடும். ஒரு காலத்தில் அந்தச் சிரிப்பின் முழுமையான சிருங்காரத்தில் திளைத்து அதிலேயே நான் அமிழ்ந்து போனதற்காகவேனும் என் பிரியத்துக்குரிய அந்தப் பொல்லாத சிரிப்பின் ஒரு சிறு சிதறல்களையாவது இப்போது காட்டமாட்டாளா என்று நான் ஏங்கிப்போய்த் தவித்தேன்.

மூடிய விழிகளை நோக்கினேன், அவை மூடியபடியே இருந்தன.

என் விரல்கள் தாமாகவே உறையைப் பிரித்தன. பிரிக்கும்போது உறையின் முகப்பைக் கவனித்தேன். எனக்கு மிகவும் அறிமுகமான கையெழுத்துக்கள் – ஒரு குழந்தையின் பிஞ்சு உள்ளத்தில் எழும் ஞானச் சுடர் விரல்களின் வழியே ஊர்ந்து கோணலும் கோடுகளுமாக, ஒன்று இன்னொன்றை விழுங்கிவிடும் சிறுத்த, பருத்த உருவங்களாக உருப்பெறுவதுபோல் இருக்கும் எழுத்துக்கள் – எதுவுமேயில்லை. முகப்பு வெண்மையாய், வெறுமையாய்த்தான் இருந்தது.

என் விரல்களின் பிடிகளில் அகப்பட்டு, உறையின் ஓரங்களை உராய்ந்து நெருக்குண்டு, முதல் ஒரு பாதியும் பிறகு ஒரு பாதியுமாக வெண்ணிறத் தடித்த திருமண அழைப்யொன்று இரண்டாக மடிக்கப்பட்ட நிலையில் வெளிவந்தது. அதன் முகப்பில் பிணை மானொன்று தனியே நின்றபடி புல் மேய்ந்துகொண்டிருந்தது. சிறிய படம், மிகவும் வேலைப்பாடான அச்சடிப்பு. நான் அட்டையைப் பிரிக்காமலே அப்படத்தில் தோன்றிய குறைபாட்டை நினைந்து என்னையே வருத்திக்கொண்டேன். ஒரு பெண் மான் தனிமையில் நிற்பதா? இதைக் கண்டு யார் மனம்தான் வாடாது? அதை உருவாக்கிய கலைஞனின் கற்பனையில் இப்படியானதொரு சிறுமை தோன்றலாமா?

“சியாமளா, இந்தப் பிணையோடு ஒரு கலையும் சேர்ந்திருந்தால் இன்னும் எவ்வளவோ இயற்கையாக இருக்கும் இல்லையா?” இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கக்கூடாது. ஆனால் அது அந்தக் கணத்தில் தவிர்க்கமுடியாமற்போய்விட்டது. சில விஷயங்களில் நான் அவசரப்படுவதிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது.

சியாமளா ஏனோ மறுபடியும் தலை குனிந்துகொண்டாள். “மிருகங்களிடமிருக்கும் அரிய பண்புகளோடு வெறும் மனிதர்களை நீங்கள் ஒப்பிடப்பார்க்கிறீர்கள், சத்யம்.” வழக்கமான அவளுடைய தர்க்க ரீதியான உரையாடல் இந்த இடத்தில் அவளையறியாமல்தான் வந்திருக்கவேண்டும். அதைத் தொடர்வதற்கும் அதிலிருந்து அவளின் புதிய கருத்துக்களுக்கு என்னிடமுள்ள தேவையைப் பூர்த்திசெய்வதற்கும் உண்டான சந்தர்ப்பத்தை நான் உடனேயே பயன்படுத்திக்கொண்டேன்.

வெறும் மனிதர்கள்! மனித உள்ளத்தால் என்றுமே அணுகிவிடமுடியாத ஆழ்ந்த பண்பின் செறிவை மிருகங்களிடம்தான் காணமுடியுமென்று எண்ணுகிறாளோ? எனக்குள்ளேயே நான் அசைபோட்டுக்கொண்டேன்.

“வெறும் மனிதர்கள் என்று குறிப்பிடுகிறீர்களே, பணமும் கல்வியும் மற்ற வாழ்க்கை வசதிகளும் இருந்தும் மனதால் வெறுமையாய்ப்போய்ப் பொருளற்ற லட்சியத்தைச் சுமந்துகொண்டு ஓயாது வாழ முனைபவர்களைத்தானே அப்படிக் கூறுகிறீர்கள், சியாமளா? நாம் இருவரும்கூட...”

அவள் இப்போது என்னை நிமிர்ந்து நோக்கினாள். ஆழ்ந்த சமுத்திரப் பரப்பொன்று என் முன்னால் விரிந்து அதன் மத்தியில் சுழன்றோடும் நீரோட்டத்தில் என்னை முழுமையாய் விழுங்கிவிடுவதுபோன்று அந்த விழிகளில் என்னால் விளங்கிக்கொள்ளமுடியாத பல புதிர்கள் தொற்றி நின்றன. நான் என்றைக்குத்தான் அவளுடைய கேள்விக்கு முறையாகப் பதில் சொன்னேன்?

அவள் உள்ளத்தை நான் படிப்பதெல்லாம் அவள் பேசுகின்ற ஓரிரு விநாடிப் பொழுதுகளில்தான். அவள் மௌனமாய் இருக்கும் வேளைகளில் அது எப்படி முடிகிறது? நான்தான் பேசிக்கொண்டிருப்பேனே! ஆனால் சியாமளா இதற்கு நேர்மாறானவள். நான் மௌனமாய் இருக்கும் வேளைகளில் என் அந்தரங்கமெல்லாம் அவளுக்கு மனப்பாடமாகிவிடும். எந்தத் தலைபோகும் தனிப்பட்ட காரியங்களையும் அலுவலகத் தொந்தரவுகளையும் மறந்து அவள் முகத்தையே என் கண்கள் வட்டமிட, இம்மலர்க் கரங்களை எடுத்து என் கண்களில் மாறிமாறி ஒற்றி... ஓ, இக்கரங்கள்தானே அவை? அவற்றுக்கு நான் இன்னும் அந்நியனாகிவிடவில்லையே!

நான் உடனே எழுந்து நின்றுகொண்டேன். அவ்விழிகளிலும் என்னை நோக்கி உயர்ந்தன. எழுந்தாலும் நடந்தாலும் மறைந்தாலும் அவ்விழிகளின் வீச்சில் நான் வெந்து மடிந்துவிடவேண்டியதுதானா? கூரிய கத்தியால் என் இதயச் சதைகளைப் பயங்கரமாகக் கீறிவிடுவதுபோல் இந்தச் சந்திப்பு ஏற்படுத்திய வெம்மையைத் தகிக்கமுடியாது யன்னலை நோக்கித் திரும்பினேன்.

யன்னல் திரைச்சேலையின் மேலாக வேளியே நிமிர்ந்து நின்ற நகரத்தின் ஒரு பகுதி அன்றைய அவசர உலகைக் கண்டு அலுத்து ஓய்ந்த நிலையில் ஓய்வெடுக்க முனைந்துகொண்டிருந்தது. அந்த நாட்களிலும் இன்று போன்றே யோர்க் வீதியில் ஓய்வில்லாத சன நெருக்கடி. இங்கிருந்து நினைத்தாலே அந்த வீதியின் விசாலமும் சலசலப்பும் மனதைச் சுகப்படுத்தும். அச்சூழலைச் சாதகமாக்கிக்கொண்டு எங்கள் உரையாடலும் நெருங்கியபடியே இருவர் கைகளும் அடிக்கடி ஒன்றையொன்று அடிக்கடி உராய்ந்துகொள்ள, அந்த உராய்வின் ஸ்பரிசத்தில் ஏற்படும் மனக் கிளுகிளுப்போடு அந்த மனித நெரிசலினூடே ஒரே கதியில் வீதியைக் கடந்து ஓரமாய் நிற்கும் பஸ் தரிப்பிடத்துக்கு வரும் வரைக்கும் ஒரு தலைமுறைக்கால உறவையும் அதன் இனிமையையும் நாம் அனுபவிக்கத் தவறியதில்லை. அந்தச் சந்திப்புகளும் மங்கிய ஒளி சிந்தும் தேனீர்க்கடைகளின் மூலையில் மணிக்கணக்காக அமர்ந்து பேசித் தீர்த்தவையெல்லாம் இன்று வெறும் பேச்சாகிவிட்டனதானே!

யன்னலுக்கு அப்பால் நினைவுக்கு எட்டாத வெளியில் நினைவுக்கு எட்டும் நிகழ்ச்சிகள் முகிற் கூட்டங்களாக....

அதோ எவரையும் நிமிர்ந்து நோக்கவைக்கும் தோற்றத்தோடும் நெகிழ்ந்து பணியவைக்கும் உள்ளத்தோடும் எந்த உறவையோ உபகாரத்தையோ எதிர்பார்க்காமல் உதவுகின்ற நெஞ்சாக உட்கார்ந்துகொண்டிருக்கிறாரே, அவர்தான் மிஸ்டர் ரங்கநாதன். அவர் சியாமளாவுக்கு மாத்திரம் தந்தையல்ல, என்னைப்போல் உழைப்பால் உயரத்துடிக்கும் இளைஞர்களுக்கெல்லாம் தந்தை போன்றவரென்றுதான் சொல்வேன். நான் அவளைக் காணவேண்டுமென்று சென்று அதுவே அவரைக் காண்பதில் ஒரு நிறைவைக் காண்பதாக என்னை ஆக்கி அவரின் குடும்பத்தில் என்னை ஒருவனாக்கியது. என்றைக்கெல்லாம் அவரைச் சந்திக்க நேரிடுகின்றதோ அப்போதெல்லாம் இனியும் அப்படிச் சந்திக்கவேண்டுமென்று ஏக்கமே கொள்வேன்.

எனக்கும் கண்ணியமான அவர் குடும்பத்திற்கும் இடையேயுள்ள கடைசிச் சந்திப்பாக இது இருந்துவிடுமென்றோ அவர் உணர்ந்து நாளெல்லாம் ஊட்டி வளர்த்த எமது நட்பு ‘இதோ இல்லை’ என்று ஆகிவிடுமென்றோ எப்படி நான் அப்போது எதிர்பார்த்திருக்கமுடியும்?

தெருவிலும் திண்ணையிலும் அறிமுகமான நாலு மனிதர்களின் சாதாரணக் கண்கள் சந்தேகக் கண்களாக மாறிய பின்னரும் அதிலிருந்து எழுகின்ற அபிப்பிராயங்களுக்கு மதிப்பளிக்கவேண்டுமென்ற எண்ணம் சியாமளாவுக்கும் எனக்கும் உருவாகுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்க முன்னரே ரங்கநாதனின் ஆதரவான உள்ளத்தில் எனது அன்பை அடைக்கலமாக வைத்திருந்தேன். கடைசியில் அவருடைய உள்ளமே எவ்வளவு வேதனைக்கிடையில் இந்த முடிவை எடுக்கவேண்டி வந்திருக்குமென நினைத்து நானே அவருக்காக வருந்தினேன்.

அன்றைக்கு என் வரவை நோக்கித்தான் அவரும் சியாமளாவும் காத்திருந்தனர். ஆனால் அந்தச் சந்திப்பு நம் எல்லாருக்காகவும் ஏற்பாடு செய்த்துபோலவும் அதன் விளைவுகள் மட்டும் என் ஒருவனின் வாழ்விலேயே ஊன்றி நிற்பதுபோலவும் என் மனம் அலையுண்டது.

“சத்யம், எனது மகளின் மனதுக்கு நிறைந்தவராக நீர் கிடைக்கப்போகிறீர் என்பதிலும் பார்க்க உமது அறிவையும் திற்மையையுமே பெரிதாக நினைத்து எனக்குள்ளேயே மகிழ்ந்து கொண்டிருந்தேனே! இதையே இந்த உலகத்துக்குக் கூறிப் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாத அளவுக்கு இப்போது நான் கோழையாகிவிட்டேன்.”

அப்படி அவர் கோழையாகவேண்டி வந்ததின் காரணம் எனக்கே தெரியுமே. அந்த ஒரு காரணத்தை எவரும் இலகுவாக மறந்துவிட முடியும் என்று நம்பித்தானே நான் அவர்களோடு உறவாடினேன். நான் ஒரு அநாதை என்ற உண்மை அப்படி என்ன பெரிய பிரச்சனை. அனால் நான் அநாதையாய்ப் போனதன் காரணமே அவர் கொழையாய்ப் போனதன் காரணமாகிவிட்டது. அவ்வளவுக்கு நான் ஆழ்ந்து யோசித்திருந்தால் அன்பு செய்தாலும் நான் ஏமாற்றப்படுவேன் என்று அப்போதே என்னால் உணர்ந்திருக்கமுடியும். அப்படிப் பலாத்காரமாக என் இளம் வயதில் புகுந்து என்னை அநாதையாக்கிய சம்பவங்களை அவருக்கு நானே ஒருமுறை கூறியிருந்தேன்.

நான் சிறுவனாகப் பெற்றோரோடு கிராமத்தில் வாழ்ந்தபோது அது நிகழ்ந்தது. எங்கள் வீட்டுக்கு மிக அருகேயிருந்த அயலவர்களுக்கிடையே திடீரென்று எழுந்த பூசலையும் அதில் என் தந்தையும் சம்பந்தப்பட்டு எங்கள் குடும்பமே கலங்கியதையும் என்னால் முற்றிலும் நினைவுக்க்குக் கொண்டுவர முடியவில்லை. அன்றைய இரவு எனது தந்தை தன் கோபத்தின் தீராப் பசியைத் தீர்ப்பதற்காக ஒரு உயிரையே பலிகொண்டு உதிரம் வழியும் கத்தியோடு வீட்டுக்கு வந்த தோற்றம் மட்டும் இன்றைக்கும் என் மனதில் பசுமையாக நிற்கிறது. அவரோடு கூடவந்த பழியும் பாவமும் எங்களோடு தங்கியிருக்க அவர் மட்டும் இரவோடு இரவாக எம்மைப் பிரிந்து சென்றதை நினைக்கும்போதும் அவரைப்போலவே நான் ஆகிவிடக்கூடாது என்று அஞ்சி அல்லும் பகலும் என்னை உருவாக்குவதற்கே தன்னை அர்ப்பணித்து மறைந்த அன்னையை நினைக்கின்றபோதுபோதும் இன்றும் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் என் தந்தையை சந்திக்கின்றபோதும்தான் நான் ஒரு அன்புக்கு ஏங்கும் அநாதை என்ற உணர்ச்சி என்னுள் மேலோங்குகிறது.

பிரத்தியட்ச வாழ்வில் அந்த நிலையை மறக்கவேண்டிக் கட்டாயப்படுத்தப்பட்டதே இந்தச் சியாமளாவால்தானே! இனியும் அநாதையென்ற அந்தப் பெயரையே நித்தியமாய் நான் பூண்டிருக்க இந்த உலகம் வற்புறுத்துகின்றது. ரங்கநாதனின் முடிவு இதன் அடிப்படையிலேயே எழுந்தது என்று அவர் கூறி எனக்குத் தெரியவேண்டிய தேவைதான் என்ன? என்றாலும் அவரின் ஆதரவான சொற்கள் வெறும் சொற்களல்ல.

“சத்யம், நீரும் நானும் சியாமளாவும் நினைப்பதுதான் இந்த உலகத்தின் நினைப்பு என்று நாம் எண்ணி ஏமாந்துவிடக்கூடாது. நாலு பேரின் கேள்விக்குப் பதில் சொல்லுகின்ற சக்தி நம்மிடம் இருக்கலாம். அதையே நிரந்தரமாக நாம் சொல்லிக்கொண்டிருக்கமுடியுமென்றால் அதை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு இந்தத் தலைமுறைக்கு அவ்வளவு ‘றிசெப்டிவ் மைன்ட்’ கிடையாது. இதை வரவேற்கும் நாலாவது மனிதரே இனிமேல்தான் பிறக்கவேண்டும்.

“காதல், பாசம் என்பவைபோன்ற மனம் விளைவிக்கும் உறவுகளுக்கு முன்னால் பலமிழந்து உயிரையே தியாகம் செய்கின்றவர்களைச் சாதாரண மனிதர் மத்தியில்தான் காணமுடியும். நீங்கள் இருவரும் படித்தவர்கள், எதையும் புரிந்துகொள்ளக்கூடியவர்கள்.”

இன்று எனக்கு ரங்கநாதனுடனுள்ள தொடர்பே மனத்தளவில்தான். அந்த உயர்ந்த உள்ளத்தோடு சியாமளாவும் நானும் நிறையவே போராடியிருக்கலாம். அன்பு என்பது அஹிம்சையின் பாற்பட்டதேயொழியப் புரட்சியின் வடிவமல்லவே!

நான் யன்னலைவிட்டு மீண்டேன். அவளின் விழிகள் என்னை எவ்வளவு நேரமாக அளந்துகொண்டிருந்தனவோ! இனி நான் அந்தப் பார்வைக்குப் பணியவேண்டியதில்லையென்ற முடிவுடன் இருக்கையில் அமர்ந்தேன். அவள் எழுந்துகொண்டாள்.

“சத்யம், நான் போகிறேன்...” இனிய நாதத்தின் ஒலிப்பிசிறுகள் வாசல் கதவுகளையும் தாண்டி மெள்ள மெள்ளக் கரைந்துகொண்டன.

சியாமளா சென்று மறைந்து எவ்வளவோ நேரம் வரைக்கும் அவளிருந்த இடத்தில் மேசையின் மேல் சிதறிப்போய்க்கிடந்த நீர் முத்துக்களை என் கண்கள் வேதனையுடன் வெறித்தவண்ணமிருந்தன.

Wednesday, July 9, 2025

மதனசிங்கம் என்ற ஒரு இங்கிலிஸ் டைப்பிஸ்ட்

January 7, 2020


“ராஜகோபால், நீர் அலுவல் பார்த்து அனுப்பின டைப்பிஸ்டுக்கு டைப்ரைட்டரே என்னெண்டு தெரியாது.”

“ஆரைச் சொல்லுறியள், சேர்?”

“வேறை ஆர்? மதனசிங்கத்தைத்தான் சொல்லுறன்.”

மன்னார் கல்வித் திணைக்களத்திலிருந்து கொழும்பிலுள்ள கல்வி அமைச்சுக்கு மாறி வந்த தலைமை எழுதுவினைஞர் தர்மராசா தலையில் அடித்துச் சொன்ன செய்தி இது.

மதனசிங்கம் எங்கள் வீட்டுக்குப் பின்னாலுள்ள தெருவில் வாழ்ந்தவர். என்னிலும் பத்து வயது மூத்தவர். பள்ளிக்கூட நாட்களில் எனக்கு“வொல்லி போல்” பழக்கியவர். எங்கே கண்டாலும் அன்பாய்ப் பழகுபவர். அவர் ஒரு உள்ளூர் பள்ளிக்கூடத்தில் இரவு நேரக் காவலாளியென்னும் கடை நிலை ஊழியராகக் கடமையிலிருந்தார். சம்பளம் பத்தாது, நாலைந்து பிள்ளைகள். குடும்பம் சிரமப்பட்டது. நான் ஊருக்கு விடுமுறையில் வந்தபோது காண வந்தார். வந்து அரை மணியாகிவிட்டது, எதற்காகக் காண வந்தாரெனச் சொல்லத் தயங்கியபடி இருந்தார்.

“என்னண்ணை, ஏதேனும் சொல்ல வந்தியளோ?” என்று நானாகக் கேட்டபிறகே சொன்னார்.

“தம்பி, என்ர உத்தியோகம் என்னெண்டு தெரியும்தானே, நீங்கள் கல்வி அமைச்சிலை இருக்கிறியள், எனக்கு வேறை நல்ல ஒரு உத்தியோகம் எடுத்துத் தந்து வழி காட்டவேணும். உங்களைக் கடைசிவரை மறக்கமாட்டன்.”

நான் கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்தேன். இவர் இப்போது கடை நிலை ஊழியர். எடுத்தவுடன் தூக்கி இன்னொரு நல்ல வேலையில் போட முடியாது. இவராக முயற்சித்துப் போகக்கூடியவரும் இல்லை. இவருடைய மட்டத்தில் உள்ளவர்களை அடுத்த உயர்தரத்திலுள்ள உத்தியோகத்துக்குப் பதவி உயர்த்துவதற்கென ஒரு பரீட்சை இருந்தது. அதில் தட்டெழுத்தாளர் பிரிவும் இருந்தது.

“அண்ணை, நீங்கள் டைப் அடிப்பீங்கள்தானே?”

“டைப் அடிக்கிற மெசினைக் கண்டிருக்கிறன்.”

“அப்ப ஒரு வழி சொல்லுறன் செய்து பாருங்கோ.”

“அதுக்கென்ன, தம்பி சொல்லுங்கோ, கட்டாயம் செய்வன்.”

“குல்லா வேலுப்பிள்ளையன்ர டியூட்டறியிலை இங்கிலிஸ் இல்லாட்டில் தமிழ் டைப்பிங் திறமாப் பழகிப்போட்டு கவுன்மென்ட் சோதினை எடுங்கோ. அதிலை பாஸ் பண்ணினால் டைப்பிஸ்ட் வேலைக்குப் போகலாம். சம்பளமும் ரண்டு பங்கு கிடைக்கும்.”

மதனசிங்கம் அண்ணை யோசிக்காமலே சம்மதித்துவிட்டார். அந்தக் கிழமையே குல்லா வேலுப்பிள்ளையின் டியூட்டரியில் இங்கிலிஸ் டைப்பிங் படிக்கப் போய்விட்டார். அடுத்த சில மாதங்களில் கடை நிலை ஊழியர் பதவி உயர்ச்சிச் சோதனைக்கும் விண்ணப்பித்துத் தோற்றிவிட்டார்.

திரும்பவும் நான் விடுமுறையில் ஊருக்குப் போனபோது என்னைக் காண வந்தார்.

“எப்படி அண்ணை, சோதினை நல்லா செய்தீங்கள்தானே?”

“அது தம்பி, குல்லா சோதினைக்குத் தந்த மெசின் கொஞ்சம் பழசு. அதாலை மிச்சம் ஸ்லோவாகத்தான் அடிச்சனான். அதுதான் யோசிக்கிறன்.”

எனக்கு விளங்கிவிட்டது. அண்ணை சோதினைக்குப் போய் மெசினில் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடித் அடித்துப்போட்டு வந்திருக்கிறார்.

“உங்களுக்கே திருப்தி இல்லைபோலை தெரியுது.”

“ஓம் தம்பி, நான் சோதினை துப்பரவாகச் செய்யவில்லை. அங்கினைக்கை ஏதேனும் செய்து என்னை பாஸ் பண்ணச் செய்யவேணும். புட்டளையான் (புற்றளைப் பிள்ளையார்) உங்களைக் கைவிடமாட்டார்.

கடைசியில் புட்டளையான் என்னை மட்டுமில்லை அவரையும் கைவிடவில்லை. அண்ணை சோதனை சித்தியடைந்து முதன் முதலாக மன்னார் கல்விக் கந்தோரில் இங்கிலிஸ் டைபிஸ்டாக வேலையில் சேர்ந்துவிட்டார்.

இப்போது எங்கள் தலைமை எழுதுவினைஞர் தர்மராசாவுக்குப் பதில் சொல்லித் தப்பவேண்டும்.

“ஏன் சேர், என்ன பிரச்சனை?”

“என்ன பிரச்சனையோ? நீர் அலுவல் பாத்து அனுப்பின மதனசிங்கத்துக்கு டைப்ரைட்டரே என்னெண்டு தெரியாது என்டு சொன்னன்.”

“அப்பிடியே சங்கதி?”

“பின்னை என்ன? அதோடை அவரன்ர வேலையை மற்ற ஆக்கள்தான் செய்யவேண்டிக் கிடக்கு.”

“பாவம் சேர், நல்லா முட்டுப்பட்ட குடும்பம்.”

“ஆனால் என்ன தெரியுமே, அவையள் செய்யவேண்டிய வெளி வேலையெல்லாத்தையும் மதனசிங்கம்தான் செய்து குடுக்கிறார். கந்தோரிலை தேத்தண்ணி போட்டுக் குடுத்தாலென்ன, அவையளுக்குத் தேவையான அரிசி, மீன், மரக்கறி, போத்தில் போலை சாமான்கள் வாங்கக் கடைக்குப் போனாலென்ன, சைக்கிள் திருத்தினாலென்ன, ரயில் டிக்கட் வாங்கினாலென்ன அத்தினை அலுவலையும் அவர்தான் செய்து குடுக்கிறார்.”

“பிறகென்ன சேர், இப்பிடியொரு நல்ல மனிசன் டைப்பிஸ்ட் சோதினையிலை எடுத்த பதினைஞ்சு மார்க்ஸ் எழுவத்தைஞ்சாக மாறாட்டில் புட்டளைப் பிள்ளையார் பார்த்துக்கொண்டிருப்பாரோ?”

Monday, February 7, 2022

'நாராயணபுரம்' நாவல் பற்றிய எனது வாசிப்பனுபவம்

 'எங்கட புத்தகங்கள்' சஞ்சிகையின் ஒக்டோபர் 2021 இதழில் பிரசுரமாகியிருந்த, ராஜாஜி ராஜகோபாலன் அவர்களின் 'நாராயணபுரம்' நாவல் பற்றிய எனது வாசிப்பனுபவம்.

November 30, 2021

குலசிங்கம் வசீகரன்.
ராஜாஜி ராஜகோபாலனின் 'நாராயணபுரம்' நாவலோடு கடந்த இரு தினங்களாகப் பயணித்துவந்தேன். உண்மையில் 1975 - 80 காலப்பகுதியில் பயணித்தேன் என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும், அதுவும் நான் பிறந்து வளர்ந்த ஊரான பருத்தித்துறை, புலோலி, வல்லிபுரக்குறிச்சி ஆகிய ஊர்களில் இந்த பயணம் அமைந்திருந்தது. முத்துவேலர், அவர் மகன் தேவன் ஆகியோரோடு நானும் ஒருவனாக மீண்டும் எம் ஊரில் உலவி வந்தேன்.

பருத்தித்துறை முதல் வல்லிபுரக்குறிச்சி வரையான பிரதேசத்து வாழ்வியலை தான் படைத்த கதாபாத்திரங்களினூடாக மிக சிறப்பாக கூறிச்செல்கிறார். பேச்சு வழக்கில் இருந்து, வாழ்க்கைமுறை, சாதியம், கலை, பக்தி, வருமான ஏற்றத்தாழ்வு என்று பல விடயங்களையும் நாவல் ஊடாக பேசியிருப்பதால், தனியே இது ஒரு புனைவு வடிவம் என்று மட்டும் அல்லாமல் வாழ்வியல் பதிவாகவும் இந்த நாவல் அமைந்து விடுகிறது. சிறுவன் தேவன் தந்தையாகி தனது பிள்ளைகளை உயர்கல்வி கற்க வைப்பதோடு நாவல் நிறைவுபெற்றாலும், மூன்று தலைமுறைகளின் காலத்தை, அந்தந்த காலகட்டங்களில் ஊரில், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மட்டுமல்லாமல், வாழ்க்கைமுறை, பொருளாதாரம், என அனைத்து மாற்றங்களையும் ஆசிரியர் நாவலினூடாக தொட்டுச்சென்றிருக்கிறார்.

ராஜாஜி ராஜகோபாலன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பான ‘குதிரை இல்லாத ராஜகுமாரன்’ இல் அவரது எழுத்து என்னை கவர்ந்திருந்தது மட்டுமல்லாமல், குறித்த காலக்கட்டத்தில் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளமுடியாது முற்போக்கான விடயங்களை தனது எழுத்துநடையால் மிக நளினமாக தனது கதாபாத்திரங்களைக் கொண்டு நடத்திக்காட்டியிருப்பார். அதுபோல் இந்த நாவலிலும் பல விடயங்களை அவர் இயல்பாக பேசியிருக்கிறார்.

நாராயணபுரம் நாவலாக எனக்கு தெரியவில்லை, தேவன் என்கின்ற ஒரு மனிதனின் வாழ்க்கையினூடாக, வல்லிபுரக்குறிச்சி என்கின்ற பிரதேசம் சார்ந்த வாழ்க்கைமுறை விபரிக்கப்பட்டிருக்கின்றது என்றே நான் எண்ணுகிறேன். அந்த மணல் காட்டின் புழுதிக் காற்றும், வெய்யிலும் பட்டுணர்ந்த ராஜாஜி ராஜகோபாலன் அவர்கள் தன் வாழ்நாள் கனவாக இந்த நாவலை படைத்துள்ளார்.
கதை நடந்த காலகட்டம் நான் வளர்ந்த காலகட்டத்துக்கு முற்பட்டது என்றாலும் கதையோடு பல இடங்களில் என்னால் சேர்ந்து பயணிக்க முடிகிறது. வாழ்ந்த வாழ்க்கையின் இனிய பொழுதுகளை மீட்டிப்பார்க்க விரும்பும் மனது, துன்பியல்கணங்களை ஆசையுடன் மீட்டிப்பார்பதில்லை. சுகமான சுமையாக அந்தக் கணங்கள் தெரிந்தாலும், மனதுக்குள் சுமையொன்றை தராமல் மீள்வதில்லை. இந்த நாவல் மீட்டளித்த நினைவுகள் சுகமானவையாக இருந்தாலும் சுமையையும் தந்துவிட்டே சென்றிருக்கின்றன.

நாவலின் ஆரம்பத்தில் கமலா டீச்சரிடம் தேவன் பாடம் படிக்க செல்கிறான், அவர்களுக்கிடையில் இனம்புரியாத பாசஉணர்வொன்று தோன்றுகிறது. அவ்வாறாக ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையில் ஏற்படும் உறவில் சடுதியான மாற்றம், அதேவேகத்தில் அவர்கள் பிரிந்துபோகிறார்கள். ஊரிலிருந்து கொழும்புக்கு மாற்றலகிச்செல்லும் கமலா டீச்சர் தேவனிடம், 'இப்படியான திருப்பங்கள் அவரவர் வாழ்க்கையில் நடப்பது இயல்பு, தவிர்க்க முடியாததும் கூட, ஆனபடியால் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே', என்று கூறியிருப்பார். அன்றும் அதன் பின்னரும் தேவன் வாழ்வில் பல்வேறு திருப்பங்களை சந்தித்திருப்பான், ஆனாலும் கமலா டீச்சரின் நினைவு அவனுக்குள் எழவில்லை. இந்த உறவை பற்றிய சிறு நினைவேனும் தேவனின் மனதில் பின்னர் ஒருபோது தோன்றவில்லை என்பது ஏனென்று நாவலாசிரியருக்கே வெளிச்சம்.
பொதுவாக நம் ஊர் கோவில் திருவிழாக்களில் வீதிஉலா வரும் சுவாமி வடக்கு வீதிக்கு வந்ததும் தவில் நாதஸ்வரத்தில் பாடல்களை இசைக்கத்தொடங்குவார்கள். நாமும் அதற்காகவே சுவாமி எப்போது வடக்கு வீதிக்கு வரும் என்று காத்திருப்போம். பிரபல்யமான சீர்காழியின் பக்திப்பாடல் முதல் கடைசியாக வந்த பிரபல்யமான சினிமாப் பாட்டு வரை நாதஸ்வரத்தில் வாசிப்பார்கள். சுவாமி கோவில் வாசலுக்கு சென்று சேரும் வரை இந்த நாதஸ்வர பாட்டுக்கச்சேரி தொடரும். இந்த நாயனப் பாட்டுக் கச்சேரியை நீண்டநேரம் கேட்கவென சாமி தூக்கிகள் கூட மெதுவாகவே நகர்வார்கள். இவற்றை நாவலில் எழுத்தாளர் இயல்பு கெடாமல் கூறியிருப்பார்.

அதேபோலவே மற்றொரு காட்சிப் படிமம், ஆசிரியர்கள் மாணவர்களை வீதியில் அவசியமற்ற முறையில் கண்டால், அவர்களை கண்டித்து உடனே வீட்டுக்கு அனுப்பும் பழக்கம் பற்றி நாவலில் குறிப்பிடப்படுகிறது. இன்று மாணவர்களை கண்டால் ஆசிரியர்கள் ஒதுங்கிப்போகும் இயல்பே அதிகம் காணப்படுகிறது.
முக்கியமாக என்னை கவர்ந்த விடயம்,போகிறபோக்கில் அந்தக் காலகட்டத்தில் இளையோரிடத்தில் நூலகங்களை பயன்படுத்தும் பழக்கம், வாசிப்பு ஆர்வம், சிறுவர்கள் வாசிகசாலைக்கு சென்று புத்தகம் படிப்பது போன்றவற்றை கூறியிருப்பது. பாடசாலை முடிந்து வீட்டுக்கு வர பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் பருத்தித்துறை நூலகத்துத்தில் தேவனும் ராமுவும் பொழுதைக்களிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாடசாலைக் காலத்தில் நானும் நூலகத்துக்கு போவதை வழக்கமாக கொண்டிருந்தேன், இதை நான் முழுவதுமாக அனுபவித்து உணர்ந்தவன் என்ற வகையில் மிகவும் ரசித்தேன்.

அவ்வாறு நூலகத்துக்கு செல்வது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவமொன்றை தந்திருந்தது. ஆம், எனது முதலாவது துவிச்சக்கர வண்டியை துலைத்ததும் நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள பருத்தித்துறை நூலக வாயிலிலேயே, இதைப்பற்றி ஒரு சிறுகதைகூட எழுதியிருக்கிறேன்.

மரகதம் கணவனை ‘மெய்யே’ என்று விழிப்பதும், முத்துவேலர் மனைவியை ‘இஞ்சரப்பா" என விழிப்பதும், படிக்கும்போது இனம்புரியாத ஒட்டுதலை அந்தப் பாத்திரங்களோடு ஏற்படுத்தும்படியாக இருந்தது. இப்படியாக முத்துவேலருக்கும் மரகத்துக்கும் இடையில் நடக்கும் உரையாடல் முழுவதுமே ஊடல் கூடல் கலந்த ஊர்ப் பேச்சுமொழியில் சிறப்பாக அமைந்துள்ளது.

வல்லிபுரக்கோவிலில் தேவன் கணக்குவழக்குகள் பார்ப்பது, வல்லிபுரக்கோவிலில் சாராணனாக உற்சவகாலத்தில் நானும் எனது பாடசாலை நண்பர்களும் சேவையாற்றியதை நினைவுபடுத்தியது.

இப்படியாக நாவல் முழுவதும் குறிப்பிடும்படியாக பல சம்பவங்கள், உரையாடல்கள் என்னை தனிலைமறக்க செய்தன.

புனைவு சார்ந்த எழுத்தில் வரலாறு மற்றும் நிஜங்கள் கலக்கும் பொது அந்தப் புனைவு இன்னும் மெருகேறுவதாக கருதுகிறேன்.

சாதிய ரீதியாக காணப்பட்ட வேறுபாடுகள், பழக்கப்பழக்கங்கள் என்பவை நாவல் முழுவதுமே பேசப்படுகிறது, அதே நேரம் சாதிய ஒடுக்குமுறைகள் சார்ந்த தனது எதிர்ப்பை கதாபாத்திரங்களினூடாக பேசவும் தவறவில்லை. வடமராட்சியை மையப்படுத்தி ஈழப்போராட்ட ஆரம்பக்கட்டம் விரிவடைந்திருந்தது என்றால் மிகையில்லை, அவ்வாறான சில விடயங்களை நாவலில் குறிப்பிட்டிருந்தாலும் நாவலில் தான் எடுத்துக்கொண்ட கருவுக்கு வேண்டிய விடயங்களை மட்டும் பேசிக் செல்கிறது. இருப்பினும், அந்தக் காலகட்ட போராட்ட வரலாறு பற்றி இன்னும் சற்றுக் குறிப்பிட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓரிரண்டு சம்பவங்கள், அந்தக் காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட முற்போக்கான சிந்தனைகளை குறிப்பிடுகிறது. அவ்வாறிருந்தும் இன்றைக்கு ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு பின்னரும் எமது சமூகம் இன்னும் பிற்போக்குத்தனங்களில் இருந்து வெளிவராத சமூகமாகவே இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

நானூறு பக்கங்களைக் கொண்ட நீண்ட இந் நாவலை நின்று நிதானித்து சம்பவங்களை உள்வாங்கி வாசித்தேன். ஏனெனில் ஒவ்வொரு சிறு சம்பவமும், செயலும், கதையில் ஆங்காங்கே குறிப்பிடப்படும் வீதிகளும், கதை மாந்தரும் நான் ஏற்கெனவெ சந்தித்ததாக, நான் அறிந்ததாக, நான் அனுபவித்ததாக தோன்றியிருந்தது.

வாசிப்பின் முடிவில் இனம்புரியாத உணர்வுக்கு ஆட்படும்படியாக இருந்தது. இவ்வாறாக நான் வாழ்ந்த வாழ்க்கைமுறைக்கு என்னை மீள இழுத்துச்செல்லும் படியாக ஒரு நாவலைப் படைத்த ராஜாஜி ராஜகோபாலனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நாராயணபுரம் வாசிப்பு அனுபவம்


October 12, 2021

(வாசித்து ரொம்ப நாட்களுக்கு பிறகு)
இந்த நூல் பற்றி அறிமுகத்தில் மூன்று தலைமுறைகளின் கதை என்று சொன்ன ஒரே விடயம் தான் இந்த நூலை வாசிக்க வேண்டும் என்கின்ற ஆவலை தூண்டியது. நான் பிறந்த போதே யுத்தமும் பிறந்து விட்ட ஒரு நாட்டில் யுத்தத்துக்கு முந்திய எங்கள் மூத்த தலைமுறையினரின் வாழ்க்கை பற்றி பெரிதாக எதுவும் அறிய முடியவில்லை.- ஈழத்து எழுத்தாளர் கே.டானியலின் படைப்புகள் தவிர அந்தக் காலத்தைப்பற்றிய கதைகள் வாசித்தது இல்லை. கே.டானியல் அவர்களின் கதைகள் வரலாற்று நாவல்களுக்கு ஒப்பான உண்மைகளை சொன்னாலும் ஒரே ஒரு விடயம் தான் மறுபடி மறுபடி சொல்லப்படும். அது தவிர்த்து எங்கள் முன்னோர் எப்படி இருந்தார்கள் என்று அறிந்து கொள்ளும் ஆவலே நாராயணபுரம் வாசிக்க முதல் காரணம்.
மூன்று தலைமுறைக் கதை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மூன்று தலைமுறை வந்தாலும் அது தேவனின் கதை தான்.ஒரு மெல்லிய சோகத்துடனான காதல் கதை. கதையின் நாயகனின் வாழ்க்கை அவனுக்கு "ன் "விகுதி கொடுத்ததில் இருந்து "ர் " விகுதிக்கு மாற கதை முடிந்து விடுகிறது.அந்தக் கதைக்குள்ளாலேயே நான் தேடிய வாழ்க்கை சொல்லப்பட்டு விடுகிறது. முத்துவேலரின் அறிமுகம், அவர் மகனின் ஏக்கங்கள் அவன் பள்ளிப்பருவத்து வாழ்க்கை,வல்லிபுரம் கிராம மக்களின் கடவுள் நம்பிக்கை, கோவிலொடு இணைந்து இருக்கும் அவர்களின் அன்றாட வாழ்க்கை எல்லாமே இயல்பாக கதையை ஒட்டி சொல்லப்படுகிறது.அந்த காதல் கதைக்குள்ளேயே சாதி அடக்குமுறையில் இருந்து வயல் வேலைக்கு கூலி ஆட்கள் வந்த காலம் மாறி டிராக்டர் வந்தது வரைக்கும் கதைப்பின்னலுடனேயே நெய்யப்பட்டு விட்டது. அதற்கு சங்கீதத்தை வைத்து சரிகை நெய்து இருக்கிறார் ஆசிரியர்.
முத்துவேலர் என்ன தான் அடாவடியாக தன இஷ்டப்படியே மகனை வளர்த்து அவன் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிராகரித்தாலும் கூட மனதில் கம்பீரமாக தான் நிற்கிறார்.
என்ன சொல்ல. மனிதர்கள் சேடம் இழுத்து செத்த காலத்தில் இருந்து நம் தேசம் அந்த மனிதர்கள் ஷெல்லடி பட்டு செத்த காலத்துக்குள் நகர்ந்து விடுகிறதை யதார்த்தமாகவே காட்டி இருக்கிறார்..இவ்வளவு அம்சங்களையும் சேர்த்து கோர்த்து நெய்து கடைசியில் தேவனை அவன் காதலியுடன் சேர்த்து விடும் போது கொஞ்சம் சந்தோசம் வந்தாலும் திலகத்தின் மரணம் சோகமாகவே இருக்கிறது.மூத்த எழுத்தாளர் அகிலன் அவர்களின் சித்திரப்பாவை நாவல் படித்த போது ஏற்பட்ட உணர்வே நாராயணபுரம் வாசித்து முடிந்ததும் எழுந்தது.

நாராயணபுரம்: வடமராட்சியின் மண்வாசனை வீசும் நாவல்!

விக்னேஸ்வரன் எஸ்கே

கலைமுகம் (72) இதழில், நான் எழுதிவரும் 'கனவும் நனவாம் கதையும்' என்ற பத்தியில் வெளியான, நண்பர் 'ராஜாஜி ராஜகோபாலன்' அவர்களது நாவல் குறித்த எனது அறிமுகக் குறிப்பு இது
‘நாராயணபுரம்’ ஒரு ஈழத்து நாவல் என்றும், இதை எழுதியவர் இப்பொழுது புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் நன்கு அறியப்பட்ட ஒரு ஈழத்து எழுத்தாளர் ராஜாஜி ராஜகோபாலன் என்றும் தெரிந்துகொண்டு இந்நாவலை வாசிக்கப் புகும் வாசகர்களுக்கு, இந்தப் பெயர் இலங்கையிலுள்ள எந்த இடத்தின் பெயர் என்ற கேள்வி எழலாம். உண்மையில் அப்படி ஒரு பெயர் நானறிந்தவரை இலங்கையில் இல்லை என்றே நினைக்கிறேன், ஏன் நாராயனன் என்ற பெயர்கூட பெருமளவுக்குப் பரவலாக நம்மவர் மத்தியில் பாவிக்கப்படும் பெயரும் அல்ல. ஆனால் அது ஈழத்தவர்கள் மத்தியில், குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில்,பெரும்பாலான எல்லோருக்கும் தெரிந்த ஒரு ஊர்தான். ஊரின் பெயரைத்தான் நாவல் ஆசிரியர் மாற்றியிருக்கிறார். ‘விஷ்னுபுரம்’ என்ற ஜெயமோகனின் நாவலில் வரும் விஷ்னுபுரம் ஒரு கற்பனைப் பெயர் மட்டுமல்ல, அப்படி ஒரு இடமே இருந்ததில்லை என்பர். ஆனால் நாராயணபுரம் இரத்தமும் சதையுமாய் மக்கள் காலம் காலமாக வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு நிலம் மட்டுமல்ல, வரலாற்றுப் புகழ்பெற்ற ஒரு நிலமும் கூட. நாம் எல்லோரும் நன்கறிந்த, வடமராட்சிப் பிரதேசத்தின் புகழ்பெற்ற ஆலயமான வல்லிபுர ஆழ்வார் கோவில் நிலைகொண்டுள்ள வல்லிபுரம் என்ற பிரதேசம் தான் இந்த நாராயணபுரம்!. வடமராட்சியில் வல்லிபுரம் என்ற பெயர்கொண்ட ஒருவராவது இல்லாத ஊரே இல்லை என்று சொல்லும் அளவுக்குப் பிரபலமானது அந்தப் பெயர்.
இந்தக் கிராமத்தில் வாழும் ஒரு விவசாயக் குடும்பத்தின் மூன்று தலை முறைகால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களில் விரிந்துள்ளது இந்த நாவல். மொத்தம் நானூறு பக்கங்களைக் கொண்ட ஒரு நாவலாக இருந்தபோதும், ஆசிரியர் ராஜாஜி ராஜகோபாலனின் மொழி அழகும், கதைசொல்லும் பாணியும் அதைச் சலிப்பேதுமின்றி சுவாரசியமாக ஒரே மூச்சில் வாசித்துவிடக்கூடியதாக ஆக்கிவிட்டிருக்கின்றன. நாவல் முழுவதும் விரவிக் கிடக்கும், ஈழத்தமிமிழுக்கும், வடமராட்சி மண்ணுக்கும் உரிய -இன்று பாவனையில் அருகிவருகின்ற- பலநூறு சொற்கள், இயல்பான முறையில் தமது ஆழத்தையும் அழகையும் வெளிப்படுத்தும் விதத்தில் கதையின் அழகுக்குப் பலம்சேர்ப்பவையாக அமைந்துள்ளன. தமிழ் நாட்டில் பதிப்பிக்கப்பட்ட போதும், பதிப்பாளர்கள் அச் சொற்களை மாற்றாமல் அப்படியே விட்டிருப்பதற்காக நூலைப் பதிப்பித்த ‘டிஸ்கவரி புத்தக நிலைய’த்துக்கு நன்றி கூற வேண்டும். அர்த்தம் புரியாததால், எழுத்துப் பிழையென எண்ணி திருத்தப்பட்டிருக்கக் கூடிய அல்லது மொய்ப்புப் பார்த்தலில் ஏற்பட்ட தவறால், தவறாக வந்துவிட்ட ஒருசில சொற்களைத் தவிர (உதாரணத்துக்கு ஒன்று: தாவாரம் என்பது தாவரம் என வந்திருக்கிறது), ஓரிரு பதிப்பகங்கள் தவிர்ந்த தமிழ்நாட்டுப் பதிப்பாளர்கள் செய்யும் ‘திருத்த வேலை’ களை அது செய்யவில்லை என்பது மகிழ்ச்சியே. கிட்டங்கி, புலுடா, அயத்துப் போதல், மோனை, சண்டிக்கட்டு, பரியலங்கள், தின்னு, ஈளதாளம், படலை, மல்லுக்கு நிக்கிறது என்று பல சொற்கள் வடமராட்சிப் பிரதேசத்தில் ஒலிக்கும் அதே மண்வாசனையோடு நாவல் முழுவதும் நிறைந்து கிடக்கின்றன. அந்தப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ, நாவலில் வரும் ஒவ்வொரு சம்பவமும், உரையாடலும் எனக்கு எவ்வளவோ பழைய கதைகளையும் நினைவுகளையும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்துகொண்டிருந்தன.
ஒரு படைப்பின் வெற்றிக்கு அடிப்படையான ஒரு விடயம் என்று எதனைச் சொல்வது? அது சொல்லும் கதை, அது சொல்லப்படும் விதம், அது கையாண்டுள்ள மொழி என்ற இந்த மூன்றும் சரியாகப் பொருந்தி வரும்போதுதான் ஒரு நூல் இலக்கிய முழுமையையும், வெற்றியையும் பெறுகிறது என்பது எனது கருத்து. அந்த அடிப்படையில், நாராயணபுரம் நாராயணன் கோவிலை மையமாகக் கொண்ட ஒரு சூழலில், அதனோடிணைந்த வாழ்வைப் பரம்பரை பரம்பரையாகக் கொண்டு வாழும் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தின் மூன்று தலைமுறை வாழ்வைச் சொல்வதனூடாக, மூன்று தலைமுறை காலத்தின் அந்தப் பிரதேசத்திலும், நாட்டிலும், ஏற்பட்டுவந்த அரசியல், சமூக, பண்பாட்டுப் போக்குக்களையும், நிகழும் மாற்றங்களையும் அழகுறப் பதிவு செய்வதாக அமைகிறது. அதிகம் படிக்காத, மிகுந்த பிரயாசை உள்ள விவசாயியான முத்துவேலர் மாயவன் கோவிலில் மனமுருக நின்று அவனைத் தொழுகின்ற காட்சியுடன் தொடங்கும் நாவல், நாராயணபுரமும் அதைச் சூழவுள்ள கிராமங்கள் என்று அந்தப் பிரதேசத்தையே முழுமையாக வாசிப்பவர் கண்களில் விரியச் செய்துவிடுகிறது. அந்தமக்கள் பேசும் பேச்சுக்கள்,அவர்களது குணாதிசயங்கள், அவர்களிடையே நிலவும் நெருக்கமும் விரிசலும் சேர்ந்த இயல்பான உறவுகள், அவற்றிடையான ஊடாட்டங்கள் என்று அன்றைய அந்தச் சமூக வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் மிக லாவகமாகக் காட்சிப்படுத்திக் காட்டுகிறது அவரது அழகான மொழி.
முத்துவேலர் ஒரு விவசாயி. தனது முழு ஈடுபாட்டுடனான உழைப்பினால் வளர்ந்தவர். விவசாயம் அவரது உயிர். பாடசாலையில் கல்வியில் சிறந்து விளங்கும் மகனுக்கு, ஆங்கிலக் கல்வி, சங்கீதம் என்பவற்றையெல்லாம் படிக்க அனுமதிக்கும் அவர்,அவனுக்குப் பல்கலைக்கழகம் கிடைத்தபோதும் அது தேவையில்லை, எங்கடை விவசாயத்தை நாங்கள் விடக்கூடாது, படிச்சவனாக இருக்கவேண்டும் என்பதற்காக படித்தது போதும். இனி விவசாயத்தில் கவனம் செலுத்து என்று மறித்துவிடுகிறார். அவர் நினைத்தது போலவே மகன் தேவனும் விவசாயத்தில் சிறப்பாக ஈடுபடுகிறான். அவனுக்கு வரும் காதலையும், அது எங்கள் விவசாயக் குடும்பத்தின் தொடர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பொருந்தி வராது என்று மறுத்து ஒரு விவசாயக் குடும்பத்தில் திருமணம் செய்து வைக்கிறார். இரண்டுக்கும் அவருக்கிருந்த ஒரே காரணம் பரம்பரைத் தொழிலான விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது ஓர்மம். அடுத்த தலைமுறையைச் சேர்ந்த தேவனுடைய காலம் பல நெருக்கடிகளைத் தோற்றுவிக்கிறது. நாட்டில் ஏற்படும் நெருக்கடிகள்,அரசியல் மாற்றங்கள், விடுதலைஇயக்கங்களின் தோற்றமும்,வளர்ச்சியும் பின்னரான சிதைவுகளும் என்று விரிகிறது. தேவன் தனது படிப்பு ஆசையைப் பிள்ளைகளில் காணவிரும்புகிறார். மகன் பல்கலைக் கழகம் செல்கிறான், தேவன் விரும்பிய பொறியியல் பட்டப் படிப்புக்காக. ஆனால் பட்டப் படிப்புப் படிக்கும் மகன் தகப்பனுக்கு இப்படி எழுதுகிறான்: ’கொழும்பு வாழ்க்கை சுகமானதுதான். ஆனால் அதற்காக வீட்டையும் ஊரையும் வெறுத்து அந்த வாழ்க்கைக்கு ஆசைப்படமாட்டேன். படிக்கவும் வேலைக்கும் என தேடிப்போன இந்த நகரம் எவ்வளவு அழகாகவும் வசதியாகவும் கடற்கரையில் மாலை முழுவதும் காலார நடக்க இதமாக இருந்தாலும், அது பிறந்த ஊராகி விடுமா? நெருக்கமான நகரத்தின் இடுக்கில் கால் நீட்டிப் படுக்க முடியாத அறையும் நாலடி முற்றமும் வீடாகி விடுமா? கோடிப்புறத்தில் நிற்கும் ஒற்றைத் தென்னையும் பெயர் தெரியாத பூ மரங்களும் தோட்டமாகி விடுமா?’
ஆழமான சங்கீத உணர்வும், ஈடுபாடும் கொண்ட தேவன், தன் மனைவியின் மறைவுக்குப் பிறகு, அவளே தன் இறுதிக் காலத்தில் விரும்பியபடி, அவரது முன்னாள் காதலியான அக்காலத்தின் தலைசிறந்த பாடகி நித்யாவை மறுமணம் செய்ய, பிள்ளைகளே முன்னின்று ஊக்குவிப்பதுடன் ஒரு திருப்பத்தை அடையும் நாவல் மூன்று தலைமுறைகளதும் வாழ்வுபற்றிய சிந்தனைகள், அவற்றில் ஏற்படும் மாற்றங்கள், அக்காலத்தில் தொடங்கிய விடுதலைப் போராட்டம் ஏற்படுத்தும் புதிய சிந்தனைப் போக்குகளின் தாக்கம் என்று கிராமம் மாறுதலடையும் போக்கை அழகாகப் பேசுகிறது. இந்த நாவல் வடமராட்சியின் மொழியை, வாழ்க்கை முறையை, அதன் மண்வாசனையை மிக அழகாகப் பதிவுசெய்யும் ஒரு படைப்பு என்று துணிந்து கூறலாம். நாவலின் எழுத்து பல இடங்களில் கல்கியையும், தி.ஜானகிராமனையும் எனக்கு அடிக்கடி ஞாபகம் படுத்தின என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். ஈழத்தில் வெளிவந்த இதுவரை நான் வாசித்த நாவல்களில் இது பெருமளவில் வேறுபட்ட, தனித்துவம் பொருந்தியதாக அமைந்துள்ளது. நூலுக்கான அணிந்துரையில் நாவல் பற்றி மிக விரிவாகவே பேசியுள்ள பேராசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள், ‘இதை எழுதியவர் ஒரு புலம்பெயர் தமிழர் என்ற வகையில் இந்நாவல் புலம்பெயர் இலக்கியம் என்ற வகையிலும் இது கவனத்துக்குரியதாகிறது’ என்றும் இது ‘ஈழத்தின் போர்க்கால நாவல்’ என்றும் குறிப்பிடுகிறார். இந்த வரையறைகள் மேலும் விரிவான உரையாடலுக்குரியவை என்றே நினைக்கிறேன். என்னைப் பொறுத்தளவில் இந்த நாவல் நிகழும் பிரதேசத்து நம்பிக்கைகள், சமூக உறவுகள், சிந்தனைப் போக்குகளை அந்தப் பிரதேசத்துக்குரிய மண்வாசனையுடன் முன்வைக்கின்றது என்பதே அதன் தனித்துவம் என்று நான் நினைக்கிறேன் இது ஈழத்து நாவல்கள் மத்தியில் போர்க்காலம் பற்றிப் பேசினும் கூட, இதன் தனித்துவம் வேறு என்றே நினைக்கிறேன். இந்தப் பத்தியில் நான் அதனுள் நுளைய விரும்பவில்லை. ஆயினும், நாவல் வாசிப்பில் ஆர்வமுள்ள அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு நாவல் என்று எந்தத் தயக்கமும் இன்றி என்னால் சிபாரிசு செய்ய முடியும். நண்பர் ராஜாஜிக்கு Rajaji Rajagoplan எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

Saturday, August 28, 2021

ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்: தமிழ்முரசு

படித்தோம் சொல்கிறோம் - முருகபூபதி

லெட்சுமணன் முருகபூபதி
Melbourne, Australia
April 26, 2015

மீண்டும்  தட்டிவேனில்  பயணிப்போமா?
ராஜாஜி  ராஜகோபலன்  என்ற  வழிப்போக்கனின்  வாக்குமூலம்

வாழ்க்கையில்  நாம்  சந்திக்கும்  மனிதர்கள் அனைவரையும் தொடர்ந்து  நினைவில்  வைத்திருப்பது சாத்தியமில்லை. இலங்கையில் இலக்கிய  உலகிலும் ஊடகத்துறையிலும் நான் நடமாடிய   1970 - 1987  காலப்பகுதியில் நான் சந்தித்த கலைஞர்கள், படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள் ஏராளம்.

அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் அந்த வரிசையில் சந்தித்தவர்களும் ஏராளம். எனது எழுத்துக்களை படித்த ராஜாஜி ராஜகோபாலன் என்பவர் முதலில் என்னுடன் மின்னஞ்சலில் தொடர்புகொண்டபொழுது -  அவர் தமிழ் நாட்டிலிருக்கும் தமிழகத்தவர் என்றுதான் முதலில் நம்பினேன். பின்னர் - அவரது தொடர்ச்சியான தொடர்புகளில் கனடாவிலிருக்கும் இலங்கையர் என்றும், ஒரு சட்டத்தரணி என்றும் அறிந்துகொண்டேன். கொழும்பில் நான் பணியாற்றிய காலத்தில் சட்டவரைஞர் திணைக்களத்திலிருக்கும் நண்பர்களை பார்க்கச் சென்றவேளையில்  ராஜாஜி ராஜகோபாலனும் என்னைச் சந்தித்திருப்பதாகச் சொன்னார்.



அவரது முகமும் பெயரும் எனது  நினைவிலிருந்து  எப்படியோ தப்பியிருக்கிறது. தற்பொழுது அவரது  ஒரு  வழிப்போக்கனின் வாக்குமூலம் என்ற கவிதைத்தொகுதி எனது  மேசையில் கடந்த ஆண்டு   கடைக்கூறிலிருந்து  என்னையே   பார்த்துக்கொண்டிருந்தது. தமிழ்நாடு சிவகங்கை வளரி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்நூலுக்கு அருணா சுந்தரராசன்  பதிப்புரையும் கே.எஸ். சிவகுமாரன் இரசனைக்குறிப்பும் மேமன் கவி அறிமுகமும் எழுதியிருக்கிறார்கள்.

நானும் ராஜாஜி ராஜகோபாலன் போன்று ஒரு வழிப்போக்கன்தான். வழியில் கண்டதையெல்லாம் மனதில் மாத்திரம் பதிவுசெய்யத்தெரியாமல் வாசகரிடமும் பகிர்ந்துகொள்ளும் வழிப்போக்கர்கள்தான் படைப்பாளிகள்.

செய்யுள் இலக்கியத்தில் நாம் அறிந்த பிரிவுகள் கவிதை,  பாடல், காவியம், கவிதை நாடகம்.  இதில் கவிதை நாடகங்களை மேடையிலும் பார்த்திருப்பீர்கள். கவிதையில் திரைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன. பாத்திரங்கள் அனைத்தும் கவிதையிலேயே பேசும் ஒரு ஆங்கிலப்படம் அண்மையில் பார்த்தேன்.

செய்யுள் இலக்கியத்தின் ஒரு பிரிவான கவிதையும் மரபுக்கவிதை - வசன கவிதை -  புதுக்கவிதை என்று பிரிந்திருக்கிறது.

1970 களில் புதுக்கவிதைக்கு ஆதரவாகவும் எதிராகவும் இலங்கையிலும் தமிழகத்திலும் பலர் களத்தில் குதித்தனர். புதுக்கவிதைக்கென ஏடுகளும் தோன்றின. இலங்கையில் புதுக்கவிதையாளர்கள் வீறுகொண்டு எழுந்தனர்.

மகாகவி உருத்திரமூர்த்தி குறும்பா என்ற வடிவத்தை அறிமுகப்படுத்தினார். வேறும் சிலர் ஹைக்கூ வடிவத்தில் கவிதைகளை எழுதினர்.

இந்தப்பின்னணிகளுடன்  ராஜாஜி  ராஜகோபாலனை  பார்க்கின்றோம். அவரது  கவிதைகள் இலங்கையில்  மல்லிகை, அலை, வீரகேசரி, தினகரன் முதலானவற்றில் வெளியாகியிருக்கின்றன.



எனினும் 2014 ஆம் ஆண்டில்தான் இவரது  நீண்ட  கால வழிப்பயணம்  வாக்குமூலமாக நூல் வடிவில் வெளியாகியிருக்கிறது. இவர் இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில் இதழ்களில் எழுதியிருந்தபோதிலும்,  விமர்சகர்களின் பார்வையில்  கண்டுகொள்ளப்படவில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறார்.

பொதுவாகவே பெரும்பாலான படைப்பாளிகளின் நூல்களிலிருந்தே விமர்சனங்கள்  வெளியாகும். அங்கீகாரத்திற்காகவும் தேசிய விருதுகளுக்காகவும் புகழ்பெற்ற விமர்சகர்களின் முன்னுரைகளுக்கு காத்திருந்த பலர் எம்மத்தியில் வாழ்கின்றனர்.

1970 - 1980 காலப்பகுதியில் இந்த வழிப்போக்கனின் கவிதைகள் நூலுருப்பெற்றிருக்குமானால்  -  சில வேளை அங்கீகரிக்கப்பட்டவர்களின் முன்னுரை அதற்கு கிடைத்திருக்குமானால், ராஜாஜி  ராஜகோபாலனும் இலங்கையில் சிறந்த அறிமுகத்தை பெற்றிருக்கக்கூடும்.

உடனுக்குடன் கருத்துச்சொல்லி இவரை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது வசைபாடுதற்கும் அப்பொழுது முகநூலும் இல்லை. நல்லவேளை - அதனால் அவர் முகவரி தொலைக்காமல் மீண்டும் உயிர்ப்பித்துள்ளார்.

இந்நூலில் அவரது உயிர்ப்பு துலக்கமானது.

புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இலக்கிய சுவாசத்துடன் வாழும் ஈழத்து படைப்பாளிகள் தொடர்ந்தும் ஈழத்தின் காற்றையே சுவாசிக்கின்றனர் என்றும், இன்னமும் அவர்கள் தாம் வாழும் புதிய  தேசங்களின் காற்றை உள்வாங்கவில்லை என்றும் விமர்சனங்கள் வெளியாகின்றன.

ராஜகோபாலன் என்ற வழிப்போக்கனாலும் தான் பிறந்து - தவழ்ந்து - வளர்ந்த  அற்றைத்திங்கள் தடங்ளை மறக்க முடியவில்லை. கடக்க முடியவில்லை. அதற்கு பதச்சோறாகவே அவரது கவிதைகள் விளங்குகின்றன.

கனடாவில் இயந்திரமயமான வாழ்க்கைச்சூழலுக்குள், கொடிய பனிக்குளிருக்குள், காலை எழுந்து வெளியே செல்லு முன்னர் வீட்டு  வாசலில் நடைபாதையில் மலர்ந்து  குவிந்துள்ள பனிப்படலங்களை கொத்தியும் வெட்டியும் கிண்டியும் அகற்றிவிட்டு இரவில் நாறிப்பிடிப்பிற்கு எண்ணெய் தடவி, மீண்டும் மறுநாள் காலையில் அந்தத் திருத்தொண்டை முடித்துக்கொண்டு வேலைக்குச் செல்லும் மனிதர்கள் ஆசுவாசம் தேடுவது பழைய  நினைவுகளில் இருந்துதான்.

கனடாவில் குளிர்காலத்தில் பனிக்கட்டிகளை உடைத்து வழித்தடத்தை சீர்படுத்தும் எந்தவொரு ஈழத்து மனிதனதும் மனசாட்சியை தொட்டுக்கேட்டால் அது சொல்லும் அவன் முன்னர் வாழ்ந்த  தாயகத்தின் ஏக்கம் பற்றி.

எல்லோரும் கவிஞர்கள் இல்லை. கவிஞனாக வாழ்பவன் தனது ஏக்கத்தை - தாபத்தை - ஏமாற்றத்தை - ஆதங்கத்தை கவிதையில் தருகிறான். அதனால் அது புலம்பல் இலக்கியம் அல்ல.

ராஜாஜியும் தனது கவிதைகளில் தாயகத்தை நினைவுபடுத்துகிறார்.

அவரது இதற்கு மேல் என்ன வேண்டும்? கவிதை  எனக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நினைவுபடுத்தியது.

மானிடம் போற்றுதல்  மேன்மை
மனிதவுயிரே என்றும் ருமை
வானமே எமது எல்லை
வாராது காண் என்றும் தொல்லை.

என்ற  வரிகள்   தன்னம்பிக்கையின்  ஊற்றுக்கண்.

வானமே எமது எல்லை என்று கூறும் கவிஞர் அடுத்த கவிதையில் ( அம்மா மெத்தப்பசிக்கிறதே) வானமே எங்கள் கூரையம்மா என்று ஒரு அகதி முகாம் குழந்தை பற்றி சொல்லி வைக்கிறார்.
அந்தக்குழந்தையின் எல்லை அவள் வாழும் அகதி முகாம் கூரைக்குள்ளால் இரவில் நட்சத்திரங்களும் நிலவும் தெரியும் வானம்.

எனினும் அவளது துயரத்தை தோற்றுப்போகும் உணர்வுடன் சொல்லாமல்

இருட்டினில் வாழ்ந்தே பழகிவிட்டோம்
இருப்பதை உண்டே பசி தீர்ந்தோம்
நாளும் ஒரு நாள் விடியுமம்மா
நாங்களும் மனிதர்கள் ஆவோமம்மா

என்று நிறைவு செய்கிறார்.

இந்த வழிப்போக்கனின் நண்பர்கள் சுற்றம் - சூழல் - இயற்கை மனிதர்கள் - பாதிக்கப்பட்ட மக்கள். இவரது சில கவிதைகளுக்கு மெட்டமைத்து பாடவும்  முடியும்.

இலங்கையில் ஒவ்வொரு ஊருக்கும் பிரசித்தமான ஏதாவது ஒரு உணவுப்பொருள் இருக்கும்.
அவ்வாறே கனி வர்க்கங்களும் இருக்கின்றன.

மாத்தறை பக்கத்தில் தொதல் நல்ல பிரசித்தம். சில மலையக ஊர்களில் கித்துல் கருப்பட்டி,  எங்கள் நீர்கொழும்பில் அரிசிமாவில் செய்த அல்வா. அதுபோன்று பருத்தித்துறையில் தட்டை வடை. பனங்கள்ளுக்கு மாத்திரம் அல்ல, எந்த மேலைத்தேய குடிவகை மோகத்தினருக்கும்  (குடிப்பிரியர்களுக்கும்) வாயில் விட்டு அரைப்பதற்கு சுவையானது பருத்தித்துறை தட்டை வடை. கனடாவிலிருக்கும் இந்த வழிப்போக்கனுக்கு தனது ஊர் மீதுள்ள பாசம் பருத்தித்துறை வடை என்ற கவிதை ஊடாகவும் வெளிப்படுகிறது.

ராஜாஜி ராஜகோபாலனுக்கு பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை கருணையுடன் பதிவுசெய்யத் தெரிந்திருப்பது போன்று காதல் வயப்பட்ட மனிதனின் உள்ளத்தையும் கனிவோடு பதிவு செய்யத் தெரிந்திருக்கிறது.

எழுதாத கடிதத்தில்தான் எத்தனையோ உள்ளன - என்ற கவிதையில்  வரும் வரிகளைப்பாருங்கள்:

மறைத்துக்கொண்டவை
மலர்க் கதவுகள்தானே
திறந்துகொள்ள நான்
தென்றலை அனுப்புவேனே.
---
வட்டக் கழுத்தைவிட்டு
எட்டிப் பார்க்குமோவென்று
ஒவ்வொரு சொல்லின் முடிவிலும்
இழுத்துவிடுவாயே சேலையை
--
ஒருகோடு மட்டுமே கீறி
ஓவியமாக்கு என்றேன்
இரு நுனிகளையும்  இணைத்து
இதயம் ஆக்கிவிட்டாய்.
--

பாரதியாருக்கு சில தென்னைமரங்களுக்கு நடுவே ஒரு வீடும் களித்துச்சிரிக்க ஒரு பெண்ணும் தேவைப்பட்டது. கண்ணதாசனுக்கு ஒரு கோப்பையும் கோல மயிலும் தேவைப்பட்டது. (ஆனால் - அதன் அர்த்தம் வேறு - ஒரு ஓவியனுக்கு தேவைப்பட்ட வர்ணம் நிரம்பிய கோப்பையும்  தூரிகையாக  மயில்  இறகும்)

ஆனால் - ராஜாஜி ராஜகோபாலன் இறைவனைக் கண்டால் என்ற கவிதையில் இறைவனிடம்  என்ன  கேட்பார் என்பதற்கு ஒரு நீண்ட பட்டியலையே தருகின்றார். இந்த நீண்ட கவிதைக்கும் மெட்டமைக்க முடியும். ஒரு மானிட நேசனின் ஆத்மக்குரலாக அந்த வேண்டுதல் அமைந்திருக்கிறது. அதில் சுற்றம், உறவு, தேசங்கள், இயற்கை, உழைப்பு, மானுடம் என்பன துலக்கமாக பதிவாகியிருப்பதால் சர்வதேசப்பார்வை கொண்டதாகவும் அமைந்துவிடுகிறது.

தட்டிவேன் என்ற கவிதை எம்மை வடபுலத்திற்கோ அழைத்துச்செல்கிறது. எனக்கும் இந்தத் தட்டிவேனில் பயணித்த அனுபவம் இருக்கிறது. எனினும் எனக்குத்தெரிந்தும் கவனிக்கத்தவறிய ஒரு செய்தியை இவர் பதிவுசெய்கின்றார்.

இந்தத்தட்டிவேனில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் முதியவர்கள்தான். இளம் யுவதிகள்,  இளைஞர்கள் சைக்கிளில் பவனி வருவார்கள். தட்டிவேன் நிற்பதற்கு Bus halt தேவையில்லை. பயணிகள் கைகாட்டி நிறுத்தும் எந்த இடத்திலும் அது நின்று ஏற்றும். எவரையும் கைவிட்டுச்செல்லாது.

ஆனால், சைக்கிள்களில் வரும் இளம் தலைமுறை அதற்கு ஏளனச்சிரிப்பை உதிர்த்து, கைகாட்டி கடந்து செல்லும். தட்டிவேனிடம் கருணை இருக்கும். முதியவர்களை எப்படியும் ஏற்றிச் சென்றுவிடும். வடமாகணத்தின் உள்ளுர் பொருளாதாரத்தின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்திற்கு சலுகை விலையில் கட்டணம் அறவிட்டது தட்டிவேன்.

தட்டி வேன் கவிதையில் வடபுலத்தைச் சித்திரிக்கும் கவிஞர் முதிய பெண்களை இவ்வாறு வர்ணிக்கின்றார்.

குறுக்குக் கட்டிய பெண்களும்
கடகம் தூக்கிய கிழவிகளுமே
உன் கைபிடித்த
ஐஸ்வர்ய ராய்கள்.
---

இளம் பெண்களை இப்படிச் சொல்கிறார்:

மெட்டி அணிந்த மங்கையர்
உன் பலகைத்தட்டில் ஏறியதில்லை
சேலை உடுத்தியவர்கள் உன்னைச்
சேர நினைப்பதில்லை
டியூட்டரிக் குமரிகள் உன்னைத்
திரும்பியும் பார்ப்பதில்லை.
---
ராஜாஜி ராஜகோபாலன் என்ற வழிப்போக்கனிடமிருந்து இலக்கிய உலகம் மேலும் எதிர்பார்க்கிறது. அவருடைய குதிரை இல்லாத ராஜகுமாரன் என்ற சிறுகதைத்தொகுதி வெளிவரவிருப்பதாக அறிகின்றோம்.

நடந்து திரிந்த இந்த வழிப்போக்கன், தொடர்ந்தும் குதிரையில்லாமலும் நடக்கவிருக்கிறார்.
அவர் வரும் வழியில் நாமும் காத்து நிற்கிறோம்.
---0---
letchumananm@gmail.com