'எங்கட புத்தகங்கள்' சஞ்சிகையின் ஒக்டோபர் 2021 இதழில் பிரசுரமாகியிருந்த, ராஜாஜி ராஜகோபாலன் அவர்களின் 'நாராயணபுரம்' நாவல் பற்றிய எனது வாசிப்பனுபவம்.
November 30, 2021
குலசிங்கம் வசீகரன்.
ராஜாஜி ராஜகோபாலனின் 'நாராயணபுரம்' நாவலோடு கடந்த இரு தினங்களாகப் பயணித்துவந்தேன். உண்மையில் 1975 - 80 காலப்பகுதியில் பயணித்தேன் என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும், அதுவும் நான் பிறந்து வளர்ந்த ஊரான பருத்தித்துறை, புலோலி, வல்லிபுரக்குறிச்சி ஆகிய ஊர்களில் இந்த பயணம் அமைந்திருந்தது. முத்துவேலர், அவர் மகன் தேவன் ஆகியோரோடு நானும் ஒருவனாக மீண்டும் எம் ஊரில் உலவி வந்தேன்.
பருத்தித்துறை முதல் வல்லிபுரக்குறிச்சி வரையான பிரதேசத்து வாழ்வியலை தான் படைத்த கதாபாத்திரங்களினூடாக மிக சிறப்பாக கூறிச்செல்கிறார். பேச்சு வழக்கில் இருந்து, வாழ்க்கைமுறை, சாதியம், கலை, பக்தி, வருமான ஏற்றத்தாழ்வு என்று பல விடயங்களையும் நாவல் ஊடாக பேசியிருப்பதால், தனியே இது ஒரு புனைவு வடிவம் என்று மட்டும் அல்லாமல் வாழ்வியல் பதிவாகவும் இந்த நாவல் அமைந்து விடுகிறது. சிறுவன் தேவன் தந்தையாகி தனது பிள்ளைகளை உயர்கல்வி கற்க வைப்பதோடு நாவல் நிறைவுபெற்றாலும், மூன்று தலைமுறைகளின் காலத்தை, அந்தந்த காலகட்டங்களில் ஊரில், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மட்டுமல்லாமல், வாழ்க்கைமுறை, பொருளாதாரம், என அனைத்து மாற்றங்களையும் ஆசிரியர் நாவலினூடாக தொட்டுச்சென்றிருக்கிறார்.
ராஜாஜி ராஜகோபாலன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பான ‘குதிரை இல்லாத ராஜகுமாரன்’ இல் அவரது எழுத்து என்னை கவர்ந்திருந்தது மட்டுமல்லாமல், குறித்த காலக்கட்டத்தில் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளமுடியாது முற்போக்கான விடயங்களை தனது எழுத்துநடையால் மிக நளினமாக தனது கதாபாத்திரங்களைக் கொண்டு நடத்திக்காட்டியிருப்பார். அதுபோல் இந்த நாவலிலும் பல விடயங்களை அவர் இயல்பாக பேசியிருக்கிறார்.
நாராயணபுரம் நாவலாக எனக்கு தெரியவில்லை, தேவன் என்கின்ற ஒரு மனிதனின் வாழ்க்கையினூடாக, வல்லிபுரக்குறிச்சி என்கின்ற பிரதேசம் சார்ந்த வாழ்க்கைமுறை விபரிக்கப்பட்டிருக்கின்றது என்றே நான் எண்ணுகிறேன். அந்த மணல் காட்டின் புழுதிக் காற்றும், வெய்யிலும் பட்டுணர்ந்த ராஜாஜி ராஜகோபாலன் அவர்கள் தன் வாழ்நாள் கனவாக இந்த நாவலை படைத்துள்ளார்.
கதை நடந்த காலகட்டம் நான் வளர்ந்த காலகட்டத்துக்கு முற்பட்டது என்றாலும் கதையோடு பல இடங்களில் என்னால் சேர்ந்து பயணிக்க முடிகிறது. வாழ்ந்த வாழ்க்கையின் இனிய பொழுதுகளை மீட்டிப்பார்க்க விரும்பும் மனது, துன்பியல்கணங்களை ஆசையுடன் மீட்டிப்பார்பதில்லை. சுகமான சுமையாக அந்தக் கணங்கள் தெரிந்தாலும், மனதுக்குள் சுமையொன்றை தராமல் மீள்வதில்லை. இந்த நாவல் மீட்டளித்த நினைவுகள் சுகமானவையாக இருந்தாலும் சுமையையும் தந்துவிட்டே சென்றிருக்கின்றன.
நாவலின் ஆரம்பத்தில் கமலா டீச்சரிடம் தேவன் பாடம் படிக்க செல்கிறான், அவர்களுக்கிடையில் இனம்புரியாத பாசஉணர்வொன்று தோன்றுகிறது. அவ்வாறாக ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையில் ஏற்படும் உறவில் சடுதியான மாற்றம், அதேவேகத்தில் அவர்கள் பிரிந்துபோகிறார்கள். ஊரிலிருந்து கொழும்புக்கு மாற்றலகிச்செல்லும் கமலா டீச்சர் தேவனிடம், 'இப்படியான திருப்பங்கள் அவரவர் வாழ்க்கையில் நடப்பது இயல்பு, தவிர்க்க முடியாததும் கூட, ஆனபடியால் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே', என்று கூறியிருப்பார். அன்றும் அதன் பின்னரும் தேவன் வாழ்வில் பல்வேறு திருப்பங்களை சந்தித்திருப்பான், ஆனாலும் கமலா டீச்சரின் நினைவு அவனுக்குள் எழவில்லை. இந்த உறவை பற்றிய சிறு நினைவேனும் தேவனின் மனதில் பின்னர் ஒருபோது தோன்றவில்லை என்பது ஏனென்று நாவலாசிரியருக்கே வெளிச்சம்.
பொதுவாக நம் ஊர் கோவில் திருவிழாக்களில் வீதிஉலா வரும் சுவாமி வடக்கு வீதிக்கு வந்ததும் தவில் நாதஸ்வரத்தில் பாடல்களை இசைக்கத்தொடங்குவார்கள். நாமும் அதற்காகவே சுவாமி எப்போது வடக்கு வீதிக்கு வரும் என்று காத்திருப்போம். பிரபல்யமான சீர்காழியின் பக்திப்பாடல் முதல் கடைசியாக வந்த பிரபல்யமான சினிமாப் பாட்டு வரை நாதஸ்வரத்தில் வாசிப்பார்கள். சுவாமி கோவில் வாசலுக்கு சென்று சேரும் வரை இந்த நாதஸ்வர பாட்டுக்கச்சேரி தொடரும். இந்த நாயனப் பாட்டுக் கச்சேரியை நீண்டநேரம் கேட்கவென சாமி தூக்கிகள் கூட மெதுவாகவே நகர்வார்கள். இவற்றை நாவலில் எழுத்தாளர் இயல்பு கெடாமல் கூறியிருப்பார்.
அதேபோலவே மற்றொரு காட்சிப் படிமம், ஆசிரியர்கள் மாணவர்களை வீதியில் அவசியமற்ற முறையில் கண்டால், அவர்களை கண்டித்து உடனே வீட்டுக்கு அனுப்பும் பழக்கம் பற்றி நாவலில் குறிப்பிடப்படுகிறது. இன்று மாணவர்களை கண்டால் ஆசிரியர்கள் ஒதுங்கிப்போகும் இயல்பே அதிகம் காணப்படுகிறது.
முக்கியமாக என்னை கவர்ந்த விடயம்,போகிறபோக்கில் அந்தக் காலகட்டத்தில் இளையோரிடத்தில் நூலகங்களை பயன்படுத்தும் பழக்கம், வாசிப்பு ஆர்வம், சிறுவர்கள் வாசிகசாலைக்கு சென்று புத்தகம் படிப்பது போன்றவற்றை கூறியிருப்பது. பாடசாலை முடிந்து வீட்டுக்கு வர பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் பருத்தித்துறை நூலகத்துத்தில் தேவனும் ராமுவும் பொழுதைக்களிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாடசாலைக் காலத்தில் நானும் நூலகத்துக்கு போவதை வழக்கமாக கொண்டிருந்தேன், இதை நான் முழுவதுமாக அனுபவித்து உணர்ந்தவன் என்ற வகையில் மிகவும் ரசித்தேன்.
அவ்வாறு நூலகத்துக்கு செல்வது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவமொன்றை தந்திருந்தது. ஆம், எனது முதலாவது துவிச்சக்கர வண்டியை துலைத்ததும் நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள பருத்தித்துறை நூலக வாயிலிலேயே, இதைப்பற்றி ஒரு சிறுகதைகூட எழுதியிருக்கிறேன்.
மரகதம் கணவனை ‘மெய்யே’ என்று விழிப்பதும், முத்துவேலர் மனைவியை ‘இஞ்சரப்பா" என விழிப்பதும், படிக்கும்போது இனம்புரியாத ஒட்டுதலை அந்தப் பாத்திரங்களோடு ஏற்படுத்தும்படியாக இருந்தது. இப்படியாக முத்துவேலருக்கும் மரகத்துக்கும் இடையில் நடக்கும் உரையாடல் முழுவதுமே ஊடல் கூடல் கலந்த ஊர்ப் பேச்சுமொழியில் சிறப்பாக அமைந்துள்ளது.
வல்லிபுரக்கோவிலில் தேவன் கணக்குவழக்குகள் பார்ப்பது, வல்லிபுரக்கோவிலில் சாராணனாக உற்சவகாலத்தில் நானும் எனது பாடசாலை நண்பர்களும் சேவையாற்றியதை நினைவுபடுத்தியது.
இப்படியாக நாவல் முழுவதும் குறிப்பிடும்படியாக பல சம்பவங்கள், உரையாடல்கள் என்னை தனிலைமறக்க செய்தன.
புனைவு சார்ந்த எழுத்தில் வரலாறு மற்றும் நிஜங்கள் கலக்கும் பொது அந்தப் புனைவு இன்னும் மெருகேறுவதாக கருதுகிறேன்.
சாதிய ரீதியாக காணப்பட்ட வேறுபாடுகள், பழக்கப்பழக்கங்கள் என்பவை நாவல் முழுவதுமே பேசப்படுகிறது, அதே நேரம் சாதிய ஒடுக்குமுறைகள் சார்ந்த தனது எதிர்ப்பை கதாபாத்திரங்களினூடாக பேசவும் தவறவில்லை. வடமராட்சியை மையப்படுத்தி ஈழப்போராட்ட ஆரம்பக்கட்டம் விரிவடைந்திருந்தது என்றால் மிகையில்லை, அவ்வாறான சில விடயங்களை நாவலில் குறிப்பிட்டிருந்தாலும் நாவலில் தான் எடுத்துக்கொண்ட கருவுக்கு வேண்டிய விடயங்களை மட்டும் பேசிக் செல்கிறது. இருப்பினும், அந்தக் காலகட்ட போராட்ட வரலாறு பற்றி இன்னும் சற்றுக் குறிப்பிட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.
நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓரிரண்டு சம்பவங்கள், அந்தக் காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட முற்போக்கான சிந்தனைகளை குறிப்பிடுகிறது. அவ்வாறிருந்தும் இன்றைக்கு ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு பின்னரும் எமது சமூகம் இன்னும் பிற்போக்குத்தனங்களில் இருந்து வெளிவராத சமூகமாகவே இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
நானூறு பக்கங்களைக் கொண்ட நீண்ட இந் நாவலை நின்று நிதானித்து சம்பவங்களை உள்வாங்கி வாசித்தேன். ஏனெனில் ஒவ்வொரு சிறு சம்பவமும், செயலும், கதையில் ஆங்காங்கே குறிப்பிடப்படும் வீதிகளும், கதை மாந்தரும் நான் ஏற்கெனவெ சந்தித்ததாக, நான் அறிந்ததாக, நான் அனுபவித்ததாக தோன்றியிருந்தது.
வாசிப்பின் முடிவில் இனம்புரியாத உணர்வுக்கு ஆட்படும்படியாக இருந்தது. இவ்வாறாக நான் வாழ்ந்த வாழ்க்கைமுறைக்கு என்னை மீள இழுத்துச்செல்லும் படியாக ஒரு நாவலைப் படைத்த ராஜாஜி ராஜகோபாலனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
No comments:
Post a Comment