Monday, February 7, 2022

நாராயணபுரம்: வடமராட்சியின் மண்வாசனை வீசும் நாவல்!

விக்னேஸ்வரன் எஸ்கே

கலைமுகம் (72) இதழில், நான் எழுதிவரும் 'கனவும் நனவாம் கதையும்' என்ற பத்தியில் வெளியான, நண்பர் 'ராஜாஜி ராஜகோபாலன்' அவர்களது நாவல் குறித்த எனது அறிமுகக் குறிப்பு இது
‘நாராயணபுரம்’ ஒரு ஈழத்து நாவல் என்றும், இதை எழுதியவர் இப்பொழுது புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் நன்கு அறியப்பட்ட ஒரு ஈழத்து எழுத்தாளர் ராஜாஜி ராஜகோபாலன் என்றும் தெரிந்துகொண்டு இந்நாவலை வாசிக்கப் புகும் வாசகர்களுக்கு, இந்தப் பெயர் இலங்கையிலுள்ள எந்த இடத்தின் பெயர் என்ற கேள்வி எழலாம். உண்மையில் அப்படி ஒரு பெயர் நானறிந்தவரை இலங்கையில் இல்லை என்றே நினைக்கிறேன், ஏன் நாராயனன் என்ற பெயர்கூட பெருமளவுக்குப் பரவலாக நம்மவர் மத்தியில் பாவிக்கப்படும் பெயரும் அல்ல. ஆனால் அது ஈழத்தவர்கள் மத்தியில், குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில்,பெரும்பாலான எல்லோருக்கும் தெரிந்த ஒரு ஊர்தான். ஊரின் பெயரைத்தான் நாவல் ஆசிரியர் மாற்றியிருக்கிறார். ‘விஷ்னுபுரம்’ என்ற ஜெயமோகனின் நாவலில் வரும் விஷ்னுபுரம் ஒரு கற்பனைப் பெயர் மட்டுமல்ல, அப்படி ஒரு இடமே இருந்ததில்லை என்பர். ஆனால் நாராயணபுரம் இரத்தமும் சதையுமாய் மக்கள் காலம் காலமாக வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு நிலம் மட்டுமல்ல, வரலாற்றுப் புகழ்பெற்ற ஒரு நிலமும் கூட. நாம் எல்லோரும் நன்கறிந்த, வடமராட்சிப் பிரதேசத்தின் புகழ்பெற்ற ஆலயமான வல்லிபுர ஆழ்வார் கோவில் நிலைகொண்டுள்ள வல்லிபுரம் என்ற பிரதேசம் தான் இந்த நாராயணபுரம்!. வடமராட்சியில் வல்லிபுரம் என்ற பெயர்கொண்ட ஒருவராவது இல்லாத ஊரே இல்லை என்று சொல்லும் அளவுக்குப் பிரபலமானது அந்தப் பெயர்.
இந்தக் கிராமத்தில் வாழும் ஒரு விவசாயக் குடும்பத்தின் மூன்று தலை முறைகால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களில் விரிந்துள்ளது இந்த நாவல். மொத்தம் நானூறு பக்கங்களைக் கொண்ட ஒரு நாவலாக இருந்தபோதும், ஆசிரியர் ராஜாஜி ராஜகோபாலனின் மொழி அழகும், கதைசொல்லும் பாணியும் அதைச் சலிப்பேதுமின்றி சுவாரசியமாக ஒரே மூச்சில் வாசித்துவிடக்கூடியதாக ஆக்கிவிட்டிருக்கின்றன. நாவல் முழுவதும் விரவிக் கிடக்கும், ஈழத்தமிமிழுக்கும், வடமராட்சி மண்ணுக்கும் உரிய -இன்று பாவனையில் அருகிவருகின்ற- பலநூறு சொற்கள், இயல்பான முறையில் தமது ஆழத்தையும் அழகையும் வெளிப்படுத்தும் விதத்தில் கதையின் அழகுக்குப் பலம்சேர்ப்பவையாக அமைந்துள்ளன. தமிழ் நாட்டில் பதிப்பிக்கப்பட்ட போதும், பதிப்பாளர்கள் அச் சொற்களை மாற்றாமல் அப்படியே விட்டிருப்பதற்காக நூலைப் பதிப்பித்த ‘டிஸ்கவரி புத்தக நிலைய’த்துக்கு நன்றி கூற வேண்டும். அர்த்தம் புரியாததால், எழுத்துப் பிழையென எண்ணி திருத்தப்பட்டிருக்கக் கூடிய அல்லது மொய்ப்புப் பார்த்தலில் ஏற்பட்ட தவறால், தவறாக வந்துவிட்ட ஒருசில சொற்களைத் தவிர (உதாரணத்துக்கு ஒன்று: தாவாரம் என்பது தாவரம் என வந்திருக்கிறது), ஓரிரு பதிப்பகங்கள் தவிர்ந்த தமிழ்நாட்டுப் பதிப்பாளர்கள் செய்யும் ‘திருத்த வேலை’ களை அது செய்யவில்லை என்பது மகிழ்ச்சியே. கிட்டங்கி, புலுடா, அயத்துப் போதல், மோனை, சண்டிக்கட்டு, பரியலங்கள், தின்னு, ஈளதாளம், படலை, மல்லுக்கு நிக்கிறது என்று பல சொற்கள் வடமராட்சிப் பிரதேசத்தில் ஒலிக்கும் அதே மண்வாசனையோடு நாவல் முழுவதும் நிறைந்து கிடக்கின்றன. அந்தப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ, நாவலில் வரும் ஒவ்வொரு சம்பவமும், உரையாடலும் எனக்கு எவ்வளவோ பழைய கதைகளையும் நினைவுகளையும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்துகொண்டிருந்தன.
ஒரு படைப்பின் வெற்றிக்கு அடிப்படையான ஒரு விடயம் என்று எதனைச் சொல்வது? அது சொல்லும் கதை, அது சொல்லப்படும் விதம், அது கையாண்டுள்ள மொழி என்ற இந்த மூன்றும் சரியாகப் பொருந்தி வரும்போதுதான் ஒரு நூல் இலக்கிய முழுமையையும், வெற்றியையும் பெறுகிறது என்பது எனது கருத்து. அந்த அடிப்படையில், நாராயணபுரம் நாராயணன் கோவிலை மையமாகக் கொண்ட ஒரு சூழலில், அதனோடிணைந்த வாழ்வைப் பரம்பரை பரம்பரையாகக் கொண்டு வாழும் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தின் மூன்று தலைமுறை வாழ்வைச் சொல்வதனூடாக, மூன்று தலைமுறை காலத்தின் அந்தப் பிரதேசத்திலும், நாட்டிலும், ஏற்பட்டுவந்த அரசியல், சமூக, பண்பாட்டுப் போக்குக்களையும், நிகழும் மாற்றங்களையும் அழகுறப் பதிவு செய்வதாக அமைகிறது. அதிகம் படிக்காத, மிகுந்த பிரயாசை உள்ள விவசாயியான முத்துவேலர் மாயவன் கோவிலில் மனமுருக நின்று அவனைத் தொழுகின்ற காட்சியுடன் தொடங்கும் நாவல், நாராயணபுரமும் அதைச் சூழவுள்ள கிராமங்கள் என்று அந்தப் பிரதேசத்தையே முழுமையாக வாசிப்பவர் கண்களில் விரியச் செய்துவிடுகிறது. அந்தமக்கள் பேசும் பேச்சுக்கள்,அவர்களது குணாதிசயங்கள், அவர்களிடையே நிலவும் நெருக்கமும் விரிசலும் சேர்ந்த இயல்பான உறவுகள், அவற்றிடையான ஊடாட்டங்கள் என்று அன்றைய அந்தச் சமூக வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் மிக லாவகமாகக் காட்சிப்படுத்திக் காட்டுகிறது அவரது அழகான மொழி.
முத்துவேலர் ஒரு விவசாயி. தனது முழு ஈடுபாட்டுடனான உழைப்பினால் வளர்ந்தவர். விவசாயம் அவரது உயிர். பாடசாலையில் கல்வியில் சிறந்து விளங்கும் மகனுக்கு, ஆங்கிலக் கல்வி, சங்கீதம் என்பவற்றையெல்லாம் படிக்க அனுமதிக்கும் அவர்,அவனுக்குப் பல்கலைக்கழகம் கிடைத்தபோதும் அது தேவையில்லை, எங்கடை விவசாயத்தை நாங்கள் விடக்கூடாது, படிச்சவனாக இருக்கவேண்டும் என்பதற்காக படித்தது போதும். இனி விவசாயத்தில் கவனம் செலுத்து என்று மறித்துவிடுகிறார். அவர் நினைத்தது போலவே மகன் தேவனும் விவசாயத்தில் சிறப்பாக ஈடுபடுகிறான். அவனுக்கு வரும் காதலையும், அது எங்கள் விவசாயக் குடும்பத்தின் தொடர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பொருந்தி வராது என்று மறுத்து ஒரு விவசாயக் குடும்பத்தில் திருமணம் செய்து வைக்கிறார். இரண்டுக்கும் அவருக்கிருந்த ஒரே காரணம் பரம்பரைத் தொழிலான விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது ஓர்மம். அடுத்த தலைமுறையைச் சேர்ந்த தேவனுடைய காலம் பல நெருக்கடிகளைத் தோற்றுவிக்கிறது. நாட்டில் ஏற்படும் நெருக்கடிகள்,அரசியல் மாற்றங்கள், விடுதலைஇயக்கங்களின் தோற்றமும்,வளர்ச்சியும் பின்னரான சிதைவுகளும் என்று விரிகிறது. தேவன் தனது படிப்பு ஆசையைப் பிள்ளைகளில் காணவிரும்புகிறார். மகன் பல்கலைக் கழகம் செல்கிறான், தேவன் விரும்பிய பொறியியல் பட்டப் படிப்புக்காக. ஆனால் பட்டப் படிப்புப் படிக்கும் மகன் தகப்பனுக்கு இப்படி எழுதுகிறான்: ’கொழும்பு வாழ்க்கை சுகமானதுதான். ஆனால் அதற்காக வீட்டையும் ஊரையும் வெறுத்து அந்த வாழ்க்கைக்கு ஆசைப்படமாட்டேன். படிக்கவும் வேலைக்கும் என தேடிப்போன இந்த நகரம் எவ்வளவு அழகாகவும் வசதியாகவும் கடற்கரையில் மாலை முழுவதும் காலார நடக்க இதமாக இருந்தாலும், அது பிறந்த ஊராகி விடுமா? நெருக்கமான நகரத்தின் இடுக்கில் கால் நீட்டிப் படுக்க முடியாத அறையும் நாலடி முற்றமும் வீடாகி விடுமா? கோடிப்புறத்தில் நிற்கும் ஒற்றைத் தென்னையும் பெயர் தெரியாத பூ மரங்களும் தோட்டமாகி விடுமா?’
ஆழமான சங்கீத உணர்வும், ஈடுபாடும் கொண்ட தேவன், தன் மனைவியின் மறைவுக்குப் பிறகு, அவளே தன் இறுதிக் காலத்தில் விரும்பியபடி, அவரது முன்னாள் காதலியான அக்காலத்தின் தலைசிறந்த பாடகி நித்யாவை மறுமணம் செய்ய, பிள்ளைகளே முன்னின்று ஊக்குவிப்பதுடன் ஒரு திருப்பத்தை அடையும் நாவல் மூன்று தலைமுறைகளதும் வாழ்வுபற்றிய சிந்தனைகள், அவற்றில் ஏற்படும் மாற்றங்கள், அக்காலத்தில் தொடங்கிய விடுதலைப் போராட்டம் ஏற்படுத்தும் புதிய சிந்தனைப் போக்குகளின் தாக்கம் என்று கிராமம் மாறுதலடையும் போக்கை அழகாகப் பேசுகிறது. இந்த நாவல் வடமராட்சியின் மொழியை, வாழ்க்கை முறையை, அதன் மண்வாசனையை மிக அழகாகப் பதிவுசெய்யும் ஒரு படைப்பு என்று துணிந்து கூறலாம். நாவலின் எழுத்து பல இடங்களில் கல்கியையும், தி.ஜானகிராமனையும் எனக்கு அடிக்கடி ஞாபகம் படுத்தின என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். ஈழத்தில் வெளிவந்த இதுவரை நான் வாசித்த நாவல்களில் இது பெருமளவில் வேறுபட்ட, தனித்துவம் பொருந்தியதாக அமைந்துள்ளது. நூலுக்கான அணிந்துரையில் நாவல் பற்றி மிக விரிவாகவே பேசியுள்ள பேராசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள், ‘இதை எழுதியவர் ஒரு புலம்பெயர் தமிழர் என்ற வகையில் இந்நாவல் புலம்பெயர் இலக்கியம் என்ற வகையிலும் இது கவனத்துக்குரியதாகிறது’ என்றும் இது ‘ஈழத்தின் போர்க்கால நாவல்’ என்றும் குறிப்பிடுகிறார். இந்த வரையறைகள் மேலும் விரிவான உரையாடலுக்குரியவை என்றே நினைக்கிறேன். என்னைப் பொறுத்தளவில் இந்த நாவல் நிகழும் பிரதேசத்து நம்பிக்கைகள், சமூக உறவுகள், சிந்தனைப் போக்குகளை அந்தப் பிரதேசத்துக்குரிய மண்வாசனையுடன் முன்வைக்கின்றது என்பதே அதன் தனித்துவம் என்று நான் நினைக்கிறேன் இது ஈழத்து நாவல்கள் மத்தியில் போர்க்காலம் பற்றிப் பேசினும் கூட, இதன் தனித்துவம் வேறு என்றே நினைக்கிறேன். இந்தப் பத்தியில் நான் அதனுள் நுளைய விரும்பவில்லை. ஆயினும், நாவல் வாசிப்பில் ஆர்வமுள்ள அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு நாவல் என்று எந்தத் தயக்கமும் இன்றி என்னால் சிபாரிசு செய்ய முடியும். நண்பர் ராஜாஜிக்கு Rajaji Rajagoplan எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

No comments:

Post a Comment