Monday, February 7, 2022

'நாராயணபுரம்' நாவல் பற்றிய எனது வாசிப்பனுபவம்

 'எங்கட புத்தகங்கள்' சஞ்சிகையின் ஒக்டோபர் 2021 இதழில் பிரசுரமாகியிருந்த, ராஜாஜி ராஜகோபாலன் அவர்களின் 'நாராயணபுரம்' நாவல் பற்றிய எனது வாசிப்பனுபவம்.

November 30, 2021

குலசிங்கம் வசீகரன்.
ராஜாஜி ராஜகோபாலனின் 'நாராயணபுரம்' நாவலோடு கடந்த இரு தினங்களாகப் பயணித்துவந்தேன். உண்மையில் 1975 - 80 காலப்பகுதியில் பயணித்தேன் என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும், அதுவும் நான் பிறந்து வளர்ந்த ஊரான பருத்தித்துறை, புலோலி, வல்லிபுரக்குறிச்சி ஆகிய ஊர்களில் இந்த பயணம் அமைந்திருந்தது. முத்துவேலர், அவர் மகன் தேவன் ஆகியோரோடு நானும் ஒருவனாக மீண்டும் எம் ஊரில் உலவி வந்தேன்.

பருத்தித்துறை முதல் வல்லிபுரக்குறிச்சி வரையான பிரதேசத்து வாழ்வியலை தான் படைத்த கதாபாத்திரங்களினூடாக மிக சிறப்பாக கூறிச்செல்கிறார். பேச்சு வழக்கில் இருந்து, வாழ்க்கைமுறை, சாதியம், கலை, பக்தி, வருமான ஏற்றத்தாழ்வு என்று பல விடயங்களையும் நாவல் ஊடாக பேசியிருப்பதால், தனியே இது ஒரு புனைவு வடிவம் என்று மட்டும் அல்லாமல் வாழ்வியல் பதிவாகவும் இந்த நாவல் அமைந்து விடுகிறது. சிறுவன் தேவன் தந்தையாகி தனது பிள்ளைகளை உயர்கல்வி கற்க வைப்பதோடு நாவல் நிறைவுபெற்றாலும், மூன்று தலைமுறைகளின் காலத்தை, அந்தந்த காலகட்டங்களில் ஊரில், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மட்டுமல்லாமல், வாழ்க்கைமுறை, பொருளாதாரம், என அனைத்து மாற்றங்களையும் ஆசிரியர் நாவலினூடாக தொட்டுச்சென்றிருக்கிறார்.

ராஜாஜி ராஜகோபாலன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பான ‘குதிரை இல்லாத ராஜகுமாரன்’ இல் அவரது எழுத்து என்னை கவர்ந்திருந்தது மட்டுமல்லாமல், குறித்த காலக்கட்டத்தில் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளமுடியாது முற்போக்கான விடயங்களை தனது எழுத்துநடையால் மிக நளினமாக தனது கதாபாத்திரங்களைக் கொண்டு நடத்திக்காட்டியிருப்பார். அதுபோல் இந்த நாவலிலும் பல விடயங்களை அவர் இயல்பாக பேசியிருக்கிறார்.

நாராயணபுரம் நாவலாக எனக்கு தெரியவில்லை, தேவன் என்கின்ற ஒரு மனிதனின் வாழ்க்கையினூடாக, வல்லிபுரக்குறிச்சி என்கின்ற பிரதேசம் சார்ந்த வாழ்க்கைமுறை விபரிக்கப்பட்டிருக்கின்றது என்றே நான் எண்ணுகிறேன். அந்த மணல் காட்டின் புழுதிக் காற்றும், வெய்யிலும் பட்டுணர்ந்த ராஜாஜி ராஜகோபாலன் அவர்கள் தன் வாழ்நாள் கனவாக இந்த நாவலை படைத்துள்ளார்.
கதை நடந்த காலகட்டம் நான் வளர்ந்த காலகட்டத்துக்கு முற்பட்டது என்றாலும் கதையோடு பல இடங்களில் என்னால் சேர்ந்து பயணிக்க முடிகிறது. வாழ்ந்த வாழ்க்கையின் இனிய பொழுதுகளை மீட்டிப்பார்க்க விரும்பும் மனது, துன்பியல்கணங்களை ஆசையுடன் மீட்டிப்பார்பதில்லை. சுகமான சுமையாக அந்தக் கணங்கள் தெரிந்தாலும், மனதுக்குள் சுமையொன்றை தராமல் மீள்வதில்லை. இந்த நாவல் மீட்டளித்த நினைவுகள் சுகமானவையாக இருந்தாலும் சுமையையும் தந்துவிட்டே சென்றிருக்கின்றன.

நாவலின் ஆரம்பத்தில் கமலா டீச்சரிடம் தேவன் பாடம் படிக்க செல்கிறான், அவர்களுக்கிடையில் இனம்புரியாத பாசஉணர்வொன்று தோன்றுகிறது. அவ்வாறாக ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையில் ஏற்படும் உறவில் சடுதியான மாற்றம், அதேவேகத்தில் அவர்கள் பிரிந்துபோகிறார்கள். ஊரிலிருந்து கொழும்புக்கு மாற்றலகிச்செல்லும் கமலா டீச்சர் தேவனிடம், 'இப்படியான திருப்பங்கள் அவரவர் வாழ்க்கையில் நடப்பது இயல்பு, தவிர்க்க முடியாததும் கூட, ஆனபடியால் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே', என்று கூறியிருப்பார். அன்றும் அதன் பின்னரும் தேவன் வாழ்வில் பல்வேறு திருப்பங்களை சந்தித்திருப்பான், ஆனாலும் கமலா டீச்சரின் நினைவு அவனுக்குள் எழவில்லை. இந்த உறவை பற்றிய சிறு நினைவேனும் தேவனின் மனதில் பின்னர் ஒருபோது தோன்றவில்லை என்பது ஏனென்று நாவலாசிரியருக்கே வெளிச்சம்.
பொதுவாக நம் ஊர் கோவில் திருவிழாக்களில் வீதிஉலா வரும் சுவாமி வடக்கு வீதிக்கு வந்ததும் தவில் நாதஸ்வரத்தில் பாடல்களை இசைக்கத்தொடங்குவார்கள். நாமும் அதற்காகவே சுவாமி எப்போது வடக்கு வீதிக்கு வரும் என்று காத்திருப்போம். பிரபல்யமான சீர்காழியின் பக்திப்பாடல் முதல் கடைசியாக வந்த பிரபல்யமான சினிமாப் பாட்டு வரை நாதஸ்வரத்தில் வாசிப்பார்கள். சுவாமி கோவில் வாசலுக்கு சென்று சேரும் வரை இந்த நாதஸ்வர பாட்டுக்கச்சேரி தொடரும். இந்த நாயனப் பாட்டுக் கச்சேரியை நீண்டநேரம் கேட்கவென சாமி தூக்கிகள் கூட மெதுவாகவே நகர்வார்கள். இவற்றை நாவலில் எழுத்தாளர் இயல்பு கெடாமல் கூறியிருப்பார்.

அதேபோலவே மற்றொரு காட்சிப் படிமம், ஆசிரியர்கள் மாணவர்களை வீதியில் அவசியமற்ற முறையில் கண்டால், அவர்களை கண்டித்து உடனே வீட்டுக்கு அனுப்பும் பழக்கம் பற்றி நாவலில் குறிப்பிடப்படுகிறது. இன்று மாணவர்களை கண்டால் ஆசிரியர்கள் ஒதுங்கிப்போகும் இயல்பே அதிகம் காணப்படுகிறது.
முக்கியமாக என்னை கவர்ந்த விடயம்,போகிறபோக்கில் அந்தக் காலகட்டத்தில் இளையோரிடத்தில் நூலகங்களை பயன்படுத்தும் பழக்கம், வாசிப்பு ஆர்வம், சிறுவர்கள் வாசிகசாலைக்கு சென்று புத்தகம் படிப்பது போன்றவற்றை கூறியிருப்பது. பாடசாலை முடிந்து வீட்டுக்கு வர பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் பருத்தித்துறை நூலகத்துத்தில் தேவனும் ராமுவும் பொழுதைக்களிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாடசாலைக் காலத்தில் நானும் நூலகத்துக்கு போவதை வழக்கமாக கொண்டிருந்தேன், இதை நான் முழுவதுமாக அனுபவித்து உணர்ந்தவன் என்ற வகையில் மிகவும் ரசித்தேன்.

அவ்வாறு நூலகத்துக்கு செல்வது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவமொன்றை தந்திருந்தது. ஆம், எனது முதலாவது துவிச்சக்கர வண்டியை துலைத்ததும் நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள பருத்தித்துறை நூலக வாயிலிலேயே, இதைப்பற்றி ஒரு சிறுகதைகூட எழுதியிருக்கிறேன்.

மரகதம் கணவனை ‘மெய்யே’ என்று விழிப்பதும், முத்துவேலர் மனைவியை ‘இஞ்சரப்பா" என விழிப்பதும், படிக்கும்போது இனம்புரியாத ஒட்டுதலை அந்தப் பாத்திரங்களோடு ஏற்படுத்தும்படியாக இருந்தது. இப்படியாக முத்துவேலருக்கும் மரகத்துக்கும் இடையில் நடக்கும் உரையாடல் முழுவதுமே ஊடல் கூடல் கலந்த ஊர்ப் பேச்சுமொழியில் சிறப்பாக அமைந்துள்ளது.

வல்லிபுரக்கோவிலில் தேவன் கணக்குவழக்குகள் பார்ப்பது, வல்லிபுரக்கோவிலில் சாராணனாக உற்சவகாலத்தில் நானும் எனது பாடசாலை நண்பர்களும் சேவையாற்றியதை நினைவுபடுத்தியது.

இப்படியாக நாவல் முழுவதும் குறிப்பிடும்படியாக பல சம்பவங்கள், உரையாடல்கள் என்னை தனிலைமறக்க செய்தன.

புனைவு சார்ந்த எழுத்தில் வரலாறு மற்றும் நிஜங்கள் கலக்கும் பொது அந்தப் புனைவு இன்னும் மெருகேறுவதாக கருதுகிறேன்.

சாதிய ரீதியாக காணப்பட்ட வேறுபாடுகள், பழக்கப்பழக்கங்கள் என்பவை நாவல் முழுவதுமே பேசப்படுகிறது, அதே நேரம் சாதிய ஒடுக்குமுறைகள் சார்ந்த தனது எதிர்ப்பை கதாபாத்திரங்களினூடாக பேசவும் தவறவில்லை. வடமராட்சியை மையப்படுத்தி ஈழப்போராட்ட ஆரம்பக்கட்டம் விரிவடைந்திருந்தது என்றால் மிகையில்லை, அவ்வாறான சில விடயங்களை நாவலில் குறிப்பிட்டிருந்தாலும் நாவலில் தான் எடுத்துக்கொண்ட கருவுக்கு வேண்டிய விடயங்களை மட்டும் பேசிக் செல்கிறது. இருப்பினும், அந்தக் காலகட்ட போராட்ட வரலாறு பற்றி இன்னும் சற்றுக் குறிப்பிட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓரிரண்டு சம்பவங்கள், அந்தக் காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட முற்போக்கான சிந்தனைகளை குறிப்பிடுகிறது. அவ்வாறிருந்தும் இன்றைக்கு ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு பின்னரும் எமது சமூகம் இன்னும் பிற்போக்குத்தனங்களில் இருந்து வெளிவராத சமூகமாகவே இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

நானூறு பக்கங்களைக் கொண்ட நீண்ட இந் நாவலை நின்று நிதானித்து சம்பவங்களை உள்வாங்கி வாசித்தேன். ஏனெனில் ஒவ்வொரு சிறு சம்பவமும், செயலும், கதையில் ஆங்காங்கே குறிப்பிடப்படும் வீதிகளும், கதை மாந்தரும் நான் ஏற்கெனவெ சந்தித்ததாக, நான் அறிந்ததாக, நான் அனுபவித்ததாக தோன்றியிருந்தது.

வாசிப்பின் முடிவில் இனம்புரியாத உணர்வுக்கு ஆட்படும்படியாக இருந்தது. இவ்வாறாக நான் வாழ்ந்த வாழ்க்கைமுறைக்கு என்னை மீள இழுத்துச்செல்லும் படியாக ஒரு நாவலைப் படைத்த ராஜாஜி ராஜகோபாலனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நாராயணபுரம் வாசிப்பு அனுபவம்


October 12, 2021

(வாசித்து ரொம்ப நாட்களுக்கு பிறகு)
இந்த நூல் பற்றி அறிமுகத்தில் மூன்று தலைமுறைகளின் கதை என்று சொன்ன ஒரே விடயம் தான் இந்த நூலை வாசிக்க வேண்டும் என்கின்ற ஆவலை தூண்டியது. நான் பிறந்த போதே யுத்தமும் பிறந்து விட்ட ஒரு நாட்டில் யுத்தத்துக்கு முந்திய எங்கள் மூத்த தலைமுறையினரின் வாழ்க்கை பற்றி பெரிதாக எதுவும் அறிய முடியவில்லை.- ஈழத்து எழுத்தாளர் கே.டானியலின் படைப்புகள் தவிர அந்தக் காலத்தைப்பற்றிய கதைகள் வாசித்தது இல்லை. கே.டானியல் அவர்களின் கதைகள் வரலாற்று நாவல்களுக்கு ஒப்பான உண்மைகளை சொன்னாலும் ஒரே ஒரு விடயம் தான் மறுபடி மறுபடி சொல்லப்படும். அது தவிர்த்து எங்கள் முன்னோர் எப்படி இருந்தார்கள் என்று அறிந்து கொள்ளும் ஆவலே நாராயணபுரம் வாசிக்க முதல் காரணம்.
மூன்று தலைமுறைக் கதை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மூன்று தலைமுறை வந்தாலும் அது தேவனின் கதை தான்.ஒரு மெல்லிய சோகத்துடனான காதல் கதை. கதையின் நாயகனின் வாழ்க்கை அவனுக்கு "ன் "விகுதி கொடுத்ததில் இருந்து "ர் " விகுதிக்கு மாற கதை முடிந்து விடுகிறது.அந்தக் கதைக்குள்ளாலேயே நான் தேடிய வாழ்க்கை சொல்லப்பட்டு விடுகிறது. முத்துவேலரின் அறிமுகம், அவர் மகனின் ஏக்கங்கள் அவன் பள்ளிப்பருவத்து வாழ்க்கை,வல்லிபுரம் கிராம மக்களின் கடவுள் நம்பிக்கை, கோவிலொடு இணைந்து இருக்கும் அவர்களின் அன்றாட வாழ்க்கை எல்லாமே இயல்பாக கதையை ஒட்டி சொல்லப்படுகிறது.அந்த காதல் கதைக்குள்ளேயே சாதி அடக்குமுறையில் இருந்து வயல் வேலைக்கு கூலி ஆட்கள் வந்த காலம் மாறி டிராக்டர் வந்தது வரைக்கும் கதைப்பின்னலுடனேயே நெய்யப்பட்டு விட்டது. அதற்கு சங்கீதத்தை வைத்து சரிகை நெய்து இருக்கிறார் ஆசிரியர்.
முத்துவேலர் என்ன தான் அடாவடியாக தன இஷ்டப்படியே மகனை வளர்த்து அவன் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிராகரித்தாலும் கூட மனதில் கம்பீரமாக தான் நிற்கிறார்.
என்ன சொல்ல. மனிதர்கள் சேடம் இழுத்து செத்த காலத்தில் இருந்து நம் தேசம் அந்த மனிதர்கள் ஷெல்லடி பட்டு செத்த காலத்துக்குள் நகர்ந்து விடுகிறதை யதார்த்தமாகவே காட்டி இருக்கிறார்..இவ்வளவு அம்சங்களையும் சேர்த்து கோர்த்து நெய்து கடைசியில் தேவனை அவன் காதலியுடன் சேர்த்து விடும் போது கொஞ்சம் சந்தோசம் வந்தாலும் திலகத்தின் மரணம் சோகமாகவே இருக்கிறது.மூத்த எழுத்தாளர் அகிலன் அவர்களின் சித்திரப்பாவை நாவல் படித்த போது ஏற்பட்ட உணர்வே நாராயணபுரம் வாசித்து முடிந்ததும் எழுந்தது.

நாராயணபுரம்: வடமராட்சியின் மண்வாசனை வீசும் நாவல்!

விக்னேஸ்வரன் எஸ்கே

கலைமுகம் (72) இதழில், நான் எழுதிவரும் 'கனவும் நனவாம் கதையும்' என்ற பத்தியில் வெளியான, நண்பர் 'ராஜாஜி ராஜகோபாலன்' அவர்களது நாவல் குறித்த எனது அறிமுகக் குறிப்பு இது
‘நாராயணபுரம்’ ஒரு ஈழத்து நாவல் என்றும், இதை எழுதியவர் இப்பொழுது புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் நன்கு அறியப்பட்ட ஒரு ஈழத்து எழுத்தாளர் ராஜாஜி ராஜகோபாலன் என்றும் தெரிந்துகொண்டு இந்நாவலை வாசிக்கப் புகும் வாசகர்களுக்கு, இந்தப் பெயர் இலங்கையிலுள்ள எந்த இடத்தின் பெயர் என்ற கேள்வி எழலாம். உண்மையில் அப்படி ஒரு பெயர் நானறிந்தவரை இலங்கையில் இல்லை என்றே நினைக்கிறேன், ஏன் நாராயனன் என்ற பெயர்கூட பெருமளவுக்குப் பரவலாக நம்மவர் மத்தியில் பாவிக்கப்படும் பெயரும் அல்ல. ஆனால் அது ஈழத்தவர்கள் மத்தியில், குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில்,பெரும்பாலான எல்லோருக்கும் தெரிந்த ஒரு ஊர்தான். ஊரின் பெயரைத்தான் நாவல் ஆசிரியர் மாற்றியிருக்கிறார். ‘விஷ்னுபுரம்’ என்ற ஜெயமோகனின் நாவலில் வரும் விஷ்னுபுரம் ஒரு கற்பனைப் பெயர் மட்டுமல்ல, அப்படி ஒரு இடமே இருந்ததில்லை என்பர். ஆனால் நாராயணபுரம் இரத்தமும் சதையுமாய் மக்கள் காலம் காலமாக வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு நிலம் மட்டுமல்ல, வரலாற்றுப் புகழ்பெற்ற ஒரு நிலமும் கூட. நாம் எல்லோரும் நன்கறிந்த, வடமராட்சிப் பிரதேசத்தின் புகழ்பெற்ற ஆலயமான வல்லிபுர ஆழ்வார் கோவில் நிலைகொண்டுள்ள வல்லிபுரம் என்ற பிரதேசம் தான் இந்த நாராயணபுரம்!. வடமராட்சியில் வல்லிபுரம் என்ற பெயர்கொண்ட ஒருவராவது இல்லாத ஊரே இல்லை என்று சொல்லும் அளவுக்குப் பிரபலமானது அந்தப் பெயர்.
இந்தக் கிராமத்தில் வாழும் ஒரு விவசாயக் குடும்பத்தின் மூன்று தலை முறைகால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களில் விரிந்துள்ளது இந்த நாவல். மொத்தம் நானூறு பக்கங்களைக் கொண்ட ஒரு நாவலாக இருந்தபோதும், ஆசிரியர் ராஜாஜி ராஜகோபாலனின் மொழி அழகும், கதைசொல்லும் பாணியும் அதைச் சலிப்பேதுமின்றி சுவாரசியமாக ஒரே மூச்சில் வாசித்துவிடக்கூடியதாக ஆக்கிவிட்டிருக்கின்றன. நாவல் முழுவதும் விரவிக் கிடக்கும், ஈழத்தமிமிழுக்கும், வடமராட்சி மண்ணுக்கும் உரிய -இன்று பாவனையில் அருகிவருகின்ற- பலநூறு சொற்கள், இயல்பான முறையில் தமது ஆழத்தையும் அழகையும் வெளிப்படுத்தும் விதத்தில் கதையின் அழகுக்குப் பலம்சேர்ப்பவையாக அமைந்துள்ளன. தமிழ் நாட்டில் பதிப்பிக்கப்பட்ட போதும், பதிப்பாளர்கள் அச் சொற்களை மாற்றாமல் அப்படியே விட்டிருப்பதற்காக நூலைப் பதிப்பித்த ‘டிஸ்கவரி புத்தக நிலைய’த்துக்கு நன்றி கூற வேண்டும். அர்த்தம் புரியாததால், எழுத்துப் பிழையென எண்ணி திருத்தப்பட்டிருக்கக் கூடிய அல்லது மொய்ப்புப் பார்த்தலில் ஏற்பட்ட தவறால், தவறாக வந்துவிட்ட ஒருசில சொற்களைத் தவிர (உதாரணத்துக்கு ஒன்று: தாவாரம் என்பது தாவரம் என வந்திருக்கிறது), ஓரிரு பதிப்பகங்கள் தவிர்ந்த தமிழ்நாட்டுப் பதிப்பாளர்கள் செய்யும் ‘திருத்த வேலை’ களை அது செய்யவில்லை என்பது மகிழ்ச்சியே. கிட்டங்கி, புலுடா, அயத்துப் போதல், மோனை, சண்டிக்கட்டு, பரியலங்கள், தின்னு, ஈளதாளம், படலை, மல்லுக்கு நிக்கிறது என்று பல சொற்கள் வடமராட்சிப் பிரதேசத்தில் ஒலிக்கும் அதே மண்வாசனையோடு நாவல் முழுவதும் நிறைந்து கிடக்கின்றன. அந்தப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ, நாவலில் வரும் ஒவ்வொரு சம்பவமும், உரையாடலும் எனக்கு எவ்வளவோ பழைய கதைகளையும் நினைவுகளையும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்துகொண்டிருந்தன.
ஒரு படைப்பின் வெற்றிக்கு அடிப்படையான ஒரு விடயம் என்று எதனைச் சொல்வது? அது சொல்லும் கதை, அது சொல்லப்படும் விதம், அது கையாண்டுள்ள மொழி என்ற இந்த மூன்றும் சரியாகப் பொருந்தி வரும்போதுதான் ஒரு நூல் இலக்கிய முழுமையையும், வெற்றியையும் பெறுகிறது என்பது எனது கருத்து. அந்த அடிப்படையில், நாராயணபுரம் நாராயணன் கோவிலை மையமாகக் கொண்ட ஒரு சூழலில், அதனோடிணைந்த வாழ்வைப் பரம்பரை பரம்பரையாகக் கொண்டு வாழும் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தின் மூன்று தலைமுறை வாழ்வைச் சொல்வதனூடாக, மூன்று தலைமுறை காலத்தின் அந்தப் பிரதேசத்திலும், நாட்டிலும், ஏற்பட்டுவந்த அரசியல், சமூக, பண்பாட்டுப் போக்குக்களையும், நிகழும் மாற்றங்களையும் அழகுறப் பதிவு செய்வதாக அமைகிறது. அதிகம் படிக்காத, மிகுந்த பிரயாசை உள்ள விவசாயியான முத்துவேலர் மாயவன் கோவிலில் மனமுருக நின்று அவனைத் தொழுகின்ற காட்சியுடன் தொடங்கும் நாவல், நாராயணபுரமும் அதைச் சூழவுள்ள கிராமங்கள் என்று அந்தப் பிரதேசத்தையே முழுமையாக வாசிப்பவர் கண்களில் விரியச் செய்துவிடுகிறது. அந்தமக்கள் பேசும் பேச்சுக்கள்,அவர்களது குணாதிசயங்கள், அவர்களிடையே நிலவும் நெருக்கமும் விரிசலும் சேர்ந்த இயல்பான உறவுகள், அவற்றிடையான ஊடாட்டங்கள் என்று அன்றைய அந்தச் சமூக வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் மிக லாவகமாகக் காட்சிப்படுத்திக் காட்டுகிறது அவரது அழகான மொழி.
முத்துவேலர் ஒரு விவசாயி. தனது முழு ஈடுபாட்டுடனான உழைப்பினால் வளர்ந்தவர். விவசாயம் அவரது உயிர். பாடசாலையில் கல்வியில் சிறந்து விளங்கும் மகனுக்கு, ஆங்கிலக் கல்வி, சங்கீதம் என்பவற்றையெல்லாம் படிக்க அனுமதிக்கும் அவர்,அவனுக்குப் பல்கலைக்கழகம் கிடைத்தபோதும் அது தேவையில்லை, எங்கடை விவசாயத்தை நாங்கள் விடக்கூடாது, படிச்சவனாக இருக்கவேண்டும் என்பதற்காக படித்தது போதும். இனி விவசாயத்தில் கவனம் செலுத்து என்று மறித்துவிடுகிறார். அவர் நினைத்தது போலவே மகன் தேவனும் விவசாயத்தில் சிறப்பாக ஈடுபடுகிறான். அவனுக்கு வரும் காதலையும், அது எங்கள் விவசாயக் குடும்பத்தின் தொடர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பொருந்தி வராது என்று மறுத்து ஒரு விவசாயக் குடும்பத்தில் திருமணம் செய்து வைக்கிறார். இரண்டுக்கும் அவருக்கிருந்த ஒரே காரணம் பரம்பரைத் தொழிலான விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது ஓர்மம். அடுத்த தலைமுறையைச் சேர்ந்த தேவனுடைய காலம் பல நெருக்கடிகளைத் தோற்றுவிக்கிறது. நாட்டில் ஏற்படும் நெருக்கடிகள்,அரசியல் மாற்றங்கள், விடுதலைஇயக்கங்களின் தோற்றமும்,வளர்ச்சியும் பின்னரான சிதைவுகளும் என்று விரிகிறது. தேவன் தனது படிப்பு ஆசையைப் பிள்ளைகளில் காணவிரும்புகிறார். மகன் பல்கலைக் கழகம் செல்கிறான், தேவன் விரும்பிய பொறியியல் பட்டப் படிப்புக்காக. ஆனால் பட்டப் படிப்புப் படிக்கும் மகன் தகப்பனுக்கு இப்படி எழுதுகிறான்: ’கொழும்பு வாழ்க்கை சுகமானதுதான். ஆனால் அதற்காக வீட்டையும் ஊரையும் வெறுத்து அந்த வாழ்க்கைக்கு ஆசைப்படமாட்டேன். படிக்கவும் வேலைக்கும் என தேடிப்போன இந்த நகரம் எவ்வளவு அழகாகவும் வசதியாகவும் கடற்கரையில் மாலை முழுவதும் காலார நடக்க இதமாக இருந்தாலும், அது பிறந்த ஊராகி விடுமா? நெருக்கமான நகரத்தின் இடுக்கில் கால் நீட்டிப் படுக்க முடியாத அறையும் நாலடி முற்றமும் வீடாகி விடுமா? கோடிப்புறத்தில் நிற்கும் ஒற்றைத் தென்னையும் பெயர் தெரியாத பூ மரங்களும் தோட்டமாகி விடுமா?’
ஆழமான சங்கீத உணர்வும், ஈடுபாடும் கொண்ட தேவன், தன் மனைவியின் மறைவுக்குப் பிறகு, அவளே தன் இறுதிக் காலத்தில் விரும்பியபடி, அவரது முன்னாள் காதலியான அக்காலத்தின் தலைசிறந்த பாடகி நித்யாவை மறுமணம் செய்ய, பிள்ளைகளே முன்னின்று ஊக்குவிப்பதுடன் ஒரு திருப்பத்தை அடையும் நாவல் மூன்று தலைமுறைகளதும் வாழ்வுபற்றிய சிந்தனைகள், அவற்றில் ஏற்படும் மாற்றங்கள், அக்காலத்தில் தொடங்கிய விடுதலைப் போராட்டம் ஏற்படுத்தும் புதிய சிந்தனைப் போக்குகளின் தாக்கம் என்று கிராமம் மாறுதலடையும் போக்கை அழகாகப் பேசுகிறது. இந்த நாவல் வடமராட்சியின் மொழியை, வாழ்க்கை முறையை, அதன் மண்வாசனையை மிக அழகாகப் பதிவுசெய்யும் ஒரு படைப்பு என்று துணிந்து கூறலாம். நாவலின் எழுத்து பல இடங்களில் கல்கியையும், தி.ஜானகிராமனையும் எனக்கு அடிக்கடி ஞாபகம் படுத்தின என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். ஈழத்தில் வெளிவந்த இதுவரை நான் வாசித்த நாவல்களில் இது பெருமளவில் வேறுபட்ட, தனித்துவம் பொருந்தியதாக அமைந்துள்ளது. நூலுக்கான அணிந்துரையில் நாவல் பற்றி மிக விரிவாகவே பேசியுள்ள பேராசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள், ‘இதை எழுதியவர் ஒரு புலம்பெயர் தமிழர் என்ற வகையில் இந்நாவல் புலம்பெயர் இலக்கியம் என்ற வகையிலும் இது கவனத்துக்குரியதாகிறது’ என்றும் இது ‘ஈழத்தின் போர்க்கால நாவல்’ என்றும் குறிப்பிடுகிறார். இந்த வரையறைகள் மேலும் விரிவான உரையாடலுக்குரியவை என்றே நினைக்கிறேன். என்னைப் பொறுத்தளவில் இந்த நாவல் நிகழும் பிரதேசத்து நம்பிக்கைகள், சமூக உறவுகள், சிந்தனைப் போக்குகளை அந்தப் பிரதேசத்துக்குரிய மண்வாசனையுடன் முன்வைக்கின்றது என்பதே அதன் தனித்துவம் என்று நான் நினைக்கிறேன் இது ஈழத்து நாவல்கள் மத்தியில் போர்க்காலம் பற்றிப் பேசினும் கூட, இதன் தனித்துவம் வேறு என்றே நினைக்கிறேன். இந்தப் பத்தியில் நான் அதனுள் நுளைய விரும்பவில்லை. ஆயினும், நாவல் வாசிப்பில் ஆர்வமுள்ள அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு நாவல் என்று எந்தத் தயக்கமும் இன்றி என்னால் சிபாரிசு செய்ய முடியும். நண்பர் ராஜாஜிக்கு Rajaji Rajagoplan எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!