“ஏன் அழுகிறாய், ராம்? நான் இன்னும் செத்துப்போய்விடவில்லை.” எனது அலுவலக மேசை விளிம்பில் தன் பின்புறத்தை ஊன்றியபடி நின்ற என் இனிய நண்பி ராணி மேத்தா நாக்குளற இச்சொற்களை உதிர்த்தாள். அவள் கன்னம் குழிந்து, உடல் சோர்ந்து என் முன்னே வந்து நின்றதைக் கண்டதும் திடுக்கிட்டு எழுந்து நின்றேன். அவளை இதற்கு முன் கண்டது இன்றிலிருந்து ஒரு மாதத்துக்கு முன் ஒரு மதிய நேரம்.
அன்று
காலையில் எங்கள் அலுவலகக் கட்டிடத்தின் இருபதாவது மாடி
காஃபி ஷாப் வாசலில் வரிசையில் நின்றபோது எனக்குப் பின்னால் யாரோ நெருக்கித் தள்ளியபடி வந்து சேர்ந்தார் போலிருந்தது. திரும்பிப் பார்த்துத்தான் அது யாரென அறியவேண்டுமென்ற
அவசியமிருக்கவில்லை. நிச்சயமாக அது டொரதி டெம்ப்ளேட்டன். அவள் தன்மீது விசிறியிருந்த பெர்ஃப்யூம் அவளுக்கு முன்னரே வந்து மூக்கை மூடித் தலையைத் திருப்ப வைத்துவிடும். ஸ்காட்டிஷ்காரியென்று நெற்றியில் எழுதி ஒட்டப்பட்டிருக்கும், அதற்கேற்பக் குரலிலும் சிறிது ஆண்பிள்ளைத் தனமும் அதிகாரமும் கலந்திருக்கும்.
தோளில்
தட்டி என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தாள் டொரதி.
“ஹை
டொரதி!”
“ராம், உன்னுடைய கூட்டாளி லஞ்சுக்கு முன் வருவதாகக் கூப்பிட்டுச் சொன்னாள்.” சொல்லிய கையோடு கண்களை இமைக் கூரையில் சொருவிக் கூர்ந்து என்னைக் கவனித்தாள்.
“ராணி
மேத்தா?”
“வேறு
யார்?”
“எப்படி, சுகமாக
இருக்கிறாளா?”
“ஓகே
என்று மட்டும் சொன்னாள். உன்னிடம்தானே
முதலில் வரப்போகிறாள். நீயே கேட்டு அறிந்துகொள்.”
“அப்போ, உன்னை ஏன் முதலில் கூப்பிட்டுச் சொன்னாள்?”
“அது
ஏனென்று எனக்குத் தெரியாது, அதையும்
அறிந்துகொள்வது உன்னைப் பொறுத்தது.” என்றாள். ராணி
முதலில் என்னைக் கூப்பிடாததற்குரிய உண்மையான காரணத்தைப் பிறகுதான் அறிந்துகொண்டேன்.
எங்கள்
மாகாண அரசாங்க அமைச்சுப் பிரிவொன்றின் நிர்வாகப் பதவியில்
எனக்கு நேர் மேலே ஸீனியர் மானேஜராக உள்ளவள் ராணி, அவளுக்கு
மேலே உதவி டெபுடி மினிஸ்டரான டொரதி. கிட்டத்தட்ட
இரண்டு ஆண்டுகளாக எங்களோடு பணியாற்றிய ராணி திடீரென எடுத்துச் சென்ற ஐந்து மாத விடுப்புக்குப் பிறகு அலுவலகத்துக்குத் திரும்பி வருகிறாள். எதற்காக
இந்த நீண்ட விடுப்பு என்று எனக்கு அவள் தெரிவிக்கவில்லை. டொரதிக்கும் எச் ஆருக்கும் நிச்சயம் அது தெரிந்திருக்கும். எல்லாமே
இத்தாலியன் இரும்புப் பெட்டிகள். முதலில் மூன்று மாதம் விடுப்பு எடுத்துப் பின்னர் மேலும் இரண்டு மாதத்துக்கு நீடித்துக்கொண்டாளாம். முன்பும் பின்பும் டொரதிதான் அவளின் விடுப்பை அப்ரூஃப் பண்ணியிருப்பாள். முறைப்படி பார்த்தால் ராணி தான் வருவதை டொரதிக்குத்தான் முதலில்
அறிவிக்கவேண்டும். ஆனால் அதே வேளை என்னையும் கூப்பிட்டுச் சொல்வாளென்று எதிர்பார்க்க வைக்கும் நட்புத்தான் நமக்கிடையே இருக்கிறது. இது ‘என்னுடைய கூட்டாளி’ என்று
அவள் சொன்னபோதே ராணிக்கும் எனக்கும் இடையிலுள்ள உறவு அவளுக்கு நன்கு தெரிந்த சங்கதி என்பது நிச்சயமாகிவிடுகிறது.
டொரதியின்
குரலில் இழையோடியிருந்த உண்மை என்ன? என்னால்
முற்றாக அனுமானிக்க முடியவில்லை. என்றபோதிலும் அன்றைய காலை முழுவதும் என் மனம் அமைதியின்றித் தவித்துக்கொண்டிருந்தது.
ராணி
ஐரோப்பிய சுற்றுலாவுக்குப் போயிருந்தாளென்றும் அதைத் தொடர்ந்து உடல் நலமற்றிருந்தாளென்றும் செய்திகள் இடைக்கிடை கசிந்தனதான். என்றாலும் நான் எதையும் எடுத்தவுடன் நம்பவில்லை. ஒரு
நாள் அவள் நேரே வந்து சொல்லப் போகிறாள்தானே. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக என்னோடு பகிர்ந்துகொள்ளாத செய்தி எதுவும் அவளிடம் இருக்க வாய்ப்பில்லை. இந்த முக்கியமானது மட்டும் தப்பிவிட்டதே என்பதுதான் எனக்குப் பெரும் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாயிருந்தது.
நான் பலகாலமாகக் கண் வைத்திருந்த ஸீனியர் மானேஜர் பதவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிடமாக வந்தது. அப்பதவிக்கு அடுத்து மிகத் தகுதியுள்ளவனும் தொழில் பின்னணி உள்ளவனும் எங்கள் அமைச்சில் நான் ஒருவன் மட்டுமே என்று எனக்கு நெருங்கியவர்கள் சொல்லி எனக்கு நம்பிக்கையூட்டினார்கள். அப்பதவியின் வெற்றிடத்தை நிரப்ப ஒருவரைத் தெரிவு செய்யும் அதிகாரமுடைய டொரதிக்கும் இது தெரிந்ததுதான். ஆனால் இதில் அவளுடைய கடைசி நேரத் தீர்மானம் எதுவாயிருக்கும் என்று சொல்லத்தான் எவராலும் முடியாதிருந்தது. டொரதி
என்னை நியமிப்பாளென்ற நம்பிக்கையோடுதான் நானும் காத்திருந்தேன். திடீரென்று ஒரு நாள் அமைச்சின் அத்தனை பேருக்கும் டொரதி அனுப்பிய மின்னஞ்சல் என்னிடமிருந்த அந்த நம்பிக்கையை ஈவிரக்கமின்றிக் கொன்றுவிட்டது.
ராணி
மேத்தா அந்தப் பதவிக்கு நியமனம் பெற்ற அன்றே என்னுடைய கருத்தோடும் முடிவுகளோடும் முரண்பட ஆரம்பித்துவிட்டாள். அதிலிருந்து என் வயிற்றெரிச்சல் அவள் மீது வியாபிக்கத் தொடங்கியது. வழியிலோ விறாந்தையிலோ எதிரே கண்ட வேளையிலும் வெறும் புன்சிரிப்போடு கடந்துவிடும் பண்பாட்டையே
பேணமுடியாத அளவுக்கு
அவள் மீதிருந்த வெறுப்பு என்னை ஆட்கொண்டது. அவளின்
நியமனத்துக்கு உண்மையில்
டொரதிதானே காரணி. அவளை
விலக்கி ராணி மீது பொறாமையும் எரிச்சலும் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறதென எனது ஆளுமையின் இன்னொரு முகம் பலமுறை என்னுடன் வாதாடியது. இறுதியில்
வயிற்றெரிச்சல்தான் வெற்றி பெற்றது.
அலுவலகத்தின் அன்றாடச்
சந்திப்பின்போதும் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டங்களிலும் எனது வேலைத் திறனில் அதிருப்தியடைந்தவளாய்ச் சரமாரியாகச் சந்தேகம் எழுப்பி என்னைத் திக்குமுக்காடச் செய்ய ஆரம்பித்துவிட்டாள் ராணி. அவள் எழுப்பும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்லி எனது கருத்தை நியாயப்படுத்த இயலாமற் போன நாட்களில் நான் நித்திரையின்றித் தவித்ததுமுண்டு. அவளைத் திருப்திப்படுத்தவதற்காகவே என் தொழில் அறிவை அன்றாடம்
வளர்த்துக்கொண்டு வந்தேன். என்றபோதும்
நம்மிருவருக்குமிடையே கருத்து மோதலும் தர்க்கமும் தொடர்ந்து வலுத்தபடிதான் இருந்தன. இதனால் முதல் சில மாதத்துக்குள்ளேயே நமக்கிடையில் தனிப்படவும் தொழில் ரீதியாகவும்
ஏற்பட்ட சிறு வெடிப்பு விரைவில் பெரும் இடைவெளியாகி நம்மை வெளிப்படையாகவே பிரித்து வைத்தது. என்னை
அவள் வேலையிலிருந்து அகற்றும்படி டொரதிக்கு ஒரு சொல் சொன்னாலே நான் பெட்டியைக் கட்டவேண்டியதுதான். ஆனால் அந்த அளவுக்கு டொரதி என்மீது அவநம்பிக்கை கொண்டிருக்கமாட்டாள் என்பதும் எனக்குத் தெரிந்ததே. அந்தத்
துணிச்சல்தான் என்னை வேலையில் இன்னும் திறமை காட்டி ராணிக்கு நிகரானவனென்று நிரூபிக்கவேண்டுமென்ற மனவுறுதியை
எனக்குள் உருவாக்கியது. ஆனால் என்ன
செய்தென்ன அவள்தான் எப்போதும் கைதட்டலின் மத்தியில் என்னைக் கடந்து சென்றாள்.
ராணி
மீது எனக்குப் பொறாமையும் எரிச்சலும் இருந்தபோதிலும் அவளுடைய திறமையில் நான் ஒருபோதும் சந்தேகம் கொண்டதில்லை. ஆண்டுக் கணக்கில் இரவு பகல் பாராது உயர் கல்வியிலும் உயர் நிர்வாகத்திலும் பயிற்சியெடுத்து
வந்திருக்கிறாள். அதுதான் இந்தப் பதவியை அவளுக்குத் தேடித் தந்திருக்கும் என்ற உண்மையை நான் ஆரம்பத்தில் கவனத்திலெடுக்கத் தவறிவிட்டேன். அவளிடமிருந்த அத்தனை திறமைகளிலும் எல்லாரையும் திகைக்க வைக்கும்படியான நினைவாற்றல்தான்
என்னைப் பலமுறை வெட்கப்பட வைத்திருக்கிறது.
அவளுடன் ஒரு சுற்று விவாதம்
முடிந்து நாலைந்து மாதங்களுக்குப் பின்னர் ஒரு வாரம் விடுப்பில் போய்விட்டுத் திரும்பி
வந்தாள். அதன் பிறகு அவளிடம் படிப்படியாக ஏற்பட்ட மாற்றத்தை
நான் அவதானிக்கத் தவறவில்லை. நான் பேசும்போது முன்னையிலும் பார்க்க
அக்கறை காட்ட ஆரம்பித்தாள். என் முகத்தின் முன்னால் என்னை அவள்
பாராட்டிய சந்தர்ப்பங்களும் அதிகரித்தன. எனக்கு இது ஆரம்பத்தில்
பெரும் ஆச்சரியமாக இருந்தது. இதுவே அவளிடம் என் கருத்தைச் சொல்லும்
வேளைகளில் பணிந்து பேச வைத்தது. மாற்றம் என்னிடமும்தான் என்பது
அன்று எனக்கு ஏற்பட்ட இன்னொரு ஆச்சரியம்.
அதே வேளை ராணி
தனது உயர் நிர்வாக அணியிலுள்ளவர்களுடன் பேசும்போது நான் எழுதிய அறிக்கைகளை வெகுவாகப் பாராட்டியும் வரவேற்றும் வருகிறாள் என்பதை அறிந்தேன். அதன்
மூலமே அவளுடைய உள்ளத்தின் மென்மையான இன்னொரு பக்கம் என்மீது அக்கறை காட்டுகின்றதெனக்
கண்டேன். என்னிடமிருந்த பலவீனங்களை முன்புபோல் தனக்குச் சாதகமாக்கிக்கொள்வதைத் தவிர்த்து பலத்தை மட்டுமே தேடித் தேடி முன்னிலைப்படுத்த முயன்றதையும் அவள் என்மீது புதிய நம்பிக்கையைக்
கொண்டிருக்கிறாள் என்பதையும் அறிய ஆரம்பித்தேன்.
இதனால் நாட்செல்லச்செல்ல எனக்குரிய வாய்ப்புகளைப் பறிப்பவளாகவே அவளைக் கணிப்பது எந்த
வகையிலும் நியாயமில்லை என்பது எனக்குள் உறைக்க ஆரம்பித்தது. அப்படியொரு மனப்போக்கு என்னிடம் முளைவிட்டபோதுதான்
அவள் எனது முன்னேற்றத்துக்குத் துணை நிற்கிறாள் என்ற உண்மையை அறிந்துகொண்டேன்.
அன்று ஒரு கூட்டத்தில் அவள் ஆற்றிய உரையின் கடைசியில் தனது ஆய்வுக்கு
நான் கொடுத்துதவிய தரவுகளுக்காக எல்லார் கை தட்டலுக்கும் மத்தியில் எனக்கு நன்றி சொன்னது
என்னை மிகவும் சங்கடப்படுத்திவிட்டது. அதிலிருந்து மீளும் முன்னர்
அவளை நேரே நெருக்கமாய்ச் சந்திக்கும் சந்தர்ப்பமும் வந்து சேர்ந்தது.
“ராம், நீண்ட காலம் இதே துறையில் வேலை செய்துகொண்டு வந்த உனக்குப் பதிலாக இந்தப் பதவியில் எனக்கு வாய்ப்புக் கிடைத்த அந்த நாள் நிச்சயம் உனக்கு நினைவிருக்குமென
நினைக்கிறேன்.” என்று சாதரணமாகச் சொல்லிப்
பேச்சை ஆரம்பித்தாள். இது என் ஞாபக சக்தியை அவள் சோதித்துப் பார்ப்பதற்கெனக்
கேட்ட மிகச் சில்லறையான கேள்வியென நான் கருதவில்லை, என் தோளில்
தட்டி நட்புறவுடன் பேசவேண்டுமென்ற ஆவலுடன் வந்திருந்தாள்போன்றே தோன்றியது. எனக்கும் இது புதுமையும் புளகாங்கிதமும் தந்தது.
“அன்று
நீ இருந்ததிலும்
பார்க்க இப்போது இன்னும் கூடுதலாகச் சந்தைப்படுத்தக்கூடிய
வேலைப் பின்னணியும் திறமையும் கொண்டவனாக இருக்கிறாயா இல்லையா?” ராணி தனது அடுத்த கேள்வியை இந்த அளவுக்கு எனக்குத் தன்னம்பிக்கை ஊட்டும்படியாகக் கேட்பாளென நான் எதிர்பார்க்கவில்லை. அப்போதுதான் முன்பு ஒருபோதும் இல்லாதவாறு அவளை நிமிர்ந்து நோக்கினேன். அன்று அவளின் சந்தன நிறத்துக்குப் பொருத்தமாக உடையையும் நகையையும்
தேர்ந்தெடுத்து அணிந்திருந்தாள். மார்பு
முட்டிய இளமையோடு அவள் நின்றிருந்த தோற்றம் திருமணமான என்னையே ஒரு கணம் தடுமாற வைத்தது.
இறுதியில் அவளின் கண்களை நேரே சந்தித்தபோது சிறிது நேரம் நான் மலைத்துப்போய்
நின்றேன். இவ்வளவுக்கு அமைதியான அழகையும் அற்புதமான மனதையும்
கொண்டவள்மீதா நான் இத்தனை காலமும் போட்டியும் பொறாமையும்கொண்டு என் நாட்களை அநியாயமாய்
வீணடித்துக் கொண்டிருந்தேன்?
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம்
எவ்வளவுக்கு வீரர்களையும் தேசாபிமானிகளையும் உருவாக்கியதோ அதே அளவுக்கு அப்பாலைவனப் பிரதேசம் உலக அழகிகளுக்கு இணையான பெண்களின் பிறப்பிடமாகவும் இருக்கிறதென அறிந்திருக்கிறேன். ராணி நடந்து வரும்போதெல்லாம் அவள் இருந்த சிம்மாசனமும் கூடவே வருவதுபோல எனக்குத் தோன்றி அதிசயிக்க வைப்பதுண்டு.
“ராணி, நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்.” என்றேன்.
“ராம், பேச்சை மாற்றாதே.”
நான் சிரித்தேன், அவளும் சிரித்தாள்.
எப்படி எதிரிகளாய்
இருந்த நாமிருவரும் அடுத்த சில மாதங்களுக்குள் எப்படி நம்ப முடியாத அளவுக்கு நெருக்கமான நண்பர்களானோம் என்பதை எண்ணி நான் வியக்காத நாளில்லை. நமது
பேச்சினிடையே தனது பயண அனுபவங்களை அழகாக விபரிப்பாள். ஒருமுறை குடும்பத்தோடு ராஜஸ்தானுக்கு வா என்றுகூட
அழைத்தாள். திருவாளர்
மேத்தாவின் நகைச்சுவை நறுக்குகளை அவ்வப்போது அவிழ்த்துச் சிரிக்க வைப்பாள். இருவருமாய் நூலகம், புத்தகக் கடைகள் சுப்பர் மார்க்கெட் என்று எங்கும் அலைந்தோம். கூடவே நமது நட்பும் வளர்ந்துகொண்டு வந்தது.
இன்னொரு நாள் ஒரு இக்கட்டான சூழலில் நானாகவே மாட்டிக்கொண்டேன். அன்று வழக்கத்திலும் பார்க்க ராணி மிக்க அழகாகத் தோற்றமளித்தாள்.
“நான்
இதுவரை கண்ட பெண்களில் நீதான் சிறந்த அழகியென்று சொல்வேன்.”
“நீ
திருமணமானவன், திருமணமான இன்னொரு பெண்ணைப் பற்றி இப்படிச் சொல்லக்கூடாது.” என்றாள்.
“என்
மனதில் சரியெனப் பட்டதைச் சொன்னேன், ராணி. ஒரு பெண்ணின் அழகை நான் நட்புணர்வுடன் புகழ்வதற்கும் நான் திருமணமானவன் என்பதற்கும் சம்பந்தம் எதுவுமில்லை. ஒருவன் தனது மனைவிக்கு முழு விசுவாசமாக இருக்கவேண்டும், அதேவேளை அவனுக்கு நெருக்கமான இன்னொரு பெண் மிக அழகாயிருக்கிறாள் என்பதை மனம் விட்டு நேரே சொல்ல மறுக்கும் கோழையாக அவன் இருக்கக்கூடாது.” ராணி
சில கணம் சிந்தனையில் ஆழ்ந்தாள்.
“உன்
பார்வையில் களங்கம் இருக்கும்வரை நீ சொல்வது சத்தியமாகாது.”
“என்
பார்வையில் களங்கம் இருக்கிறதென நீ நம்புவாயாயானால்
நான் இதுவரை உன்னோடு விசுவாசமாகப் பழகியதெல்லாம் போலி என்றாகிவிடும்.”
“நாளைக்கு
நீ என்னுடைய
இந்தப் பதவியை அடைய வாய்ப்புக் கிடைக்கக்கூடும். அதை இலக்காக வைத்து நீ முன்னேற
வேண்டும் என்பதற்காகவே உன்னைத் தட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். நட்பிலும்
அழகிலும் மயங்குவாயானல் அதுவே உனக்கு அந்த வாய்ப்புக் கிடைக்காமல் இடற வைத்துவிடும்.”
“பொறு, பொறு, உன்னுடைய
பதவிக்கு நான் முயற்சிப்பேனென்று நினைக்கிறாயா, ராணி?” என்
மனம் பதறியதை அவள் உணர்ந்திருக்க வேண்டும்.
“இந்த
இரக்கமற்ற உலகத்தில் எதுவுமே நிச்சயமில்லை, ராம். நான்
இன்றிருப்பேன், நாளை இன்னொருவர் வரலாம், யார் கண்டார்கள்? அதனால்தான்
நாளைக்கு என்னுடைய பதவிக்கு இப்போதே உன்னைத் தயார் செய் என்று சொல்கிறேன்.”
“அப்படியொரு
நிலை வருவதை நான் விரும்பி வரவேற்பேனென நினைத்தாயா, ராணி? என்னைப் பொறுத்தவரை, இது
உன்னுடைய ராஜ்ஜம், நீதான்
இங்கே ஆட்டுபவளும் ஆடவைப்பவளும். இங்கே நானும் உன்னோடு சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள். நீயில்லாத ராஜ்ஜத்தில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டியதில்லை. என்னை இதுவரை நன்றாக அறிந்திருக்கிறாய். இது மட்டும் உனக்குத் தெரியாமல் போய்விட்டதே!”
“இல்லை, இதை நன்றாய்த் தெரிந்து வைத்திருக்கிறேன்,
ராம். அதனால்தான்
உன் மதிப்பை அமைச்சின் உயர் நிர்வாகம் அறியவேண்டுமென்று உன்னை என் நெருங்கிய அணியில் சேர்த்திருக்கிறேன். நாளையென்றொரு தினம் எனக்கு இங்கே இல்லாவிட்டாலும் உனக்கு நிச்சயம் இருக்கும், ராம்.”
இதற்கு
மேல் எதுவும் பேச எனக்கு நா எழவில்லலை. என் எதிரே அப்போது சொல்ல முடியாத செய்தி இருந்ததாலா இப்படி வழுக்கிச் சென்றாள்? இன்னொரு சந்தர்ப்பத்தில் கேட்கலாமென்று நினைத்து நான் வாய் மூடிக்கொண்டது எவ்வளவு தவறாகிவிட்டது. அடுத்த கிழமையே தனது நீண்ட விடுப்பில் சென்றுவிட்டாள் ராணி. போகும்போது
ஒரு சொல்கூடச் சொல்லவில்லை, அந்தச் செய்திதான் அவளைத் தடுத்திருக்கிறது. அதை அறிய அவள் திரும்பி வரும்வரை காத்திருக்கவேண்டும், இயலக்கூடிய காரியமா?
ராணி ஐந்து
மாத விடுப்புக்குப் பிறகு அந்தவொரு நாளில் அறைக்குள் வந்து என் முகத்துக்கு நேரே ஒரு கேள்வி கேட்டாள்.
“ஏன்
அழுகிறாய், ராம்? நான் இன்னும் செத்துப்போய்விடவில்லை.”
இப்படிச் சொல்லி என்னைச் சாந்தப்படுத்தலாமென்றா
இத்தனை நாளைக்குப்
பிறகு இந்தத் கோலத்தில் வந்திருக்கிறாய், ராணி? உனது
இடுப்பின் கீழே நீண்டிருந்த தடித்த கேசம் எப்படிக் கொட்டிப்போனது? உனது மயக்கும் விழிகளுக்குக் குடை பிடித்த இமைகள் எவ்வாறு கரைந்து போயின? உனது
பழுத்த கன்னங்களைச்
சீவி எறிய எந்த அரக்கனுக்கு மனம் வந்தது? இந்த ஐந்து மாத காலமும் இரக்கமற்று உன்னை வருத்திய புற்று நோயின் பசிக்கு அன்று என் கண்களுக்கு விருந்தான உன் மார்பகங்களா இரையாகிப் போனதென்று கேட்கிறேன்? நான்
அவளின் சிதைந்துபோன அழகைக் கண்ணெதிரே பார்க்கத் திராணியற்று யன்னல் படியில் கைகளை ஊன்றியபடி
கண்கள் பனிக்க வெளியுலகைப் பார்த்தபடி நிற்கிறேன், அவள் திரும்பிப் போனதைக்கூட அறியாமல்.
இன்று மதியம் டொரதி அழைக்கிறாள். “ராம், நாம்
சில முக்கியமான விஷயங்களைப் பேசவேண்டியிருக்கிறது. இப்போது வந்து என்னைக் காணுவாயா? எனது
அறை.” என்று
சுருக்கமாகச் சொல்லித் தொலை பேசியை வைத்துவிட்டாள், நான் இன்னும் வைக்கவில்லை.
திறந்தபடி
கிடக்கும் டொரதியின் அறைக் கதவைத் தட்டுகிறேன். நிமிர்ந்து பார்த்துவிட்டு, “உள்ளே வா” என அழைக்கிறாள்.
அவளுடைய
அறையின் ஓரம் சிறிய வட்ட மேசையில் எதிரெதிராக இருக்கிறோம். “ஐயாம் வெரி ஸாரி, ராம். ராணி மேத்தா நேற்று இரவு போய்விட்டாள்.” கடமைக்குப் பொதியை ஒப்படைத்துவிட்டுச் செல்லும் தபால் சேவகன்போல் அவளின் குரல் உணர்ச்சியற்று ஒலிக்கிறது. நான்
தலை குனிந்தபடி
இருக்கிறேன். ஒரு அரை நிமிட நேரம் அறையெங்கும் அமைதியாக இருக்கிறது, என்
விசும்பலைத் தவிர. ராணியின்
இடையறாத வேதனைகளுக்கு
ஒரு வடிகால் இந்த இரக்கமற்ற இறப்புத்தானோ! என மனதில்
எழும் வேதனைக்கும் வடிகால் எதுவும் இருக்க இயலுமோ?
நான்
கதிரையிலிருந்து எழுந்து எதுவுமே பேசாமல் வாசலை நோக்கி நடக்கிறேன். டொரதி
மீண்டும் அழைக்கிறாள், “ஓன் மோமன்ட், ராம்.” நான் திரும்பி அவளைப் பார்க்கிறேன். “இதைச் சொல்வதற்கு இது பொருத்தமான நேரமாக இல்லாமலிருக்கலாம், ஆனால் அமைச்சும் அதன் நிர்வாக யந்திரமும் மக்களுடையது. நாம் அவர்களின் சேவகர்கள்.”
“ம்
ம்ம்.”
“ராணியின்
கடமைகளை நேற்றுவரை பொறுப்பெடுத்துச் செய்துகொண்டு வந்த அற்புதமான திறமை மிக்க ஆட்களில் நீயும் ஒரு ஆளாக இருக்கிறாய். இன்றிலிருந்து அவளுடைய பதவியை உனது போறுப்பில் கையளிக்க டெபுடி மினிஸ்டர் தீர்மானித்திருக்கிறார். அவரின் கடிதம் இங்கே இருக்கிறது.”
நான்
டொரதியை வெறித்து நோக்குகிறேன். எனது ஒரு கை கதவின்
விளிம்பைப் பிடித்தபடி இருக்கிறது. அதனை
இன்னும் இறுக்கிப் பிடிக்கவேண்டுமென நினைக்கிறேன். அடுத்த சில கணங்களில் அவளை நிமிர்ந்து பார்க்கிறேன்.
“மிகவும்
நன்றி, டொரதி.
தயை செய்து என்னைப் போக அனுமதிக்கவேண்டும்.”
---
நன்றி: தாய்வீடு (ரொரான்டோ) நவம்பர் 2019
No comments:
Post a Comment