Tuesday, February 27, 2018

என் மனைவி வேலை செய்வதில்லை

September 24, 2012

செலவு சித்தாயம் தலைக்குமேல் ஏறியிருக்கிற இந்தக் காலத்தில் வேலை செய்யாத மனைவியால் என்ன பிரயோசனம்? என் மனைவி, தேவியைப் பற்றித்தான் சொல்கிறேன். உறவினர்களும் நண்பர்களும் கண்ட இடத்தில் இவளைக் கேட்பதுண்டு, “இப்ப எங்கை ‘வேர்க்’ பண்ணுறியள்?” இவள் பதிலுக்குச் சிரித்து மழுப்புவாள். இவள் வேலையைவிட்டுப் பத்து வருடமாகிறது. வேலையில் கெட்டிக்காரி என்றுதான் பெயரெடுத்தாள். ஆனால் என்ன கண்டது? இப்போ வேலை செய்வதில்லை.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிடுவாள். நான் ஏழு மணிக்கு வேலைக்குப் போகவேண்டும். எனக்கு வேண்டிய காலை உணவு, மதிய உணவு, இடையில் கடிக்க ஏதேனும் – இப்படி எனது அன்றாட மண்டகப்படி ‘லிஸ்ட்’ மிக நீண்டது. எல்லாவற்றையும் நாளுக்கு நாள் வெவ்வேறு சங்கதிகளுடன் மிக ருசியாக செய்து தருவாள். அதே சமயம் எனது நிறை கூடாமலும் முக்கியமாக என் இடுப்பு அளவு பருத்துடாமலும் பார்த்துக்கொள்வாள்.

ஆனால் அவள் மட்டும் வேலை செய்வதில்லை.

பிள்ளைகளைப் பள்ளிக்கு ஆயத்தப்படுத்துவதிலும் இதே கதைதான். அவர்களுக்குத் தலைமாட்டில் மணிக்கூடு கிடையாது. இவள்தான் அவர்கள் முதல் நாள் சொல்லிவிட்ட நேரத்துக்கு எழுப்பிவிடும் மணிக்கூடு. சாவி கொடுக்காமல், நேரம் ‘செற்’ பண்ணாமல் ஒரு நிமிடம்கூடப் பிந்தாமலும் முந்தாமலும் சொன்ன நேரத்துக்கு எழுப்புவதில் இவளுக்கு நிகரான மணிக்கூடு இன்னும் செய்யப்படவில்லை. அவர்கள் காலையில் எழும்பி வெளிக்கிட்டு வீட்டின் கீழ்த்தளத்திற்கு வரும்போது அவர்கள் மாடி அதிர எழுப்பும் ஓசையிலிருந்தே அவளுக்குத் தெரிந்துவிடும் அவர்களுடைய அவசரம் எந்த மட்டில் இருக்கிறதேன்று. அதேவேளை அவர்களுக்கு வேண்டியவற்றை – உணவு முதல் கைச்செலவுக்கும் கள்ளப் பணியாரத்துக்கும் வேண்டிய காசு வரை எல்லாம் அளவாகக் கொடுத்தனுப்புவாள். கொடுத்துக் கொண்டேயிருந்தால் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என்பதில் அவளுக்கு நிறைந்த நம்பிக்கை. பின்னேரம் வந்தால் வளர்ந்த பிள்ளைகள் விஷயத்தில் இவள் தலையிடுவதில்லை. ஆனால் பிள்ளைகளைப்பற்றி எனக்குத் தெரியாத ருசியான சங்கதிகளெல்லாம் இவளுக்கு மட்டும் எப்படித்தான் தெரிகிறதோ? இவர்களின் முதல் நண்பர் தானே என்பதை அடிக்கடி நிரூபித்துக்கொள்வாள் போல் தெரிகிறது.

இவ்வளவு செய்தும் என்ன, அவள் வேலை செய்வதில்லை.

எங்கள் உடுப்புகள் அழுக்காகி கதவின் பின்னாலும் கட்டிலுக்குக் கீழேயும் மறைந்து கிடந்தாலும் இவள் கண்களிலிருந்து அவை தப்பமுடியாது. அவற்றின் நாற்றத்தையெல்லாம் எப்படித்தான் சகிக்கிறாளோ அறியேன். அவற்றைத் தேடித்தேடிப் பொறுக்கிய கையோடு தோய்த்து மடித்து அவரவர் அலுமாரியில் அன்றுதான் வாங்கிவந்ததுபோல் அடுக்கிவைத்து அழகு பார்ப்பாள்.

கிழமைக்கு முப்பது முறையாவது குசினியோடு தன்னைக் கட்டிப்போடுவாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி டின்னர். அதில் ஒரு இரவு விருந்தினர் வருகைக்காகச் செய்த விஷேட அயிட்டங்கள் அடங்கியிருக்கும். உணவுப் பேணிகள் எதுவும் மிஞ்சிப்போயிருந்தால் அவற்றை உள்ளூர் உணவு வங்கியில் கொண்டுபோய்க் கொடுத்துவிடுவாள்.

மருந்துகள் மாயங்கள் எதையும் அவளுக்குத் தெரியாமல் நாங்கள் வீட்டில் வைத்திருக்கமுடியாது. வெறும் தலையிடி, தடிமன் மருந்துகளைக்கூட மிகக் கவனமாகப் பேணி வைத்திருப்பாள். அவற்றைக் கண்டபடி போட அனுமதிக்கமாட்டாள். மொத்தத்தில் எங்கள் வீட்டு வைத்தியரும் அவளேதான். ஏதேனும் காரணத்தால் மனம் சோர்ந்து, உடல் சோர்ந்தபோது உடனடி வைத்தியம் அவளிடமுண்டு. அது அவளுடைய சிரிப்பும் அணைப்பும் மட்டுமே. நாம் வீட்டுக்கு வெளியே போகமுன் அவளை ‘ஹக்’ பண்ணாமல் போகமுடியாது.

வீட்டில் ஒரு தூசு, தும்பு அவள் கண்ணிலிருந்து தப்பமுடியாது. எந்த நேரமும் வீட்டைப் ‘பளிச்’சென வைத்துக்கொள்வாள். நானும் பிள்ளைகளும் கண்ட இடங்களிலும் விட்டெறிந்த பேனை, புத்தகங்கள், கை துடைத்த கடதாசிகள் போன்றவை அடுத்த நாட்காலை அவற்றிற்குரிய இடங்களைச் சென்றடைந்துவிடும். இதைப்பற்றி எங்களை ஒரு சொல் குறை சொல்லமாட்டாள். நாங்கள் மாலை வீடு திரும்பும்போது நேற்றுத்தான் குடிபுகுந்த வீடுபோலிருக்கும்.

என்றாலும் என்ன, அவள் வேலை செய்வதில்லை.

காலை பத்து மணி முதல் ஒரு மணிவரை எங்கள் நகரச் சமூக நிலைய நூலகத்தில் தொண்டராகக் கடமை செய்வாள். வீட்டுக்குத் திரும்பும்போது தான் வாசிக்கவெனக் கை நிறையப் புத்தகங்களும் வார இதழ்களும் கொண்டுவருவாள். பத்திரிகைகளிலும் விளம்பரங்களிலும் வரும் கூப்பன்களை வெட்டுயெடுத்துப் பேணிவைத்திருப்பாள். கடைக்கு மரக்கறி, சாமான்கள் வாங்கப் போனால் வேட்டிவைத்த கூப்பன்களைக் கொடுத்து எமது செலவில் ஒரு பகுதியைச் சேமித்துக்கொள்வாள். கடையில் கண்டதையும் வாங்கமாட்டாள். நமக்குத் தேவையான எவை மலிவு விற்பனையில் உள்ளனவோ அவற்றைமட்டுமே வாங்குவாள்.

இதுவும் செய்கிறாள், இன்னமும் செய்கிறாள். ஆனால் வேலை மட்டும் செய்வதில்லை.

என் குடும்ப வரவுசெலவுத் திட்டமும் அவள் ஏற்பாடுதான். எந்தெந்த ‘பில்லுகள்’ எப்பெப்போ கட்டவேண்டும், கார்க்கடனில் எவ்வளவு நிலுவையில் இருக்கிறது, காருக்கு ‘சேர்விஸ்’ எப்போ செய்யவேண்டும், பள்ளிக்கூடங்களுக்கு எவ்வளவு அளக்கவேண்டும், வீட்டுக்கடன் எப்போ புதுப்பிக்கவேண்டும் – எல்லா விபரங்களும் விரல் நுனியில் வைத்திருப்பாள்.

அவளுடைய உறவினர்கள், என்னுடைய ஆட்கள் என்று பாகுபாடு இல்லாமல் அவர்களுடைய குடும்பங்களில் ஒருவரும் விடாமல் பிறந்த நாள், திருமண நினைவு நாள் என்று எதையெல்லாம் அவர்கள் கொண்டாடுகிறார்களோ அந்தத் தினங்களையெல்லாம் மனப்பாடம் பண்ணிவைத்திருந்து உரிய நேரத்தில் அவர்களைக் கூப்பிட்டு வாழ்த்துச் சொல்லுவாள். நத்தார் தினமும் புதுவருடமும் வந்துவிட்டால் வீடு களைகட்டிவிடும். போன வருட லிஸ்டிலும் பார்க்க இந்த வருடம் வேண்டியவர்களின் தொகை கூடிவிடும். என்றாலும் இவர்கள் எல்லாருக்கும் வாழ்த்து மடல்கள் அனுப்பியோ தொலைபேசியில் அழைத்தோ எமது குடும்பத்தின் வாழ்த்துகளைத் தெரிவிக்க மறக்கமாட்டாள்.

ஆனால் இவள் இப்போ வேலை செய்கிறாளோ என்று கேட்பவர்களுக்கு, “வேலை எங்கே செய்கிறாள்” என்றுதான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

மனிதரால் கண்டுபிடிக்கமுடியாத தொலைந்துபோன பொருள் எதுவும் இவளின் கண்களிலிருந்து தப்பமுடியாது. நாம் தேட வெளிக்கிட்ட அடுத்த நிமிடம் அதைக் கண்முன்னே கொண்டுவந்து நீட்டுவாள். சொன்னால் நம்பமாட்டீர்கள், கிழமைக்கு நான்கு முறையாவது குறைந்தது ஆறு கிலோ மீட்டராவது வீதியோர நடைபாதையில் வீச்சு நடை போடுவாள். வழியில் நாய்களையும் அவற்றின் எசமானர்களையும் ஒரேமாதிரி மதிப்பாள். அக்கம்பக்கதில் உள்ளவர்களின் கார்களின் பெயர்கள் மட்டுமே எனக்குத் தெரியும். ஆனால் இவளோ அவர்களையெல்லாம் சினேகிதம் பிடித்து வைத்திருக்கிறாள்.

ஆனால் அவள் வேலை செய்கிறாளா. ம்ஹூம், அதுமட்டும் இல்லை.

இப்போது அவள் இல்லத்தரசி, தாய், மனைவி, சமூக சேவகி மட்டுமே.

பிள்ளைகள் வளர்ந்து படிப்புகளை முடித்து உத்தியோகங்களைத் தேடிக் கடைசியில், வளர்ந்த கூட்டைவிட்டுப் பறந்து சென்றபிறகு இவளுக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கக்கூடும் அப்போது மீண்டும் வேலைக்குப் போகக்கூடும். ஆனால் தற்சமயம் இவள் மிகவும் ‘பிஸி’யாக இருக்கிறாள்.

Saturday, February 24, 2018

பத்திகள்

மதனசிங்கம் என்ற ஒரு இங்கிலிஸ் டைப்பிஸ்ட்

“ராஜகோபால், நீர் அலுவல் பார்த்து அனுப்பின டைப்பிஸ்டுக்கு டைப்ரைட்டரே என்னெண்டு தெரியாது.”

“ஆரைச் சொல்லுறியள், சேர்?”

“வேறை ஆர்? மதனசிங்கத்தைத்தான் சொல்லுறன்.”

மன்னார் கல்வித் திணைக்களத்திலிருந்து கொழும்பிலுள்ள கல்வி அமைச்சுக்கு மாறி வந்த தலைமை எழுதுவினைஞர் தர்மராசா தலையில் அடித்துச் சொன்ன செய்தி இது.

மதனசிங்கம் எங்கள் வீட்டுக்குப் பின்னாலுள்ள தெருவில் வாழ்ந்தவர். என்னிலும் பத்து வயது மூத்தவர். பள்ளிக்கூட நாட்களில் எனக்கு“வொல்லி போல்” பழக்கியவர். எங்கே கண்டாலும் அன்பாய்ப் பழகுபவர். அவர் ஒரு உள்ளூர் பள்ளிக்கூடத்தில் இரவு நேரக் காவலாளியென்னும் கடை நிலை ஊழியராகக் கடமையிலிருந்தார். சம்பளம் பத்தாது, நாலைந்து பிள்ளைகள். குடும்பம் சிரமப்பட்டது. நான் ஊருக்கு விடுமுறையில் வந்தபோது காண வந்தார். வந்து அரை மணியாகிவிட்டது, எதற்காகக் காண வந்தாரெனச் சொல்லத் தயங்கியபடி இருந்தார்.

“என்னண்ணை, ஏதேனும் சொல்ல வந்தியளோ?” என்று நானாகக் கேட்டபிறகே சொன்னார்.

“தம்பி, என்ர உத்தியோகம் என்னெண்டு தெரியும்தானே, நீங்கள் கல்வி அமைச்சிலை இருக்கிறியள், எனக்கு வேறை நல்ல ஒரு உத்தியோகம் எடுத்துத் தந்து வழி காட்டவேணும். உங்களைக் கடைசிவரை மறக்கமாட்டன்.”

நான் கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்தேன். இவர் இப்போது கடை நிலை ஊழியர். எடுத்தவுடன் தூக்கி இன்னொரு நல்ல வேலையில் போட முடியாது. இவராக முயற்சித்துப் போகக்கூடியவரும் இல்லை. இவருடைய மட்டத்தில் உள்ளவர்களை அடுத்த உயர்தரத்திலுள்ள உத்தியோகத்துக்குப் பதவி உயர்த்துவதற்கென ஒரு பரீட்சை இருந்தது. அதில் தட்டெழுத்தாளர் பிரிவும் இருந்தது.

“அண்ணை, நீங்கள் டைப் அடிப்பீங்கள்தானே?”

“டைப் அடிக்கிற மெசினைக் கண்டிருக்கிறன்.”

“அப்ப ஒரு வழி சொல்லுறன் செய்து பாருங்கோ.”

“அதுக்கென்ன, தம்பி சொல்லுங்கோ, கட்டாயம் செய்வன்.”

“குல்லா வேலுப்பிள்ளையன்ர டியூட்டறியிலை இங்கிலிஸ் இல்லாட்டில் தமிழ் டைப்பிங் திறமாப் பழகிப்போட்டு கவுன்மென்ட் சோதினை எடுங்கோ. அதிலை பாஸ் பண்ணினால் டைப்பிஸ்ட் வேலைக்குப் போகலாம். சம்பளமும் ரண்டு பங்கு கிடைக்கும்.”

மதனசிங்கம் அண்ணை யோசிக்காமலே சம்மதித்துவிட்டார். அந்தக் கிழமையே குல்லா வேலுப்பிள்ளையின் டியூட்டரியில் இங்கிலிஸ் டைப்பிங் படிக்கப் போய்விட்டார். அடுத்த சில மாதங்களில் கடை நிலை ஊழியர் பதவி உயர்ச்சிச் சோதனைக்கும் விண்ணப்பித்துத் தோற்றிவிட்டார்.

திரும்பவும் நான் விடுமுறையில் ஊருக்குப் போனபோது என்னைக் காண வந்தார்.

“எப்படி அண்ணை, சோதினை நல்லா செய்தீங்கள்தானே?”

“அது தம்பி, குல்லா சோதினைக்குத் தந்த மெசின் கொஞ்சம் பழசு. அதாலை மிச்சம் ஸ்லோவாகத்தான் அடிச்சனான். அதுதான் யோசிக்கிறன்.”

எனக்கு விளங்கிவிட்டது. அண்ணை சோதினைக்குப் போய் மெசினில் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடித் அடித்துப்போட்டு வந்திருக்கிறார்.

“உங்களுக்கே திருப்தி இல்லைபோலை தெரியுது.”

“ஓம் தம்பி, நான் சோதினை துப்பரவாகச் செய்யவில்லை. அங்கினைக்கை ஏதேனும் செய்து என்னை பாஸ் பண்ணச் செய்யவேணும். புட்டளையான் (புற்றளைப் பிள்ளையார்) உங்களைக் கைவிடமாட்டார்.

கடைசியில் புட்டளையான் என்னை மட்டுமில்லை அவரையும் கைவிடவில்லை. அண்ணை சோதனை சித்தியடைந்து முதன் முதலாக மன்னார் கல்விக் கந்தோரில் இங்கிலிஸ் டைபிஸ்டாக வேலையில் சேர்ந்துவிட்டார்.

இப்போது எங்கள் தலைமை எழுதுவினைஞர் தர்மராசாவுக்குப் பதில் சொல்லித் தப்பவேண்டும்.

“ஏன் சேர், என்ன பிரச்சனை?”

“என்ன பிரச்சனையோ? நீர் அலுவல் பாத்து அனுப்பின மதனசிங்கத்துக்கு டைப்ரைட்டரே என்னெண்டு தெரியாது எண்டு சொன்னன்.”

“அப்பிடியே சங்கதி?”

“பின்னை என்ன? அதோடை அவரன்ர வேலையை மற்ற ஆக்கள்தான் செய்யவேண்டிக் கிடக்கு.”

“பாவம் சேர், நல்லா முட்டுப்பட்ட குடும்பம்.”

“ஆனால் என்ன தெரியுமே, அவையள் செய்யவேண்டிய வெளி வேலையெல்லாத்தையும் மதனசிங்கம்தான் செய்து குடுக்கிறார். கந்தோரிலை தேத்தண்ணி போட்டுக் குடுத்தாலென்ன, அவையளுக்குத் தேவையான அரிசி, மீன், மரக்கறி, போத்தில் போலை சாமான்கள் வாங்கக் கடைக்குப் போனாலென்ன, சைக்கிள் திருத்தினாலென்ன, ரயில் டிக்கட் வாங்கினாலென்ன அத்தினை அலுவலையும் அவர்தான் செய்து குடுக்கிறார்.”

“பிறகென்ன சேர், இப்பிடியொரு நல்ல மனிசன் டைப்பிஸ்ட் சோதினையிலை எடுத்த பதினைஞ்சு மார்க்ஸ் எழுவத்தைஞ்சாக மாறாட்டில் புட்டளைப் பிள்ளையார் பார்த்துக்கொண்டிருப்பாரோ?”



ஊர் அப்புக்காத்து


எங்கள் புலோலிப் பக்கத்துத் துரைராசாவைப் போயும் போயும் முல்லைத்தீவில் வைத்துச் சந்திப்பேனென்று நான் கனவிலும் கருதவில்லை.  அதுவும் கடைத்தெருவிலோ அல்லது அவர் வழக்கமாக இழுத்தடிக்கப்படும் கோட்டடியிலோ அல்ல.  ஒரு அந்திப்பொழுதில் என் சட்ட அலுவலகத் திண்ணையில் திடீரென வந்து நின்றார்.  கையில் அரிவாளோடு இரத்தம் சொட்டச் சொட்ட ஒருவர் உங்கள் வீட்டு வாசல்படியில் நடுச்சாமத்தில் வந்து நின்றால் எப்படியிருக்கும் உங்களுக்கு?  கிட்டத்தட்ட அதே நிலையில்தான் நான் இருந்தேன்.

தொடர்ந்து படிக்க


கண்மணி

ஒவ்வொரு நாட்காலையும் அவளை நான் காணும்போது அப்போதுதான் துயிலெழுந்து முகம் திருத்தி வந்தவள்போன்ற பொலிவுடன் தோன்றுவாள். அவளைக் கண்டதும் நான் கேட்கும் முதல் கேள்வி “How are you?” அதற்கு அவளிட மிருந்து உடனே பதில் வரும்: “I am fine” கூடவே அவள் முகத்தில் ஒரு புன்னகையோடு கலந்த மலர்ச்சி.

ரொராண்டோ நகரின் யூனிவர்சிடி அவனியு. இருமருங்கும் அடுக்கடுக்காய் விண்ணைமுட்டும் கட்டிடங்கள். அவற்றினூடாகப் புகுந்து விளையாடும் மென்மையான தென்றல். முகத்திலடிக்காத காலை வெயில். இந்த வேளையில் அலுவலகத்துக்கு நடைபயில்வதே ஒரு அலாதியான அனுபவம்.

தொடர்ந்து படிக்க


காமெராவும் கவிதை சொல்லும்




இது இந்தக் காமெராவைப் பற்றிய கதையல்ல. இதை என்னிடம் தந்த ஒரு நல்ல மனிதனின் கதை.

அந்த ஆடி மாதத்தின் ஒரு சனிக்கிழமை அழகாகப் புலர்ந்தது. காலை ஆறு மணிக்கே வானத்தைக் கிழித்த புளகாங்கிதத்தால் ஒளிக்கீற்றுகள் குழந்தைகளாகிக் கண்காணும் திசைகளிலெல்லாம் ஓவியம் வரைய ஆரம்பித்தன. சோடிகளைக் கூவியழைக்கும் குயில்களின் கானம் காற்றில் மிதந்து புலன்களைச் சுண்டியிழுத்தன. என்போன்ற பலர் அன்றைக்குத்தான் நடைபயின்றவர்கள்போன்ற உற்சாகம் மிதக்க தம் நிழல்களைத் தாமே துரத்தி அதுவரை தூங்கிவழிந்துகொண்டிருந்த தெருக்களைத் தட்டியெழுப்பத் தொடங்கினர்.

தொடர்ந்து படிக்க


ரேக்கூன்



இலங்கை வேந்தன் இராவணன் “பெம்பிளை தூக்கும்” கலையில் நமக்கு முன்னோடியும் வழிகாட்டியுமாவான் என்பது நாமெல்லாரும் அறிந்ததே. அவன் சீதையைக் கிளப்பிக்கொண்டு வந்த நாளுக்கு அடுத்த நாள் என் மனைவி கரைத்துவைத்த தோசை மாவில் இன்று அவள் அவசரம் அவசரமாகத் தோசைகளைச் சுட்டு அடுக்கிவிட்டு “எல்லாத்தையும் சாப்பிட்டிட்டுக் கோப்பையைக் கழுவி வையுங்கோ” என்று கட்டளையும் பிறப்பித்துவிட்டு வெளியே போய்விட்டாள். இதைச் சாப்பிட்டால் என் கதி என்னாகும் என்று என் மனைவியே கவலைப்படாதபோது நீங்களேன் கவலைப்படப்போகிறீர்கள்?

தொடர்ந்து படிக்க

என் மனைவி வேலை செய்வதில்லை



செலவு சித்தாயம் தலைக்குமேல் ஏறியிருக்கிற இந்தக் காலத்தில் வேலை செய்யாத மனைவியால் என்ன பிரயோசனம்? என் மனைவி, தேவியைப் பற்றித்தான் சொல்கிறேன். உறவினர்களும் நண்பர்களும் கண்ட இடத்தில் இவளைக் கேட்பதுண்டு, “இப்ப எங்கை ‘வேர்க்’ பண்ணுறியள்?” இவள் பதிலுக்குச் சிரித்து மழுப்புவாள். இவள் வேலையைவிட்டுப் பத்து வருடமாகிறது. வேலையில் கெட்டிக்காரி என்றுதான் பெயரெடுத்தாள். ஆனால் என்ன கண்டது? இப்போ வேலை செய்வதில்லை.

தொடர்ந்து படிக்க