Monday, January 25, 2016

நிலபாவாடை

கந்தர் உடையார் தெரு சந்தியில்
பஸ்ஸூக்கு நின்றுகொண்டிருந்தேன்
அப்போது அந்த மரண ஊர்வலம் வந்துகொண்டிருந்தது.
இறந்துபோனவரைக் காவிக்கொண்டுவந்த
அந்த எட்டோ பத்துப் பேருக்கு முன்னால்
எங்களூர்ச் சலவைத் தொழிலாளர்கள்.
நிலபாவாடையை வீசி வீசி விரித்துக்கொண்டிருந்தார்கள்
அவர்களெல்லாரும் வயது வந்தவர்களாக இருந்தார்கள்
ஒருவன் மட்டுமே இளைஞனாயிருந்தான்.
அவனை நன்றாய் அவதானித்தபோதுதான்
என்னோடு கிளறிக்கல் சோதனைக்குப் படித்த நண்பன்
ஈஸ்வரன் என்பது தெரிந்தது.
அவன் சோதனை சித்தியடைந்து எங்கேயோ வேலையாயிருந்தான்
ஊருக்கு வரும்போது தகப்பனுக்கு உதவியாய்த்
தொழிலைச் செய்வான்போலும்.

ஈஸ்வரன் கையில் சுற்றிய சேலைகளோடு ஓடியபோது
ஒரு சுருள் எனக்குக் கிட்டே நிலத்தில் விழுந்தது.
அதையெடுத்து அவனிடம் கொடுத்தபோதுதான்
அவனும் என்னைக் கண்டான்.
ஒரு விநாடி என்னை உற்று நோக்கிவிட்டு
கொடுத்ததை வாங்கியபடி ஓடிப்போனான்.
என்னைத் தெரிந்துகொண்டதாக ஏன் அவன் காட்டிக்கொள்ளவில்லை?
எனக்கு மனதை என்னவோ செய்தது.
இன்னொருமுறை எனக்குக் கிட்டே வரமாட்டானாவென்று காத்திருந்தேன்.
அதற்குள் ஊர்வலம் எட்டச் சென்றுவிட்டது.
ஈஸ்வரனை அதற்குப் பிறகு சந்திக்கவேயில்லை.
நான் கிளறிக்கல் சோதனையில் தோற்றுப்போனதை அறிந்திருப்பான்.
நண்பனே, அதற்காகவா உன் வருத்தத்தை இப்படித் தெரிவித்துக்கொண்டாய்?
----

அக்கா

எங்கள் குடும்பத்தில்
அம்மாவுக்கு அடுத்தது அக்காவில்தான் எனக்கு விருப்பம்
பல வேளைகளில் அம்மாவின் இடத்தை
அக்கா பிடித்துவிடுவாள்.
அக்காவென்றால் மூத்தக்கா
அடுத்தவள் சின்னக்கா
அதற்கடுத்தவள் குட்டி அக்கா.

சின்னக்கா கொஞ்சம் நிறம் குறைவு
அதுதான் அவளுக்குள்ள ஒரே கவலை
ஆனால் வடிவுக்குக் குறைச்சலில்லை.
குட்டி அக்காதான் எல்லாரிலும் நிறம்
அதனால்தான் அவளுக்கு நடப்பு.
குட்டி அக்கா அட்டகாசமான வடிவென்றால்
சின்னக்கா அடக்கமான வடிவு.
அக்கா எப்படியிருப்பாள்?
அவள் அம்மாவைப்போல் என்றபடியால்
அவள் எப்படியிருந்தாலும் எனக்கு ஒன்றுதான்.

“உங்கள் எல்லாரிலும் பார்க்க அம்மாதான் வடிவு” என்று
ஒரு நாள் ஏதோவொரு குணத்தில் சொல்லிவிட்டேன்.
சின்னக்காவுக்கு முகம் வாடிவிட்டது
தனது நிறத்தை வைத்துச் சொன்னேனென்று நினைத்துவிட்டாள்.
குட்டி அக்காவுக்குக் கோபம் வந்துவிட்டது
எழும்பிப் போய்விட்டாள்.
ஆனால் அக்கா சொன்னாள்
“பின்னே, அம்மாதான் எல்லாரிலும் வடிவு.”
அதுதான் அக்கா!

நான் படுப்பதற்குத் தலையணையைத் தேடுவதில்லை
அக்காவின் மடி எப்போதும் தயாராயிருக்கும்.
எனக்குச் சோறு குழைத்துத் தரும்போது
நான் அவள் வாயைப் பார்ப்பேன்.
அதுவே என்னைச் சாப்பிடும்படி தூண்டும்.
புத்தகத்தை வாசித்துக் காட்டுவாள்,
அதை எழுதியவர்தான் வாசிப்பதுபோலிருக்கும்.

அக்காவுக்குக் கல்யாணம் நடந்தது.
வெளியூர் மாப்பிள்ளை.
அத்தான் கறுப்பென்றாலும் கம்பீரமாக இருப்பார்.
கல்யாணம் முடிந்ததும் அக்கா எங்களை விட்டுப்போனபோது
அழுதுகொண்டேயிருந்தேன்.
நான் பெரிய பள்ளிக்கூடத்துக்கு மாறியபோது
அத்தான் பார்க்கர் பேனையொன்று வாங்கித் தந்தார்.
அதுவும் அக்காவின் வேலைதானென்று தெரியும்.

அக்கா பிள்ளைப் பேறுக்காக ஆஸ்பத்திரியில் இருந்தாள்.
எல்லாரும்போய்ப் பார்த்தோம்.
உனக்கு மருமகன் வேண்டுமா மருமகள் வேண்டுமாவென்று
எல்லாரும் என்னைக் கேட்டார்கள்.
எனக்கு அழுகை வந்துவிட்டது.
எனக்கு அக்காதான் வேண்டுமென்று
இவர்களுக்கேன் விளங்கவில்லை?
அடுத்த நாள் பிள்ளைப்பேறின்போது
ஏதோ நடந்து அக்கா இறந்துபோனாள்.
நான் பார்க்கப்போன வேளை
அக்காவின் கட்டிலில் அவளுடைய மகள் படுத்திருந்தாள்.
மகளும் அக்காவைப்போலவே இருந்தாள்.
அக்கா என்னைவிட்டுப்போகவில்லை.

மருமகளுக்கு ஏதோ பெயர் வைத்தார்கள்
அவளை அக்கா என்றுதான் கூப்பிடுவேன்
மற்றவர்கள் என்ன சொல்வார்களென்று
கவலைப்படப்போவதில்லை நான்.
-----

சில நேரங்களில் சில கடவுள்கள்

பிரச்சனைகள் மலிந்துவிட்டன என்கிறார்கள்; போதாததற்குப் புதிதாகவும் ஆரம்பிக்கிறார்கள். அவற்றைத் தீர்ப்பவர்கள் மட்டுமல்ல அவற்றை ஆரம்பிக்கிறவர்களும் சாமர்த்தியசாலிகள்தான்.  அனால் எதிலும் மாட்டுப்படாமலிருக்கவேண்டுமே, அதில்தான் நமது சாமர்த்தியம் தங்கியிருக்கிறது.

இச்சிறுகதையில் நான் பிரச்சனையெதையும் ஆரம்பிக்கவில்லை, தீர்க்கமுனையவுமில்லை. இதில் எழுத்தாளனின் பணி எதுவோ அதையே ஒரு தர்மமாகக்கொண்டு செய்யமுயன்றேன்.

கதை மாந்தர்களைப் பேசவிட்டு எழுதுபவன் எதிலும் தலையிடாமல் எட்ட நிற்பதும் சிறுகதையில் ஒருவகை உத்தியல்லவா? அதன்மூலம் வாசகர்களேகளம் நடக்கின்ற சூழலைத் தாமாகவே காட்சிப்படுத்துவார்களென நம்புகிறேன். 

=========


ரது கதவடியிலைநிக்கிறது?

சாந்தி இல்லம்நிர்வாகி மரகதம் அம்மா என்றவர் நீங்களா?

நான்தான் மரகதம்,நீங்கள் ஆர், என்ன விஷயமா வந்தியள்?

உங்களைக்காணவேண்டுமென்று வந்தேன்.

பொறுங்கோ, நாங்கள்இப்ப கை முட்ட அலுவலாய் இருக்கிறம். காலமை வெள்ளெனச் சந்திக்க வழக்கத்திலை நாங்கள்ஒருதருக்கும் நேரம் கொடுக்கிறதில்லை. என்ன விஷயமா வந்தனீங்கள் எண்டு சுருக்கமாய்ச்சொன்னால் நல்லது.

இங்கேயிருக்கிறபிள்ளைகளைப் பார்க்கலாமென்று வந்தேன்.

ரண்டு நாளைக்குமுந்தியும் உங்களைப்போல மூண்டு நாலு பேர் சும்மா விடுப்புப் புடுங்கிறமாதிரி வந்துகேட்டிட்டுப் போனவை. எல்லாரும் எங்கட இல்லத்தைப் பாக்கிறதுக்கும் போட்டோஎடுக்கிறதுக்கும்தான் வருகினமேயொழிய இங்கையுள்ள பிள்ளைகளின் சுக நலம்களுக்கோ படிப்புக்காரியங்களுக்கோ உங்களைப் போலை ஆக்களாலை ஒரு பிரயோசனமும் கிடைக்கிறயில்லை.

நான் அப்படியானநோக்கத்திலை வரவில்லை, அப்படியான ஆளும் இல்லை, மரகதம் அம்மா.

அப்பிடித்தான்எல்லாரும் முதலிலை சொல்லிக்கொண்டு வருவினம். எங்களுக்கும் மறுமொழி சொல்லிக்களைச்சுப்போச்சு. சும்மா ரண்டு பேருடைய நேரத்தையும் வீணாக்காமல் எங்களுடையஇல்லத்துக்கு உங்களைலை ஏதேனும்  உருப்படியான உதவிசெய்ய முடியுமெண்டால் நல்லா யோசிச்சுப்போட்டுப் பிறகொரு நாளைக்குப் பின்னேரமாவாங்கோ. சந்தோசமாக் கதைக்கலாம்.

உங்கள் மனதில்இருக்கிற கவலையும் பொறுப்பும் எனக்கு நன்றாய் விளங்குகிறது, அம்மா. இங்கே உங்கள்பராமரிப்பில் உள்ள பிள்ளைகளை ஒருமுறை நேரே பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம்தாருங்கள். அப்போ என்னால் உங்கள் பிள்ளைகளுக்குக் கொஞ்ச நேரத்துக்கென்றாலும் உண்மையிலேயேஏதேனும் பிரயோசனம் கிடைத்தது என்பதை நிச்சயம் அறிவீர்கள். உங்களுக்கும் அதன்மூலம் மனஆறுதலாகவும் இருக்கும்.

அதெப்படி? நீங்கள் என்னநோக்கத்திலை எங்கள் பிள்ளையளைப் பாக்க விரும்பிறியள் எண்டதை முதலிலை விபரமாகச்சொல்லுங்கோ. அதை வைச்சுக்கொண்டுதான் அதுகளை நீங்கள் பாத்துக் கதைக்க உங்களுக்குஅனுமதி தாறதோ இல்லையோவெண்டு நாங்கள் யோசிப்பம். தயவு செய்து குறை நினைக்கவேண்டாம். இப்போ இந்த நிலையத்தன்ர கொள்கை இதுதான். நாங்கள் இங்கை மிருகக்காட்சிச்சாலை நடத்தயில்லை. இங்கே உள்ளதெல்லாம் குழந்தைகள் ஐயா, குழந்தைகள்!அநாதைக் குழந்தைகள். தாங்கள் அநாதைகளென்று அறியிற பக்குவம் வராத குழந்தைகள். இதைமுதலிலை நீங்கள் தெரிஞ்சுகொள்ளுங்கோ.

இதையெல்லாம்அறிந்தபின்னர்தான் உங்கள் இந்த இல்லத்துக்கு வரத் தீர்மானித்தேன். இதுபோன்ற சிறுபிள்ளைகளின் காப்பகங்களைத் தமது சுய விளம்பரத்துக்காகப் பயன்படுத்தும் மனிதர்கள்மலிந்துபோன இந்தக் காலத்தில் உங்கள் நிர்வாகத்தின் கீழிருக்கும் இந்த இல்லம்தான்லட்சியப் பற்றோடு பணி செய்கிறதென அறிந்து வந்தேன்.

மிச்சம் சந்தோசம்,ஆனால் இந்த இல்லத்தைக் காப்பகங்கள் என்ற பெயருக்குள் முடக்காதீர்கள். நாங்கள்இதையொரு வீடுபோலவே கருதி நடத்துகிறோம். பிள்ளைகளை எங்கள் சொந்தப் பிள்ளைகளாகவேபேணிப் பராமரிக்கிறோம். இந்த வீட்டின் நிர்வாகியைக் காணவேண்டுமெண்டு சொன்னீங்கள்.இங்கே நிர்வாகி என்று ஒருவரும் இல்லை. நாமெல்லாரும் இந்தக் குழந்தைகளின்பெற்றார்கள். இதை நல்லாய்த் தெரிஞ்சுகொள்ளுங்கோ. நாங்கள் அறுபதுக்கு மேற்பட்டபிள்ளையளை ஆதரிக்கவேணும். அவையளை ஒரு குறையும் வைக்காமல் முறையாய்ப் பராமரிக்கவும்வேணுமெண்டு நாங்கள் எந்த நேரமும் ஓடுப்பட்டுத் திரியிறம். ஆனபடியால் எங்கட நேரத்தைவீணாக்காமல் இருக்கவேணும், பாருங்கோ.

இப்படியே இந்தநாடெல்லாம் இயங்குகிற எல்லா இல்லங்களும் நடந்தால் எவ்வளவு நல்லது. இதைச்சொல்கிறபோதே உங்கள் மனதில் இருக்கிற ஆதங்கம் வெளிப்படுகிறது. நீங்கள் என் மனதில்உள்ளதைக் கேட்டீர்கள், சொல்லுவேன், மகளே.

ஒருவகையில் நானும்அநாதைதான். எனக்கெனச் சொந்தமாகக் குழந்தையென்று சொல்ல ஒருவருமில்லை. இதனால்உலகத்தில் நான் காணும் எல்லாக் குழந்தைகளையும் என் குழந்தையாய் கருதுகிறேன். அவர்கள்வாழும் எல்லா இடங்களுக்கும் போய் ஆதரவற்ற குழந்தைகளைத் தேடித் தேடிச் சந்திக்கிறேன்.வசதியற்ற அந்தக் குழந்தைகள் எல்லாருக்கும் வசதி செய்து கொடுக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறேன்.ஆனால் தர்மம் செய்ய இயலாதவர்கள் தார்மிக உதவி செய்யவும் முன்வரலாம்தானே. இப்படியானஉதவியும் மனிதர்களுக்கு அவ்வப்போது தேவைப்படுகிறதல்லவா? அதனால்தான் பண உதவியோ உடல்உதவியோ செய்ய இயலாத நான் இங்கே வந்து வேறு வழியில் உங்களுக்கும் குழந்தைகளுக்கும்உதவமுடியுமாவென்று பார்க்கிறேன். இந்தக் குழந்தைகளை ஒருமுறை காண உங்கள் அனுமதிகிடைத்தால் எனது பயணத்தின் நோக்கம் நிறைவேறும்.

உங்களைப் பாத்தால்கனக்கப் படித்தவர்போலையும் வாழ்க்கையில் மிச்சம் அனுபவப்பட்டவர் போலையும் இருக்கிறியள்.உங்களை வாசலிலை வைச்சுக் கதைக்க விரும்பயில்லை. உள்ளுக்கை வாங்கோ, பெரியவரே.

மிச்சம் நல்லதம்மா.எனக்காகவும் இரங்கி ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

நீங்கள் இவ்வளவும்சொன்னதை வைச்சு உங்களுக்கு ஒரு அரை மணித்தியாலத்தை ஒதுக்கலாமெண்டு யோசிக்கிறன்.இது இந்தக் குழந்தைகளின் கற்கை நேரம். நீங்கள் குழந்தைகளைப் பாக்க வந்ததாலைஅவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்படவேணும் இல்லையெண்டால் நாங்கள் விசிட்டர்களோடைமினைக்கெட்டுப் பிரயோசனமில்லை. நீங்கள் எந்த வகையிலாவது இந்தச் சிறு பிள்ளைகளுக்குஅறிவு ஊட்ட முடியுமெண்டால் உங்களுக்கு நாங்கள் அனுமதி தாறதாலை நன்மை இருக்கு. நான்சொல்லுறதை விளங்கி ஒத்துக்கொள்ளுவியள் எண்டு நினைக்கிறன்.

ஒத்துக்கொள்கிறேன்.எந்த நிர்வாகத்துக்கும் நடைமுறை விதிகள் வேண்டும்தானே! நீங்கள் சொல்வதுநியாயமாகவும் இருக்கிறது.

இப்பிடி இதிலை ஒருநிமிஷம் இருங்கோ வாறன்.

இந்தாருங்கோ, உங்கடபர்சனல் விபரத்தை இந்த ஃபோமிலை எழுதித் தாருங்கோ. ஏனெண்டால் இங்கை பிள்ளைகளைப்பாக்க வாற ஆக்களன்ர சுய விபரத்தையும் நோக்கத்தையும் நாங்கள் ரெகொர்ட் பண்ணிவைச்சிருக்கவேணும்.

அப்படிச் செய்வதும்முறையான நிர்வாகத்துக்கு நல்லதுதான். படிவத்தைத் தாருங்கள்.

***

இங்கே நீங்கள் தந்த படிவம்,இயன்றவரை நிரப்பியிருக்கிறேன்.

என்ன அதுக்குடனை ஃபோர்மைநிரப்பிவிட்டியள்!

என்னைப்பற்றி எழுதஅதிகம் எதுவுமில்லை. ஓரளவுக்குப் பார்த்தால் எல்லாருக்கும் தெரிந்த செய்திதான்.

கையிலைவேலையாயிருக்கிறன், ஃபோர்மை அங்கை அந்த முன் மேசையிலை வைச்சிட்டுப் போங்கோ.

அப்படியே செய்கிறேன்.

அங்கை, உங்களைவகுப்புக்குக் கூட்டிக்கொண்டுபோக சின்னம்மா காந்திமதி வந்திருக்கிறா.

மிகவும் நன்றி, மகளே.காந்திமதி, எனக்கு வழி காட்டுங்கோம்மா.

***

இஞ்சை இந்த வழியாலைவாங்கோ, ஐயா. இப்ப கற்கை நேரம் எண்டபடியால் இந்த மாதிரி வெளியான இடங்களைத்தான்வகுப்பு அறையாக வைச்சிருக்கிறம். இங்கை மேசை, கதிரை ஒண்டும் கிடையாது. நிலத்திலைஇருந்துதான் படிக்கவேணும். பின்னேரம்தான் விளையாட்டு நேரம். மத்தியானம் பிள்ளைகள்சாப்பிட்ட பிறகு கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

விளங்குகிறது, மகளே.நானும் நீங்கள் சொல்வதற்கமைய நடப்பேன்.

நீங்கள் முந்திடீச்சர் வேலை, சமூக வேலை அப்பிடி ஏதேனும் செய்திருக்கிறியளோ?

இரண்டுமே சமூகவேலைதானே, அம்மா. அதைத்தான் காலம் முழுவதும் செய்துகொண்டிருக்கிறேன்.

இந்த வகுப்பறை எப்படிஇருக்கிறதெண்டு நினைக்கிறியள்?

நான் முன்னர் பார்த்தஇடமெல்லாம் வகுப்பறைகள் இப்படித்தான் என்று அறிந்து மனம் நோகிறது.

ஏன் அப்பிடிச்சொல்லுறியள்?

இங்கே பாருங்கள்,இந்தச் சுவரெல்லாம் எவ்வளவு செம்மையாக வெள்ளையடித்துத் துப்பரவாக வைத்திருக்கிறீர்கள்.

நீங்கள் இதைச்சொல்லுறபோது எனக்குச் சந்தோசமாகவெல்லோ இருக்கு.

அப்படியில்லை,காந்திமதி. இந்தப் பிள்ளைகளின் மனம் இருக்கிறதே, அது மிகவும் அலாதியானது. சுவரைக்கண்டால் சித்திரம் வரையவேண்டுமென ஆவல்படும். கடதாசி, பென்சில் கிடைத்தால் அவர்கள்கைகள் துருதுருக்கத் துவங்கிவிடும். பறவைகள், மிருகங்களைக் கண்டால் அவற்றோடுவிளையாடவும் பேசவும் ஆசை வந்துவிடும். இவர்களிடம் எல்லா நிறத்திலும் நிறக்கட்டிகளைக்கொடுங்கள். இந்தச் சுவர்கள் உங்கள் கண்களுக்கு அழுக்காகட்டும், அவர்கள் கண்களுக்குஅழகாகட்டும்.

இந்த வீட்டைச்சுற்றிய முற்றமெல்லாம் மரங்களும் செடிகளும் நிறைந்த சோலையாகட்டும். அங்கே கிடைக்கும்இடைவெளியெல்லாம் இவர்கள் ஓடி விளையாடட்டும். கூரை பிய்ந்துபோகும்படியாகச் சத்தம் எழுப்பட்டும்.சண்டை பிடிக்கட்டும். அடுத்த கணம் எல்லாவற்றையும் மறந்து சினேகிதமாகட்டும்.மொத்தத்தில் இது குழந்தைகளின் அரண்மனையாகட்டும். இவர்கள் போடும் கூச்சலால் உங்கள்எல்லாருக்கும் தலையிடி வரட்டும். அதையே நீங்கள் பெருமையாகப் பேசும் காலங்கள்வரட்டும்.

என்ன சொல்லுறீங்கள்?

இந்தக் குழந்தைகளின்உடல் சுகத்தைப் பேணுவதிலும் பார்க்க மனச் சுகத்தைச் பேணுகின்ற பணிதான் உங்களிடம்நிறைய இருக்கிறது என்று சொல்கிறேன், மகளே. இவர்களை நீங்கள் வெளியேகூட்டிக்கொண்டு போகும்போது இவர்கள் தெருவில் செல்லும் மற்றக் குழந்தைகளையும்அவதானிக்கிறார்கள், இல்லையா? அப்போது அவர்களைப்போல் தாங்களும் இல்லையேயென்றுஆதங்கப்படுகிறார்கள் என்பதை அறிவீர்களா? உடுப்பும் நகைகளும் இவர்களுக்குமகிழ்ச்சியூட்டும் என்பது தெரிந்ததுதானே. ஆனால் இவர்கள் மனதில் அந்தக் காட்சிகளைக்கண்டு எந்த வழியாலும் தாழ்வு மனப்பான்மை உண்டாகிவிடக்கூடாது என்பதில் நீங்கள்மிச்சம் கவனமெடுக்கவேண்டும். இல்லையேல் பிற்காலத்தில் இவர்களிடம் உளச்சிக்கல்ஏற்பட இடமுண்டு. இவர்களின் உடல் வளர்ச்சியிலும் பார்க்க மன வளர்ச்சியில் கூடியகவனமெடுப்பதுதான் உங்கள் கையிலுள்ள பாரிய பணி.

இன்னுமொன்றுசொல்வேன், மகளே. கோயில்களில் பார்த்திருப்பீர்களே அங்கே படம் எடுக்க அனுமதிஇல்லையென்று அறிவித்திருப்பார்கள். இந்த இல்லமும் ஒரு கோயில் போன்றதுதான். ஒவ்வொருமுறையும் முகமறியாத வெளி ஆட்கள் இங்கே வந்து தம்மைப் படம் எடுக்கும்போது இந்தக்குழந்தைகள் தாமாகச் சிரிப்பதில்லை சிரிக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்ட கட்டாயத்திற்காகச்சிரிக்கிறார்கள். முன்பின் தெரியாதவர்களின் கட்டளைகளுக்குப் பணியவேண்டிவந்ததேஎன்று எண்ணி இவர்கள் மனம் கூசுகிறார்கள். தம்மைக் காட்சிப்பொருளாக்குகிறார்களேயென்று இவர்களின் இளம் மனதுநொந்துபோகிறது. வந்தவர்கள் பின்னர் என்ன செய்கிறார்கள் என்பதைஅறிந்திருக்கிறீர்களா? ஒருசிலர் இதை வைத்தே வியாபாரம் செய்கிறார்கள். பலர் தமக்குவிளம்பரம் தேடிக்கொள்கிறார்கள்.

எவ்வளவோயோசிக்கவைக்கிறீர்கள், ஐயா. பெரிய அம்மாவிடம் எல்லாத்தையும் சொல்லுறன். வாருங்கோபிள்ளையளைக் காட்டுறன். இங்கை இதுதான் இவர்களின் கற்கை அறை. இந்தப் பிள்ளைகளைப் பாருங்கள்,எல்லாம் எங்களன்ர அருமையான பிள்ளைகள்.

குழந்தைகளே, உங்களைக்கண்டது எனக்கும் மிக்க மகிழ்ச்சி. உங்களைக் காணவென்று நெடுந்தூரம் பயணம்செய்துவந்திருக்கிறேன்.

ஐயா, பிள்ளையளோடைஅதுகளுக்கு விளங்கிறமாதிரிக் கதையுங்கோ.

ஓம், காந்திமதி.எனக்கும் பழக்கத்தை மாத்தேலாமல் கிடக்குது.

பாருங்கோ, பெரியவரே, பிள்ளையள்உங்களையே பாத்தபடி இருக்குதுகள். ஐயா, நான் கொஞ்சத்தாலை வாறன். இப்பிடியொருசந்தர்ப்பம் எல்லாருக்கும் கிடைத்துவிடாது, தவற விடாதையுங்கோ.

அதற்குக்கடவுளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும், மகளே. யோசிக்கவேண்டாம், நீங்கள்பார்ப்பீர்கள்தானே, நான் விரைவில் பிள்ளைகளோடு பிள்ளைகளாகிவிடுவேன்.

***

பிள்ளையளே, எல்லாரும்காலமை குளிச்சுச் சாப்பிட்டுப் படிக்க வந்தியளோ?

ஓம், ஓம், ஓம்.....

எல்லாரும் வடிவாச்சட்டை போட்டிருக்கிறியள். நெத்தியிலை திருநீறும் சந்தனமும். உங்களைப் பாக்கவேஎனக்குச் சந்தோசமாக இருக்கு.

நீங்கள் ஆர்?

சொல்லுறன், நீங்கள்எல்லாருக்கும் காலமை படிக்கிறதெண்டால் வலு சந்தோசமெல்லோ?

ஓ......ம்!

நானும் உங்களைப்போலை சின்னவயசிலை இப்பிடித்தான். படிக்கவும் ஆசை, விளையாடவும் ஆசை. அங்கை பின்னாலை ஒருபூனைக்குட்டி வந்து நிக்குது, தானும் படிக்கப்போகுதாம்.

ஓ.... இல்லை சும்மாசொல்லுறியள்.

ஓம், சும்மாதான்சொன்னனான். உங்களெல்லாருக்கும் பூனைக்குட்டி, நாய்க்குட்டியெண்டால் மிச்சம்விருப்பம், இல்லையோ?

ஓமோம், ஆனால் இஞ்சைஅதுகளை உள்ளுக்கை வரவிடமாட்டினம்.

இனி அப்பிடிஇருக்காது. பெரியம்மாட்ட சொல்லுறன். உங்களுக்கு விளையாட பூனை, நாய் எல்லாம் கெதியிலைவரப்போகுது.

ஓ....!

அதார் துள்ளித்துள்ளிக் கதைக்கிறவ?

இவதான் ஆரபி. இவவுக்குத்தான்எல்லாரிலும் பாக்க நல்லாக் கதைக்கத் தெரியும்.

ஆரபி, மிச்சம் வடிவானபெயர். உங்கள் எல்லாற்றை பெயரையும் சொல்லுவியளோ?

நாங்கள் எங்கடபெயரைச் சொல்லுவம். இப்பிடித்தான் நாங்கள் இஞ்சை வாற எல்லாருக்கும் முன்னாலைநிண்டு பெயர் சொல்லுவம், பாட்டுப் படிச்சுக் காட்டுவம். போட்டோ எடுக்கிறதுக்காகச்சிரிச்சபடி நிப்பம், சில ஆக்கள் கதை சொல்லத் தெரியுமோ எண்டு கேப்பினம். எங்களுக்குஎங்கட கதையே தெரியாது. இண்டைக்கு நீங்கள் முதலிலை உங்கட பெயரைச் சொல்லுங்கோ,பாப்பம்.

ஓமோம், ஆரபிநல்லாத்தான் கதைக்கிறா. நீங்கள் எல்லாரும் சிரிச்சுச் சிரிச்சுக் கதைக்க எனக்கும் சின்னப்பெடியளைப்போல மிச்சம் சந்தோசமாக் கிடக்கு.

உங்கட உண்மையானபேரைச் சொல்லவேணும். இஞ்சை ஒருதரும் பொய் சொல்லக்கூடாது. உங்களுக்குத் தெரியும்தானே?

ஓம் பிள்ளைகளே, உண்மையைத்தான்சொல்லுறன். என் பெயர் கடவுள்.

கடவுள்? உங்கடசொந்தப் பேரைச் சொல்லுங்கோ.

என்னுடைய சொந்தப்பெயரே அதுதான்.

அப்ப நீங்கள் நாங்கள்கும்பிடுற அந்தக் கடவுள் இல்லை. உங்கட பேர் மட்டும்தான் கடவுள். அப்படித்தானே?

அந்தக் கடவுள்,இந்தக் கடவுள் எண்டு எதுவும் இல்லை, குழந்தைகளே. என்ர பேர் அந்தக்காலத்திலையிருந்தே கடவுள்தான்.

அப்பிடியெண்டால்உண்மையான கடவுளா?

பொறுங்கோ, ஆரபிக்குஇப்ப எத்தனை வயதெண்டு நான் சரியாச் சொன்னால் என்னை நம்புவீங்களோ?

எங்கை சொல்லுங்கோபாப்பம்.

ஆ.... போன மாதம் ஒம்பதாம்திகதிதான் ஆரபிக்கு ஏழாவது பிறந்த நாள். நான் சொன்னது சரியா இல்லையா?

அடேயப்பா, சரியாச்சொன்னீங்களே. அங்கேயிருக்கிற எங்கட பெரியம்மாட்டக் கேட்டுப் பாடமாக்கிப்போட்டுவந்து சொல்லுறீங்களா?

அப்பிடியில்லை, ஆரபி.அம்மா சொல்லித்தராமலே உங்கள் எல்லாருடைய பிறந்த நாளையும் சரியாகச் சொல்லுவன்.

அதெப்பிடி? எங்களன்ரைஉண்மையான பிறந்த நாள் ஒருதருக்கும் தெரியாது. ஏனெண்டால் நாங்களெல்லாம் அநாதைகளாக்காட்டுக்கை இருந்தனாங்களெண்டு எல்லாரும் தங்களுக்கை கதைப்பினம். எங்களுக்கு அப்பா,அம்மா இருந்தால்தானே எங்கட பிறந்த நாளை நாங்களோ வேறை ஆரெண்டாலோ சரியாகச் சொல்லலாம்.

அப்பிடி இல்லை,பிள்ளைகளே. நீங்கள் ஒரு காலமும் அநாதையில்லை. என்னை நல்லா நம்புங்கோ. நீங்களும்எல்லாப் பிள்ளைகளையும்போலை அப்பா, அம்மா இருக்கிற பிள்ளையள்தான். இப்ப உங்கடஅப்பா, அம்மா உங்களுக்குப் பக்கத்திலை இல்லாததாலை உங்களை அநாதையெண்டு சில அறியாதசனங்கள் சொல்லுங்கள். நல்லாச் சொல்லிப்போட்டுப் போகட்டும். நீங்களும் ஹ ஹ ஹ ஹாஎண்டு சிரியுங்கோ. எங்கை எப்பிடிச் சிரிக்கிறது எண்டு காட்டுங்கோ.

ஹ ஹ ஹ ஹ..!

அப்பிடித்தான். இப்பஉங்களுக்கு இந்த வீட்டிலை பெரியம்மாவும் சின்னம்மாவும் இன்னும் எத்தனையோபேரும்தான் உங்களுடைய அம்மா, அப்பா. இதை நம்புறியளோ இல்லையோ?

ஓமோம், அவங்கள்தான்எங்களுக்கு எப்பவும் அம்மாவும் அப்பாவும்.

அதுமாதிரித்தான் என்ரபெயர் கடவுள் எண்டதையும் நம்புங்கோ.

இஞ்சைவந்து வேடிக்கைசெய்யவும் விளையாட்டுக் காட்டவும் வெளியாக்கள் வாறவையள். நீங்கள் முசுப்பாத்திக்கதை கதைக்கலாமெண்டா வந்தீங்கள்?

என்னையொருமுசுப்பாத்தி ஆள் எண்டுதான் சனங்கள் நினைச்சிருக்கிதுகள்.

அப்ப முசுப்பாத்திகாட்டுங்கோ. முசுப்பாத்தியெண்டால் எங்களுக்கும் விருப்பம்.

***

காந்திமதி, வந்தவர்அங்கை வகுப்பு நடத்துகிறாரோ விளையாட்டுக் காட்டுறாரோ? அவர் வந்ததிலையிருந்துவகுப்பெல்லாம் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாய்க் கிடக்குது.

அவரைக் கொண்டுபோய்வகுப்புக்குள்ளை விட்டாப்போலை ஒருக்கால் எட்டிப்பாத்தனான். அப்பவும் சிரிப்பும்விளையாட்டும்தான். பிள்ளையளுக்கு நல்லாப் பொழுது போகுது, அதுகளைக் குழப்பக்கூடாதுஎண்டபடியால் நான் திரும்பி அங்கை இன்னும் போகயில்லை.

ஒருக்கால் போய்ப்பாத்திட்டு வாரும்.

ஓம் போறன்.

இவர் வந்து ஒருமணித்தியாலமாப் போச்சுது. நாங்களும் வேலைப் பழுவிலை கவனிக்காமல் இருந்திட்டம்.பிள்ளையள் களைச்சுப்போயிருந்தால் அவரை வெளியிலை அனுப்பிவிடும்.

ஓமம்மா, போய்ப்பாக்கிறன்.

***

சரி பிள்ளையளே,வகுப்பு நடந்தது போதும். பெரியவரும் களைச்சுப்போனார். எல்லாரும் வந்து வரிசையாய்நில்லுங்கோ.

கொஞ்சம் பொறுங்கோ சின்னம்மா,இவர் இன்னும் கதை சொல்லி முடியல்லை.

கதையோ, ஆர் கதைசொல்லுறது? எங்கை அந்தப் பெரியவரைக் காணயில்லை?

அவர்தான் இங்கை கதைசொல்லிக்கொண்டிருக்கிறார்.

என்ன சிரிப்பு இது?உங்களெல்லாருக்கும் இண்டைக்கு என்ன நடந்தது? எங்கை பெரியவர்?

இஞ்சை நடுவிலைஇருந்து கதை சொல்லுறார் தெரியல்லையோ?

நடுவிலை? என்ன இது?பிள்ளைகளே எல்லாரும் எழும்பி நில்லுங்கோ. எனக்குப் பதட்டமாக் கிடக்கு. எங்கைஅந்தப் பெரியவர்? எங்கை அந்தப் பெரியவர்?

***

அம்மா, அம்மா!

என்ன காந்திமதி?ஏனிப்பிடி பதகளிச்சுக்கொண்டு ஓடிவாறீர்? என்ன நடந்தது?

அவர், அவர்... அந்தப்பெரியவர்... அவரை அங்கை வகுப்பிலை காணயில்லை. எங்கை போனார் எண்டும் தெரியல்லை.பிள்ளையள் சொல்லுதுகள் அங்கை முன்னாலை இருக்கிறாரெண்டு.

என்ன சொல்லுறீர்,காந்திமதி? வகுப்பிலை பிள்ளையளுக்குக் கதை சொல்லிக்கொண்டு இருந்தாரெல்லோ?

அப்பிடித்தான்பிள்ளையள் இப்பவும் சொல்லுதுகள். ஆனால் அவரை என்ர கண்ணிலை மட்டும் அங்கைகாணயில்லை.

என்ன கதைக்கிறீர்,நல்லாப் பார்த்தீரோ?

ஓமம்மா, பார்த்தேன்.பிள்ளையளெல்லாம் சுத்துவட்டமாய் இருந்து கதை கேட்டுக்கொண்டிருந்தமாதிரித்தான்இருந்ததுகள். ஆனால் அவரை மட்டும் அங்கை காணயில்லை. 

இதென்ன அதிசயமாக்கிடக்கு!அவர் வகுப்புக்குள்ளையிருந்து வெளியிலை வந்தால் எங்கட கண்ணிலை படாமல் போகுமோ. இந்தஅறையைத் தாண்டித்தானே அவர் வெளியிலை போகவேணும். அங்கை வெளிக்கதவும் பூட்டினபடிகிடக்கு.

எனக்கொண்டும் விளங்கயில்லை,அம்மா.

வாரும் உள்ளைபோய்ப்பாப்பம்.

எவ்வளவு நேரமாக் கைதட்டுதுகள் இந்தப் பிள்ளையள்! என்ன கூத்து இது, ஒரு நாளும் இல்லாமல், சிவனே, ஏன்இண்டைக்கு இப்படியெல்லாம் நடக்குது?

பிள்ளையளே, கைதட்டினது போதும். எல்லாரும் வந்து வரிசையாய் நில்லுங்கோ.

ஆரபி என்னவோசொல்லப்போறாவாம், அம்மா.

என்ன ஆரபி? நீங்கள்நல்ல பிள்ளையெல்லோ. உங்களுக்குக் கதை சொன்ன பெரியவர் எங்கை, எதாலை வெளியிலைபோனவர்.

நீங்கள் இப்ப வரவும் தான்பிறகு வாறன் எண்டு சொல்லிப்போட்டு அங்கை போனார், அம்மா.

எதாலை போனவர்?

உதாலைதான். உங்களைத்தாண்டித்தான் போனவர்.

நாங்கள் காணயில்லை.

காந்திமதி, ஒருக்கால்அவர் நிரப்பித் தந்த ஃபோர்மை எடுத்துக்கொண்டு வாரும்.

பொறுங்கோ வாறன்,அங்கை முன் மேசையிலை வைச்சிட்டுத்தான் வந்தவர். அங்கைதான் கிடக்கும்.

கெதியா வாரும்.எனக்குத் தலையைச் சுத்துது.

இஞ்சை இருக்குதம்மா,ஃபோர்ம்.

இதென்ன இது,ஃபோர்மிலை ஒண்டுமே இல்லை. பெயர் எழுதிற இடத்திலை மட்டும் கடவுள் எண்டு எழுதிக் கிடக்குது!

------

நன்றி: காற்றுவெளி, பங்குனி 2015

அம்மாவென்றழைக்காத பிஞ்சுகளே!


அம்மாவென்றழைக்காத பிஞ்சுகளே – என்றுமே
அன்னையை அறியாத செல்வங்களே
ஆயிரம் முகங்களைக் கண்டிருப்பீர் – உங்கள்
தாயின் முகமங்கே தோன்றியதா?

இன்னொரு தாயிடம் பாலருந்தி
எடுத்தவர் அணைப்பினில் கண்ணயர்ந்து
ஒவ்வொருபெண்ணையும் அன்னையென
எண்ணியே ஏமாந்துபோனீர்களோ?

பசி வந்தபோதும் அழ மறந்தீர்
பாயினில் என்றுமே துணை இழந்தீர்
நோயுற்ற வேளை தனித்திருந்தீர்
தாயன்பைத் தேடியே தவித்திருந்தீர்.

கட்டி அணைத்தும்மை ஆற்றிடவும்
வட்டிலில் சோறிட்டு ஊட்டிடவும்
பட்டினை உடுத்தி மகிழ்ந்திடவும்
பாட்டினால் துயில்கொள்ள வைத்திடவும்,

எட்டிய கரங்களைப் பற்றிடவும்
எட்டி நடைபோடப் பயிற்றிடவும்
உமக்கொரு அன்னை இருந்தாளம்மா
இனி அந்த அன்னை தோன்றாளம்மா.

பிறந்தாலும் பெண்ணாகப் பிறக்கலாமோ
பேதையென்ற பெயரென்றும் எடுக்கலாமோ
பெயர் சொன்ன அப்பனும் மறையலாமோ
தாயென்ற உறவொன்று தொலையலாமோ?

ஊரென்று சொல்ல ஒரு இடமுமில்லை
உறவென்று கூற ஒரு உயிருமில்லை
போரென்ற பெயரால் உம்மைப் பிரித்தனரோ
பாராளும் ஆசையால் வாழ்வை வதைத்தனரோ!

தங்களின் முலைகளைத் தந்திடவே – இங்கே
தாய்மார்கள் நிறையவே உள்ளாரம்மா
நேசம் மிகுந்தவர் நாடிதம்மா
நாளை உமக்கு வழி பிறக்குமம்மா!
----

கடவுளும் கோபாலபிள்ளையும்


வாசல் கதவை யாரோ தட்டியமாதிரி இருந்தது, தடவியமாதிரியும் இருந்தது, பின்னர் விரல்களால் மெல்லமாய் விறாண்டியமாதிரியும் இருந்தது. இன்னும் கொஞ்சம்கூட அவதானித்தபோது எதிலும்சேராத கற்பூர வாசனையும் கதவிடுக்குகளுக்கூடாக உள்ளே நுழைந்ததுபோலுமிருந்தது. இது என்ன என்றைக்கும் இல்லாத புதுமையான விருந்தினர்? எவரேனும் வித்தியாசமான ஆள் வந்து வாசலில் நிற்கிறரோ?

அன்று பிற்பகல் அலுவலகத்தில் கடனுக்கு அழுது முடிந்ததும் வேளையோடு வெளிக்கிட்டு, வழியெல்லாம் மனித நெரிசலில் நசுங்கி, ஒழுகும் வியர்வையில் வழுக்கி, மனிதர் எவரும் சுலபமாகவும் சுயமாகவும் தொலைந்து போவதற்கென்றே கட்டிய டவுண் ரவுண் சுரங்கப் பொந்துகளூடாகப் புகுந்து, அவற்றிலே பளிங்குக் கற்கள் பதித்த பாதைகள் இருபுறமும் ஒன்றையொன்று போட்டிபோட்டபடி ஜகஜோதியாய் மின்னும் கடைகளில் மிச்சம் சாதாரண பெண்களுக்கென மிச்சம் அழகான பெண்கள் விற்கும் சொர்க்கலோகத்து இறக்குமதிகளான தலைப்பூச்சு முதல் கால்பூச்சு வரையிலான ஆயிரத்தெட்டுச் சாயங்கள், செண்டுகள், சாதனங்களின் சாம்பார் வாசத்தைச் சட்டைமுழுதும் தொற்றிக்கொண்டு, ஸ்டேஷனுக்கு நாயோட்டமும் சில்லறைப் பாய்ச்சலுமாய் வந்து, ரயிலிலும்பார்க்க வேகமாய் மூடிக்கொள்ளும் அதன் கதவுகளை வென்று மார்தட்டி, தோற்றவர்கள்மீது இரங்கற்பா பாடி, இருக்கையில் அமர்ந்து, அடுத்த ஆளின் ஐபோன் இசையின் அரைமணி நேரத் தாலாட்டின்பின் எங்களூர் ஸ்டேஷனில் துப்பப்பட்டு, கோயில் வாசலில் சிதறு தேங்காய் பொறுக்கப் பாய்ந்தவன்போல் விழுந்தடித்துக்கொண்டு வெளியேறி, இனி இந்த மாலைப்பொழுது என்னுடையதுதான் என்ற சுதந்திரக் களிப்பில் அலைமோதும் கார் சமுத்திரத்துக்குள் வலைவீசி, காலையில் என் காரை எங்கே விட்டேன் எனச் சிறிது நேரம் மயங்கிப் பின் ஒருவாறு அதனைக் கண்டு உருவி எடுத்து, வழியில் குறுக்கே தங்கள் காரைச் செலுத்தியவர்களையெல்லாம் இல்லாத சொற்களால் சபித்துக் கடைசியில் வீடு வந்து சேர்ந்து ‘அப்பாடா’ என்று சோபாவில் சாயும்போது உண்டான சுகத்தைச் சின்னக்கரண்டியால் ஐஸ் கிறீமைக் கிள்ளி எடுத்து சிறிது சிறிதாய் நாக்கில் வழித்து ருசிப்பதுபோல் மெள்ள மெள்ள அனுபவித்தவேளையில் ‘தடால்’ என்ற சத்தத்தோடு தேனீர்க் கோப்பையைப் பக்கத்திலிருந்த டீப்போவில் வைத்தாள் என் இல்லத்தரசி.



இவ்வளவு இடைவெளி ஏன் இங்கே விட்டேனென்றால் நீங்களும் நானும் கொஞ்சம் மூச்சு விடுவதற்காக.

“தேங்க்ஸ், டியர்” என்று சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் முகம் வழக்கம்போலவே சந்தேக ரேகைகள் படரக் கண்களை இன்னும் அழகாக்கின. அவள் தேனீர்க் கோப்பை மூலமோ மற்றப் பாத்திரங்கள் மூலமோ (அவற்றை வேண்டுமென்றே கீழே போட்டு உடைத்து) எழுப்பும் பின்னணி இசையைக்கொண்டே அவளின் அப்போதைய மனோ நிலையை அளந்துவிடும் பக்குவம் நூற்றுக்கு இருபது வீதம் மட்டுமே என்னிடமுண்டு. அதோடு இந்தப் பாடத்தில் நூறு மார்க்ஸ் எடுத்த ஆண்கள் எவருமில்லை என்பது எல்லாரும் அறிந்ததே.

“என்ன சிரிப்பு, வந்ததும் வராததுமாய்?” என்று கேட்டாள் மனைவி. குரலில் மட்டும் துடுக்குத்தனம் எங்கிருந்தோ வந்து தொற்றிக்கொண்டது. சோபாவில் அமர்ந்த சுகத்தில் என்னையும் அறியாமல் சிரித்துவிட்டேன்போலிருக்கிறது. இதற்கு மறுமொழி சொல்லப்போனால் கேள்வி-பதில் என்ற கட்டம் தாண்டி வாக்குவாதம் என்ற தரத்துக்கு அப்கிறேட் பண்ணவேண்டிவரலாம் என்பதனை அறிவேன். ஆகவே மௌனமே சிறந்த ஆயுதம்.

வேளைக்கு வீட்டுக்கு வந்தால், என்ன இன்றைக்கு வேளைக்கு வந்துவிட்டீர்களென்ற கேள்வி. தாமதமாய் வந்தால், ஏன் இன்றைக்கு இவ்வளவு நேரம் சென்றது என்ற கேள்வி. இந்தப் பெண்கள் ஆண்களைக் கேள்விகளால் துளைத்துக் காதலைத் தேடுகிறார்களோ? எல்லாவற்றுக்கும் எனது பதில் புன்சிரிப்பினால் பூசிமெளுகிய மௌனம்தான். அவளுக்கு என்மீது எள்ளளவும் சந்தேகமில்லை என்பதை அறிவேன். அத்துடன், தனது அன்பும் அதிகாரமும் இரண்டறக் கலந்த இரசாயன ஆயுதத்தை என்மீது அடிக்கடி பிரயோகிப்பதில் அவளுக்கு எல்லைகடந்த மகிழ்ச்சி என்பதும் தெரியும். எனக்கு இதனால் எள்ளளவும் பாதிப்பு இல்லை. பதிலுக்கு உள்ளுக்குள் புளுகந்தான். அவளால்தானே இன்றைக்கும் நான் உருப்படியாக இருக்கிறேன். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமாமே. சும்மாவா சொன்னார்கள்.

“சிரிப்புக்கு என்ன காரணம், சொல்லுங்கோ!” இடுப்பில் கைவைத்து அதட்டாத குறையாய் என் மனைவி என்முன்னே நின்று கோரிக்கை விடுத்தாள். கொடுப்புக்குள் கள்ளச் சிரிப்பு மறைந்திருந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை.

“நன்றாய்க் களைத்துப்போய் வந்தேனப்பா; சோபாவில் இருந்ததும் சுகமாய்க் கிடந்தது. அதனால் சிரித்தேனோ தெரியாது. அட கடவுளே! இதற்கெல்லாம் கருத்தெடுக்கலாமா?” என்று அவளைச் சமாதானப்படுத்த முயன்றேன். இவ்வளவும் போதும் அவள் என் பக்கத்தில் வந்து நெருக்கியடித்துக்கொண்டு இருப்பதற்கு. இதைத்தானே நானும் எதிர்பார்த்து வந்தேன். என் சாயரச்சைப் பூசைக்கு மணியடிக்கும் வேளையாகப் பார்த்துக் கரடி நுழைந்ததுபோல் கதவடியில் அந்தப் புதியவர் வந்து நின்றார்.

கதவடியில் யார் வந்து நின்றாலும் அதன் கண்ணாடிக்கூடாகக் கண்டுபிடித்து ஆளைக் கழுத்தில் கைவைத்துத் தள்ளாத குறையாக வழியனுப்பி வைத்துவிடுவாள் என் மனைவி. ஆனால் இன்றைக்கு இந்த வேலை என்னுடையது என்றதுபோல் தயங்கம் காட்டினாள். நானும் எழுந்துபோய்க் கதவைத் திறந்தேன்.

வாசலில் நின்றவர் ஏதோ சரித்திர நாடகத்தில் நடித்துவிட்டு விலாசம் மாறி என் வீட்டுக்கு வந்துவிட்டார்போலிருந்தது. வந்தவர் நல்ல அழகன். ஆனால் இவர் எங்களூர்ப் பெண்கள் எச்சில் ஒழுகப் பார்க்கும் தமிழ் சினிமா அழகன் அல்ல. மலையாளக் கிராமத்து ஆணழகன் என்று சொல்லலாம். ஆளின் உயரமும் அட்டகாசமான ஆளுமையும் என்னை அவருக்கு வணக்கம் போடச் செய்தன.

“எங்கே வந்தீர்கள், ஐயா? என்ன சங்கதி?” என நான் கேட்டபோது அவர் அசல் தமிழில் சொன்னார், “கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்.”

“கடவுளா? கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் பழக்கமில்லை” என்று சொல்லிக் கையை விரித்தேன்.

“நான் சொல்வது நீங்கள் நம்பும் ஒரே கடவுள், நீங்கள் இந்தப் பூவுலகில் பிறப்பதற்குக் காரணமான கடவுள்”

“ஒத்துக்கொள்கிறேன், கடவுளை நாமெல்லாரும் நம்புகிறோம், கடவுள் இல்லையென்று கூட்டத்தில் பேசுகிறவன்கூடக் கல்லெறி விழும்போது “கடவுளே!” என்றுதான் சொல்கிறான். ஆனால் இவ்வளவு காலமும் இல்லாமல் திடீரென்று என்மீது ஏன் அவருக்கு அக்கறை வந்தது?”

“நீங்கள் கொஞ்சம் முந்திக் ‘கடவுளே’ என்று கூப்பிட்டீர்களே, அதனால்தான் உங்களை விசாரிக்கும்படி என்னை அவர் அனுப்பியிருக்கிறார்.”

இதேவேளை, விடுப்புப் பிடுங்கவென்று எண்ணி எழுந்து வந்து கதவுக்கு அப்பால் எட்டிப்பார்த்த என் மனைவிக்குப் புளுகம் தாங்கவில்லை. கதவடியில் நின்ற என் காதுக்குள் புகுந்து, “ஆளைப் பார்த்தால் ஜெமினி போல இருக்கிறார். உள்ளுக்கை வரச்சொல்லுங்கோ” என்றாள். இன்றைக்கு என்னைப் பிச்சுவாங்கப்போகிறாள் என்பது எனக்கு அப்போதே விளங்கிவிட்டது.

“வெளியே இப்பவே குளிர் அடிக்கத் துவங்கிவிட்டது. உள்ளே வாருங்கள்.” என்று கூறிக் கதவை அகலத் திறந்து ஜெமினி கணேசனுக்கு வழிவிட்டேன்.

தயங்காமல் உள்ளே வந்த ஜெமினி மென்மையான - என் மனைவியைப் பொறுத்தவரை கொல்லும் - சிரிப்பால் எங்களை அரவணைத்தார். கடவுளிடமிருந்தல்லவா வந்திருக்கிறார்?

“கடவுள் அனுப்பினார் என்று சொன்னீர்களே. அப்படியானால் நீங்கள் யார்?’ என்று கேட்டேன்.

“நான் அவருடைய முகவர், பிரதிநிதி, தூதுவர், தொண்டன், இதேபோல் எந்த வகையைச் சேர்ந்தவராகவும் எடுத்துக்கொள்ளுங்கள்.” என்றார்.

கொழும்பில் வாழ்ந்த காலத்தில் சிவாஜி கணேசனைத்தான் நேரே காணமுடியாமல் போய்விட்டது. அவருக்குப் படத்தில் நாதஸ்வரம் வாசித்த சேதுராமனையாவது காணலாம் என்ற எண்ணத்துடன் நண்பர்களும் நானும் அவருடைய வாசிப்பைப் பார்க்க பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில் திருவிழாவுக்கு போனது நினைவுக்கு வந்தது. கடவுளை ஒரு நாள் மடக்கி அவரிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டுமென்று காத்திருந்த எனக்கு அவருடைய ஏஜென்டாவது வந்து மாட்டுப்பட்டாரேயென்று மனத்திருப்தியாயிருந்தது.

“கடவுள் எந்த இடத்திலும் இருப்பார், எல்லா நேரத்திலும் இருப்பார் என்று ஏதோ நேரில் கண்டதுபோல் சொல்கிறார்கள். ஆனால் அவர் தனக்குப் பதிலாக இன்றைக்கு உங்களை அனுப்பியிருக்கிறாரே.” என்று வினா எழுப்பினேன்.

“உங்களுக்குத் தெரிந்த செய்திதான், அன்பரே. இப்போது இப்பூவுலகின் கண்ணே தற்போதுள்ள மக்கட்பெருக்கம் புராண காலத்தில் இருந்ததிலும் பார்க்க ஆயிரம், இலட்சம் மடங்கு அதிகரித்துவிட்டது. இதனால் அவர்கள் ஒவ்வொருவரையும் காண அவராகவே நேரே போகமுடியாமலிருக்கிறது என்பதனால்தான் எங்களை அவர்களிடம் அனுப்புகிறார். ஆனால் அவர் உங்கள் மீது காட்டும் அன்பும் அக்கறையும் ஒருவித மாற்றமுமில்லாமல் அன்றுபோல் இன்றும் இருக்கிறது.” என்று ஒரு குட்டிப் பிரசங்கத்தை நிகழ்த்திவிட்டு இவர்கள் கைதட்டுவார்களோ என்று எதிர்பார்த்தவர்போல் எங்களைப் பார்த்தார்.

இந்த நேரம் என் மனைவி குறுக்கிட்டு, “இவர் குளிருக்குள்ளாலை வந்திருக்கிறார், என்ன குடிக்கிறியள் என்று முதல் கேளுங்கோ.” என்று எங்கள் யாழ்ப்பாண விருந்தோம்பல் முத்திரையை இறுக்கிக் குத்தினாள்.

“மிகவும் நன்றி, நான் எதுவும் குடிப்பதில்லை. நீங்கள் ஏன் அழைத்தீர்கள் என்பதைச் சொன்னால் போதும் அதைக் கடவுளிடம் சென்று முறைப்பாடு செய்வேன்” என்றார்.

“நான் கூப்பிட்டதை உடனே அறிந்த கடவுள் ஏன் கூப்பிட்டேன் என்பதை மட்டும் அறிய முடியாதவராகவா இருக்கிறார்” என்று என் மனதில் நியாயமாகவே எழுந்த கேள்வியைக் கேட்டேன்.

“ஆசிரியர் மறுமொழியைத் தெரிந்துவைத்துக்கொண்டு மாணவரைக் கேள்வி கேட்பதில்லையா? உங்கள் மனைவி உங்கள்மீது அன்பாய் இருக்கிறாள் எனத் தெரிந்துகொண்டும் அதை அவள் மூலமாக அறிய நீங்கள் அடிக்கடி ஆவல் கொள்வதில்லையா? என்று பாடமாக்கிய வசனத்தை ஒப்புவிப்பதுபோல் அழுத்தமாகச் சொன்னார், ஜெமினி.

நாங்கள் இருவரும் விசுக்கெனச் சிரித்துவிட்டோம். கடவுளிடம் நல்ல பயிற்சி எடுத்துத்தான் வந்திருக்கிறார் நமது விருந்தாளி.

“வீடுதேடி வந்தவருடன் நான் விவாதம் செய்ய விரும்பவில்லை, சுவாமி. என் வாழ்நாளில் கடவுளைக் காண ஒரு வாய்புக் கிடைக்குமானால் அவரிடம் ஒரு கேள்வி மட்டுமே கேட்கவேண்டுமென்று இத்தனை காலமும் நான் காத்திருந்தேன். அந்தக் கேள்விக்கு நீங்கள் முதலில் பதில் சொல்லுவீர்களா” என்று கூறி வந்த சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

“கேளுங்கள், அன்பரே.”

“நீங்கள் கூறும் கடவுள் என்பவர் உண்மையில் யார்? அவர் ஆணா பெண்ணா?” என்று கேட்ட என் மனதில் கடவுள் பெண்ணாயிருந்தால் எப்படி இருப்பாள் என்ற கற்பனையும் ஒரு கணத்தில் ஓடி என் மனதை இதமாக வருடியது.

நிமிர்ந்து என் கண்ணினூடே நோக்கிய தூதுவர் தீர்மானமாகச் சொன்னார், “கடவுள் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. உங்களின் கற்பனைக்கு எட்டாத மாபெரும் சக்தியையே நீங்கள் கடவுள் என அழைக்கிறீர்கள்”. என்றார்.  கையோடு கனவில் எட்டிப்பார்த்த பெண்ணுருவமும் கரைந்துபோனது.

“கடவுள் சக்தியேயுருவாக இருக்கிறாரென்றால் அவர் எப்படி மனிதர் போல் தோன்றும் உங்களை இங்கே அனுப்பியிருக்கமுடியும்?”

“இதுவும் உங்களைப் போன்ற மனிதப் பிறவியின் அறிவுக்கு எட்டாத இரகசியங்களில் ஒன்று, அன்பனே!”

“உண்மையாயிருக்கலாம், சுவாமி. ஆளப்படுகிறவன் முட்டாளாயிருக்கும்வரை ஆள்கிறவனின் ஆட்டத்தைக் கேட்க ஆட்களிருக்கமாட்டார்கள்.  என்றாலும் என் அறிவுக்குச் சரியெனப் பட்டதைக் கேட்கிறேன், ஆணாகவோ பெண்ணாகவோ இல்லாத கடவுள் ஆணுக்கு மட்டுமேன் பெண்ணிலும் பார்க்கக் கூடிய அதிகாரங்களை வழங்கினார்?”

“ஆணுக்குக்குத்தான் கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட்டன என்று சொல்வதிலும் பார்க்க ஆண் அதிகாரங்களைப் பெண்ணிடமிருந்து பறித்துக்கொண்டான் என்பதுதான் சரியானது.” என்று கூறிய தூதுவர் கையோடு என் மனைவியின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள விரும்பியவர்போல திடீரென நம்மூர் அரசியல்வாதியாக மாறி அவள்மீது அனுதாபப் பார்வையை வீசினார்.

இவர் சொல்வதெல்லாம் நம்பும்படியாகவும் இருந்தது நம்ப முடியாதது போலவும் இருந்தது. ஆனால் என் மனைவி என்ன நினைக்கிறாள் என அறியும் நோக்கில் அவள் பக்கம் திரும்பியபோது ஜெமினி கணேசனை அவள் திருநெல்வேலி அல்வாவாக நினைத்துக்கொண்டிருந்தாள் என்பது அப்படியே விளங்கியது.

“இதை இன்னொருவகையில் சொல்கிறேன். பெண்ணின் அதிகாரம் பறிபோவதைக் கடவுள் தெரிந்துகொண்டே அனுமதித்திருந்ததால் அவர் தன் படைப்புத் தொழிலில் பாரதூரமான பிழை விட்டாரென்பதை ஒப்புக்கொள்கிறீர்களா இல்லையா?”

“யார்தான் பிழை விடாமலிருக்கிறார்கள்?” எனக் கூறிய தூதுவர் கைகளை விரித்தபடி கூரையை நோக்கினார்.

"மனிதர்கள்தான் பொறுப்பிலிருந்து தப்பிக்கொள்கிறார்களென்றால் கடவுளும் மனிதரைப்போல் தப்பிக்கொள்ளப் பார்க்கிறாரே.”

“படைப்பில் பிழை ஏற்படின் அதைத் திருத்துவது மட்டுமல்ல அதிலிருந்து தப்பித்துக்கொள்வதும் படைப்பவனுக்குத் தெரிந்திருக்கவேண்டிய உபாயம்.”

“போகட்டும், கடவுள் விட்ட பிழை எப்போது திருத்தப்படும் என்கிறீர்கள்?”

“அந்தப் பிழை கடந்த பல யுகங்களாகத் திருத்தப்பட்டு வருகிறது. அதுதான் இன்றைய உலகத்தில் பார்க்கிறோமே! பெண்கள் தமக்குரிய அதிகாரங்களைப் படிப்படியாகத் திருப்பிப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் அல்லது ஆண்களிடமிருந்து கெட்டித்தனமாகப் பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.” இவர் என்ன காதல் மன்னனா அல்லது புன்னகை மன்னனா?  சொல்லையும் கைவிடாமல் சிரிப்பையும் கைவிடாமல் எப்படி இவரால் பேச முடிகிறது? என்றாலும் இவரை வாதத்தில் வெற்றியடைய விடக்கூடாது என்பதில் நான் தீர்க்கமாயிருந்தேன்.

“ஆண்களாகிய நாமே பெண்களின் உரிமைகளைத் திருப்பிக்கொடுக்கிறோம்; அதில் பெருமையும் அடைகிறோம். கடவுள் செய்த பிழையை மனிதன் திருத்துக்கின்ற யுகம் இது. பெண்கள் ஆண்களுடன் சம உரிமையுடன் வாழவேண்டுமென்று கடவுள் அன்றே எண்ணித் தன் படைப்புத் தொழிலைச் செய்திருந்தால் அவர் படைத்த இந்த உலகம் என்றோ உன்னதமான பூமியாக உருவாகியிருக்கும். கடவுளுக்கு இனி இங்கே இடமில்லை என்ற சூழ்நிலையை உண்டாக்கியதே கடவுள்தான், ஐயா. அவரின் படைப்புத் தொழிலை மட்டுமல்ல. அழிப்பைத் தொழிலையும் நாமே வெற்றிகரமாய்ச் இங்கே ஒழுங்காகச் செய்துகொண்டிருக்கிறோமே. இனி ஏன் நாம் அவரை அழைக்கப்போகிறோம்?”

அடுத்த கணம் வந்திருந்த விருந்தாளி வந்ததுபோலவே மாயமாய் மறைந்து போனார். திகைத்துப்போன நாம் சில விநாடிகள் செயவதறியாது நின்றோம்.

“அட கடவுளே, வந்தவரிடம் ஒரு வரம் கேட்டிருக்கலாமே. ஆளைக் கண்டதும் அதை மட்டும் மறந்துபோனோம்.” என்று அங்கலாய்த்தாள் என் மனைவி.

“வேண்டாம், கடவுளை இன்னொருமுறை அழைக்க வேண்டாம். வரம் கொடுக்கும் வல்லமை அவரிடம் எப்போதோ வற்றிப்போய்விட்டது. காரணம் என்னவென்றால் மனிதர்கள் அவரை அழைப்பதில் அர்த்தம் எதுவுமில்லை என்பதை அவரே உணர ஆரம்பித்துவிட்டார்.”

வந்தவரைக் காணவில்லை ஆனால் அவர் விட்டுப்போன வாசனை மட்டுமே வீட்டினுள் எஞ்சியிருந்தது. என் மனதில் மட்டும் ஏதோ ஒருவகையான சூனியம் படர்ந்தது போன்ற உணர்வு மேலிட்டது. பக்கத்தில் நெருங்கிவந்து நின்ற மனைவி என் கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்துவிட்டு ஆதரவுடன் என்னை அணைத்தாள். அவளின் தோழில் என் தலையைச் சாய்த்தபோது என் மனம் ஏனோ கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தது.
----