Friday, December 28, 2012

சிறைச்சாலைச் செம்பருத்திகள்



அறிவும் இளமையும்
இனிமையும் இலட்சியமும்
இணைந்ததோரு
உலகம் உண்டென்றால்
மாணவர்களே!
உங்கள் இதயம்தான்
அது உலவும் அண்டவெளி!

நீங்கள் -
புத்தகங்களைச் சுமக்கும்
பார வண்டிகள் அல்லர்
பகுத்தறிவுப் பூங்காவில் மலர்ந்த
பாரிஜாதப் பூக்கள்.

நான் துள்ளித் திரிந்த காலத்தைத்
திரும்பிப் பார்க்க வைப்பவர்களே
பல்கலைக் கழகப்
படிக்கட்டுகளைப் பாய்ந்தேறுங்கள்
சட்டக் கல்லூரிச்
சறுக்கு மரங்களில்
சந்தனம் பூசுங்கள்!

அவசர உலகத்தின் பிரதிநிதிகளே,
ஆயுள் முழுவதும் கற்றாலும்
இளமைக்காலக் கல்விக்கு
இணையேதுமில்லை!

நீங்களோர் அதிசயம் மட்டுமல்ல
அரச இயந்திரத்தின்
அச்சாணிகளை உடைக்கும்
உந்து சக்திகள்!

சுதந்திரமடைந்த நாடுகள்
உங்கள் பங்கைச்
சொல்ல மறந்திருக்கலாம்
ஆனால்
அவற்றின் எழுச்சியின்
அத்திவாரமே நீங்கள்தான்,

நீங்கள் இணைந்திருக்கும்வரை
அரசியலார் ஆயுதங்கள்
இன, மொழி, மதம் எதுவும்
உங்களை
இடற வைக்கப்போவதில்லை!

அறிவுதான் உங்கள் இனம்
ஆற்றல்தான் உங்கள் மொழி
எழிச்சிதான் உங்கள் மதம்!

--- 0 ---

அன்று மொழி அழிப்பு
நேற்று இன அழிப்பு
இன்று அறிவழிப்பு!

அடக்குமுறையிலும் அராஜகத்திலும்
ஊறிப்போன அரசியலார்
தங்கள் சவப்பெட்டிக்குத்
தாங்களே ஆணி அடிக்கின்றார்!

மானிடத்தை மதிக்காத
மடையர்கள்
இராணுவ அரணிருந்தும்
உறங்க மறந்தார்கள்.

இனத்துவேஷ நெருப்பில்
குளிர் காயும் அரசியலார்
பிரித்தாளும் பனிமழையில்
புழுக்கம் போக்கப் பார்க்கின்றார்.

வெள்ளத்தின் மத்தியில்
நாவற்றி நிற்கிறார் நாடாள்வோர்
சொல்லுங்கள் மந்திரத்தை,
சிறைச்சாலைக் கதவுகள்
சுக்குநூறாகட்டும்!

மாணவர் உலகம்
எல்லையற்றது
மதக் கோட்பாடுகளால்
மாசுபடாதது
மொழி வேறுபாடுகளால்
வழி தடுமாறாதது
இனப் பாகுபாடுகளால்
இடர்ப் படாதது!

சிறைச்சாலைச் சுவர்களில்
புறநானூறு பாடுங்கள்!
கொழும்பில் ஆள்பவர்களின்
கொழுப்பை அடக்குங்கள்!

நீங்கள் -
காலியிலிருந்து
காங்கேசன்துறை வரை
புத்தளத்திலிருந்து
பொத்துவில் வரை
அறிவுப் பட்டறைகளில்
அடிவாங்கும் உலோகங்கள்!

ஆகவே -
தெரிந்து கொள்ளுங்கள்,
தென் திசைத் தோழர்கள்
தோள் கொடுப்பர் நிச்சயமாய்!
வெல்லுங்கள் அவர் நெஞ்சங்களை,
சொல்லுங்கள் நாமிதோ
சேர்ந்துவிட்டோமென்று!


21 – 12 – 2012



ருபத்தியோராம் திகதி!
இரயில் நிலையம்
ஒளியில் திளைக்கிறது.
கூட்டத்தில் ஒருவனாய் நான்...

விறைத்துப்போன மேனி,
உறைந்துபோன குருதி,
பழகிப்போன காலை!
எல்லாமாய் நூறு பேர்,
கூட்டத்தில் ஒருவனாய் நான்...

உத்தியோகத்து எருமை மாடுகள்,
பல்கலைக் கழகப் பைத்தியங்கள்,
பங்குக் கம்பெனி பண முதலைகள்,
பள்ளிக்கூடத்துப் பயம் அறியாததுகள்...
இப்போது
என்னோடு இருநூறு பேர்.
கூட்டத்தில் ஒருவனாய் நான்...

பயணிகள் முகங்களில்
பயம் கலந்த புன்னகை
நன்றாய்த் தெரியும் இவர்கள்
குளிரால் நடுங்கவில்லை!

இரயில் நிலையம்
வழக்கம்போல்
ஒளியில் திளைக்கிறது.
இருபத்தோராம் திகதி பற்றி
எதுவுமே அறியாதமாதிரி!
கூட்டத்தில் ஒருவனாய் நான்...

தூரத்தில் –
ரயிலொன்று வருகிறது
விளக்கில் நம்பிக்கை
வேகத்தில் உறுதி.

வந்த ரயில்
வழுக்கியபடி நிற்கிறது.
வந்திருந்த கூட்டமெல்லாம்
ஒழுங்காய் அமைதியாய்
இடிபடாமல் ஏறுகிறது.
இரண்டு நிமிடங்களில்
இந்த நாளை நோக்கிப்
பயணிக்கிறது!

இப்போது
எல்லாரும் சிரிக்கிறார்கள்!
இந்த நாள்
எவ்வளவு இனிமையானது!

மனிதன்
காலண்டரைக் கண்டுபிடித்தது
காலத்தைக் கணக்கிடத்தான்.
காலண்டர் மனிதரின்
காலனாக வருவதற்கல்ல!

தசாவதாரம்





முட்டாள்கள் வெளியிட்ட
கவிதைத் தொகுப்புக்கு
முகவுரை எழுதியவன் நான்.

காணாமற் போனோர் சங்கத்தைக்
கட்டி எழுப்பியவனும் நான்தான்.

காற்றுக்கும் மழைக்கும்
பிறந்தவன் நான் ஆதலால்
அடக்கமாய் இருக்கும்போதுதான்
அழகாய் இருக்கிறேன்.

இறந்தவர் பட்டியலில்
என் பெயரைக் காணலாம்
வாக்காளர் பட்டியலிலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

முகாம் மாகாணத்தில்
பாழ்ப்பாணம் என்
பிறந்த இடம்.

பட்டினி இருப்பதுதான்
என் பொழுதுபோக்கு
பாடையில் கிடக்கும்போதும்
பாடிக் கொண்டிருப்பேன்.

பல்கலைக்கழகம் போகாமலே
பட்டங்கள் எடுத்தவன் நான்.
மிருகங்களின் பெயர்களைத்தான்
முதற்பெயராய்க் கொண்டவன் நான் .

அலுகோசுகள்* சங்கத்தின்
ஆயுட்கால உறுப்பினன் நான்
சுருக்குப்போடும் காரியத்தைச்
சனாதிபதி திருடிவிட்டான்.

பத்துத் தடவைகள்
இரத்தம் கொடுத்திருக்கிறேன்
இரண்டு முறைகள் மட்டும்
இருதய தானம் செய்திருக்கிறேன்.

மூன்றாம் மாடியிலிருந்து
முட்டி விழுத்தினார்கள்
மூன்றாம் நாளே
எழுந்து வந்துவிட்டேன்.

வெலிக்கடை வேலியில்
வெட்டிக் காயப் போட்டார்கள்
விடுதலைக்கு முன்
வீட்டுக்கு வந்துவிட்டேன்.

முகாமுக்குள் வைத்து
மூச்சுத் திணற நெரித்து
மாண்ட என் உடலை
மதவுக்குள் எறிந்தார்கள்
விடியற் காலை வேளை
வழக்கம்போல் எழுந்துவிட்டேன்.

தெருவில் நிற்கிற
தேசிய உணர்வைத்
திண்ணைக்கு வரவழைப்பேன்.

ஆயுத்தை எறிந்துவிட்டு
அன்பை எடுத்துக்கொள்வேன்
ஐநாவை அழைப்பதைவிட்டு
அயலவரை அழைத்திடுவேன்.

மக்களாட்சி மலரும்வரை நான்
மரணிக்கப் போவதில்லை!


*அலுகோசு:- சிறையில் மரணதண்டனைக் கைதிகளைத் தூக்குப்போடுபவர்.

Sunday, December 16, 2012

சிறந்தது கேட்கின்..



வாழும் நாடுகளில் – உன்னை
வாழவிடும் நாடுதான்
சிறந்த நாடு.

பேசும் மொழிகளில் – உன்னைப்
பண்படுத்தும் மொழிதான்
சிறந்த மொழி.

பாடும் பாடல்களில் – உனது
பாலர் வகுப்புப் பாடல்தான்
சிறந்த பாடல்.

பேசவந்த வார்த்தைகளில் – நீங்கள்
பேசாத வார்த்தைதான்
சிறந்த வார்த்தை.

கூடும் கூட்டங்களில் – உங்களில்
குறை காணாத கூட்டம்தான்
சிறந்த கூட்டம்.

நாடும் நண்பர்களில் – உங்களிடம்
நல்லவற்றைக் காண்பவர்தான்
சிறந்த நண்பர்.

செய்யும் தொழில்களில் – நீங்கள்
சேவையெனக் காண்பதுதான்
சிறந்த தொழில்.

செல்லும் பாதைகளில் – நீங்கள்
சேரிடம் அறிந்த பாதைதான்
சிறந்த பாதை.

உண்ணும் உணவுகளில் – உனக்கு
அளவான உணவுதான்
சிறந்த உணவு.

வாழ்க்கைத் துணைகளில் – உங்கள்
வலது கையாய் இருப்பவர்தான்
சிறந்த துணை.

Thursday, December 13, 2012

விடுங்கோ ஆரோ வருகினம்!



விடுங்கோ ஆரோ வருகினம் – அங்கை
வேலிக்குப் பின்னாலை நிக்கினம்.

அருக்குக் காட்டாதை சும்மா – உன்னிலை
ஆசையில்லாமலே வந்தனான்.
வேலிக்கு அங்காலை ஒருதருமில்லை
வீணாய்ப் பயந்து சாகாதை.

உண்மையில் என்னிலை அன்பிருந்தால் – ஏன்
இரவிலை மட்டும் வாறியளாம் – ஒருக்கால்
பகலிலை வந்து பாருங்கோ
பல ஆக்கள் அறியக் கதையுங்கோ!

உனக்கு அம்மா அப்பா அண்ணன்மார்
அடுத்த வீட்டிலை பெரியம்மா
இஞ்சாலை பாத்தால் கிணத்தடிதான்
எங்கை பாத்தாலும் ஆக்களெல்லோ!

ஒருக்கால் வந்தால் ஊரெல்லாம்
எங்களைப் பற்றியே கதை கட்டும்
இதுக்கெல்லாம் பயந்துதான் யோசிக்கிறன்
உன்னை வந்து காணப் பயப்பிடுறன்.

எனக்கும் உங்களிலை ஆசையெண்டு
இனைக்காமல் பேய்க்கதை கதைக்கிறியள்
அண்டைக்கு என்னைத் தொட்டதோடை
இனியொரு மனிசனைப் பாக்கமாட்டன்.

எப்ப பாத்தாலும் இழுக்கிறதும்
இடுப்பிலை கையை வைக்கிறதும்
இதுதான் உங்கடை விருப்பமெண்டால்
இப்பவே சொல்லுங்கோ நான் போறன்.

ஊருக்குப் பயந்தால் உங்களுக்கு
என்னட்டை வரவே உரிமையில்லை
ஆருக்கு விடுறியள் விடுகையெல்லாம்
உங்கடை ஆக்களைப் பற்றி நானறிவன்

ஓமெண்டு இப்பவே சொல்லுங்கோ
உங்களைக் காண இனி வருவன் – என்னைக்
களியாணம் கட்டினால் மட்டும்தான் – என்னிலை
கைவைக்க விடுவன் கண்டியளோ!

கோவிக்காதை என்ரை குஞ்சு
கட்டாயம் வருவன் நாள் பாத்து
வேலையில் உன்ரை நினைவாலை
விசராய்ப் போனன் தெரியுமோடி?

நீ பாக்கிற பார்வை ஒண்டுதான் – என்னைப்
பைத்தியமாக அலைக்குதடி
பாக்கிற படங்கள் சினேகிதங்கள்
பேசுற கதையள் திருவிழாக்கள்
படுக்கிற நேரம் நினைத்தனெண்டால்
பாய்ஞ்சுவர மனம் துடிக்குதடி.

கையைத் தொடவே கோவிக்கிறை - உன்னைக்
கன்னியாகத்தான் கை பிடிப்பன்
கழுத்திலை தாலி கட்டுவன் பார்
கலங்காதையடி காத்திரடி!

யாரடியம்மா ராசாவே?



யாரடியம்மா ராசாவே?

நான்தானம்மா ராசாவே!
உன் வீட்டில் நடந்த சங்கதி என்ன?

என் கணவனை இன்னும் காணவில்லை!

எங்கே சென்றான் உன் கணவன்?

இராத்திரி என்னோடு தானிருந்தான்
காலையில் பார்த்தேன் காணவில்லை.

காலையில் தொலைந்தான் கணவனென்றால்
மாலை வரைக்கும் என் செய்தாய்?

ஆராய்ச்சி மணிதான் வாசலிலே – இழுத்து
அடிக்கக் கயிறு எதுவுமில்லை.
மாலை வரைக்கும் காத்திருந்தென் – உன்
மாளிகைக் கதவு திறக்கும்வரை.

இரவு வந்த உன் காவலர்கள் - அவனை
இட்டுச் சென்றனர் கையுடனே.
எங்கே உள்ளான் என் கணவன்
ஒழிக்காது சொல்வாய் என் அரசே!

காவலர் கூட்டிச் சென்றாரென்றால்
காரணத்துடனே செய்திருப்பர்.

காரணம் என்ன என்றுரைப்பாய் – என்
கணவனைக் காணாது வீடு செல்லேன்!

அடாவடித் தனமாய்ப் பேசாதே – என்
அத்தாணி மண்டபம் உன் திண்ணையல்ல.
உன் கணவன் செய்தது கடுங்குற்றம்
குற்றத்தின் தண்டனை சிரச்சேதம்.
ஆரசுக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தான்
அவனே தனக்குக் கூற்றானான்.

எங்கே உந்தன் நீதிமன்றம்
எங்கே சென்றனர் அறிவுடையோர்
விசாரணை இன்றிக் கொன்றவனே – நீ
கொற்றவன் அல்ல, கொலைகாரன்!

கண்ணகி வம்சம் நீயானால் – உன்
கனக முலையைப் அறுத்தெறிவாய் – என்
நகரமும் நானும் அழிந்தொழிவோம் - என
நன்றாய்க் கனவு காண்பாயே!

முலைகளை என்றோ இழந்தவள் நான்
மூர்க்கரின் கைகளில் மாண்டவள் நான் – என்
கற்பினைக் காக்க முடியாமல் - உன்
காமுகர் கூட்டத்தால் அழிந்தவள் நான்.

நீதி அறியா மன்னவனே – உன்
நாட்டினில் நெறிமுறை அழிந்தது காண்!
வீட்டினை இழந்தவர் எத்தனை பேர்
வீதியில் திரிபவர் எத்தனை பேர்
எத்தனை பெண்கள் கற்பிழந்தார்
எத்தனை கணவர் உயிரிழந்தார்
எத்தனை இளைஞர் தலை மறைந்தார்
எத்துணை வேதனை நீ இழைத்தாய்!
அறிவாய் மன்னா அரசு பிழைத்தாய்
அறமே உனக்குக் கூற்றாகும்!

*****************

யாரடியம்மா ராசாவே?
யாரடியம்மா ராசாவே?

யாரது வாசலில் நிற்பதுவோ?

அரசனைத் தேடி வந்தவன் நான்

அரசன் இரவு இங்கிருந்தான் – இன்று
இரத்தம் கக்கிச் செத்தொழிந்தான்!      

காரியக்காரி!



குளிக்கிறாய் - ஆனால்
மஞ்சளுக்குப் பதிலாய் – என்
கவிதையைப் பூசுகிறாய்
மேனி மினுங்கட்டுமென்று!

குளித்ததும் கவிதையைச்
சுற்றிக்கொள்கிறாய்
உன் மேனியில்
சுகம் ஊறட்டுமென்று!

என் கவிதைதான் – உனக்குக்
காலைச் சாப்பாடு
உடம்பும் உள்ளமும்
இளமையாய் இருக்கட்டுமென்று!

வேலைக்குப் போகிறாய்
கதிரைக்குப் பதிலாய்
கவிதையில் சாய்கிறாய்
கட்டி அணைக்கட்டுமென்று!

மாலையில் வருகிறாய்
வழியில் பூச்சரம்
வாரிக் கொள்கிறாய்
வருவேன் மடியிலிருப்பேனென்று!

அம்மா மெத்தப் பசிக்கிறதே!


ம்மா மெத்தப் பசிக்கிறதே
அப்பம் இருந்தால் இப்போ தா
அப்பம் இன்றேல் முத்தம் தா
அதுவே எனக்குப் போதுமம்மா!

ண்ணீர் இருந்தால் தாருமம்மா
தாகம் உடனே தீருமம்மா
தலையைக் கோதி விட்டுவிடும்
தயவாய் என்முகம் திருத்திவிடும்.

ள்ளிக்குப் போகும் நேரமிது
பாலர்கள் போவார் பாதையிலே
புத்தகம் பென்சில் நானெடுப்பேன்
பக்கத்தில் இருந்தே படித்திடுவேன்.

வானமே எங்கள் கூரையம்மா
வெண்மணலே எங்கள் கம்பளமாம்
வேலிக்கு வெளியே வேறுலகம்
வேதனை என்பதே நம்முலகம்.

ருட்டினில் வாழ்ந்தே பழகிவிட்டோம்
இருப்பதை உண்டே பசி தீர்ந்தோம்
நாளும் ஒருநாள் விடியுமம்மா
நாங்களும் மனிதர் ஆவோமம்மா! 

எனைப் பிரிந்து சென்றவளே..3


டியில் தலை வைத்தால்
முடிகோதி இமைகோதி
முத்த மழை பெய்து
முகமெல்லாம் நனைத்திடுவாய்.

கடற்கரையில் கடலை வாங்கக்
காசில்லை என்றதற்கு
கழுத்துச் சங்கிலியைக் கழற்றித்
தந்தவளே நீதானே!

காசில்லாதவனென்று
கணக்கிலேடுக்க மறுத்தாரே – நீ
காணாமற்போன பின்னால்
காசெல்லாம் குவிந்தது
உன் படம் அதில்
இல்லாமல் போனதால்
செல்லாமல் போனது.

இரணைமடுக் குளத்தில்
சுழிகள் மட்டுந்தான்
உன் வீட்டிலோ
சுழிகளோடு முதலைகளும்.

கதவைத் திறந்து வந்தவனைக்
கண்டதுண்டமாய் வெட்டி
கோடிப்புறம் புதைத்தார்கள் – என்
கண்கள் மட்டும் எப்படியோ தப்பி – உன்
கட்டிலின்கீழ் ஒழித்துக்கொண்டன.

கீரிமலைக் கடலோரம்
கைகோர்த்து நிற்கையிலே
சூனாமி எங்கே
சூல் கலைந்தா போயிற்று?

குறிஞ்சிக் குமரனிடம்
கால் நோக நடக்கையிலே
குன்றின் மேலிருந்து
குதிக்காமலேன் வந்தோம்?

ஒரு அதிகாலை விமானத்தில்
ஏறிச்சென்றதை அறிவேன்
ஒருகோடி மைலுக்கப்பால் நீ
ஒழிந்து கொண்டதை அறியேன்.

நீயேறிய விமானம் – என்
நினைவுகளின் பாரத்தால்
நிமிர்ந்தேழவே மறுத்திருக்கும்
நீ நடந்த பாதையில்
நீர்கோர்த்த புற்றரை
நெஞ்சார அழுதிருக்கும்

சந்திரனில் இருப்பாயானால்
சத்தியமாய் வந்து சேர்வேன்
சொந்தங்களின் காவலென்றால்
சோர்ந்து நடைப் பிணமாவேன்!