Thursday, November 29, 2012

Laptop



இன்று எல்லார் மடியிலும் Laptop
என் மடியிலும் ஒன்று.

நிறை குறையக் குறைய Laptop
விலையும் கூடுமாமே!

விலை கூடக் கூட Laptop
வேலைப்பாடும் கூடுமாமே!

திறக்கத் திறக்க Laptop
தென்றல் தழுவுமாமே!

முகத்தை நிமிர்த்தினால் Laptop
முத்தம் கொடுக்குமாமே!

பழகப் பழக Laptop
பைத்தியம் பிடிக்குமாமே!

தொடத் தொட Laptop
தொல்லையும் கூடுமாமே!

நேரம் போகப் போக Laptop
நெஞ்சோடு சேருமாமே!

கையை வைத்தால் Laptop
கட்டி அணைக்குமாமே!

மெல்லத் தூக்கினால் Laptop
மேனி மணக்குமாமே!

சில நிமிடம் பிந்தினால் Laptop
செல்லமாய் முறைக்குமாமே!

விரல்களை ஓடவிட்டால் Laptop
விடுக்கெனக் கடிக்குமாமே!

கையை வைத்தால் Laptop
கட்டி அணைக்குமாமே!

அனுபவம் அறிய Laptop
அத்தனையும் செய்யுமாமே!

விழித்து எழுந்தால் விரலுக்குள் Laptop
குளிக்கப் போனால் கிணற்றடியில் Laptop

காலையில் வெளிக்கிட கையுக்குள் Laptop
சாப்பிட இருந்தால் மேசையில் Laptop

வேலைக்குப் போனால் நினைவில் Laptop
வழியில் வரும்போது செல்போனில் Laptop

வீட்டுக்கு வந்தால் வாசலில் Laptop
படுக்கப் போனால் பக்கத்தில் Laptop

நித்திரையிலும் இழுக்கும் இரக்கமில்லா Laptop
கனவினில் மறவாமல் வருவதும் Laptop

எல்லார் மடியிலும் எலெக்ரானிக் Laptop
என் மடியிலுள்ளது உயிருள்ள Laptop.





Friday, November 23, 2012

என்னவளே!





இங்கேயோர் அற்புதம்
இன்று நிகழ்ந்தது
இவள் சிரித்ததைக் கண்டதும்
சூரியன் மறைந்துபோனான்.

இவள் நிமிர்ந்து என்னைப்
பார்த்ததைக் கண்டதும் முழுமதி
முகில்களை அள்ளி
மூடிக்கொண்டாள்.

மறைத்துக் கொண்டவை
மலர்க் கதவுகள்தானே
திறந்துகொள்ள நான்
தென்றலை அனுப்புவேனே!

முதன்முறை உனை நான்
தொட்டபோதேன் மௌனமாயிருந்தாய்
அன்றே எனது முகத்தில்
ஓங்கி அடித்திருந்தால்
இவ்வளவுக்கு நான் கெட்டிருக்கமாட்டேன்.

முதன் முறை உன்
காதலைக் கேட்டபோது
அன்றே ஆமென்று சொல்லியிருந்தால்
இன்றைக்கு நான் எவ்வளவோ
நல்லவனாய் வந்திருப்பேன்.

தடக்கி விழுவதிலும்
ஒரு சுகமுண்டு, அன்பே
தடக்குவது உன் முந்தானை
விழுவது உன் மடியின்மீதென்றால்.

வட்டக் கழுத்தைவிட்டு
எட்டிப் பார்க்குமோவென்று
ஒவ்வொரு சொல்லின் நடுவிலும்
இழுத்து விடுவாயே சேலையை!
எத்தனையாம் ஆண்டில்
இருக்கிறாய் எனக் கேட்டால்
இல்லாத கோபமெல்லாம்
காட்டி முறைப்பாய்.

என் பெயரை இவ்வளவு
அழகாக உச்சரிக்க
எங்கே நீ கற்றுக்கொண்டாய்?
உலகம் முழுவதும்
அழகர்கள் மலிந்திருக்க
என்மீதேன் பற்றுக்கொண்டாய்?

நீ சங்கீதம் படிக்கிறாயாம்
நீ வாழும் தெருவில்
வீடுகளெல்லாம் விலையேறிப்போனது
ஏனென்று இப்போது விளங்குகிறது.

ஐஸ்கிரீமைக் கண்டுபிடித்தபோது
நீ பிறந்திருந்தால் அதற்கு
உன்பெயரை வைத்திருப்பார்கள்.

பெற்றார் ஆசிரியர் சங்கத்தில்
உன்பெயரைப் பதிவுசெய்தேன்
பிள்ளையின் பெயர் கேட்டார்கள்
என்பெயரைக் கொடுத்துவிட்டேன்.

ஒருகோடு மட்டுமே கீறி
ஓவியமாக்கு என்றேன்
இரு நுனிகளையும் இணைத்து
இதயம் ஆக்கிவிட்டாய்.

இடுப்பில் மட்டும்
ஒரு ஏக்கர் தோட்டம்
பசளை கூடியதால்
பூத்துச் சொரிகிறது.

வயிற்று மேட்டில்
வழுக்கிவிழும் வியர்வை முத்து
தொடுத்து மாலையாக்க
தேவதை என்னை விட்டால்தானே!

வயிற்று மேட்டை வாடைக்கெடுத்து
ஆப்பிள் தோட்டம் போடலாமென்றால்
எக்கச்சக்கமாய் வாடகை கேட்கிறாள்.


தமிழ் வழி


ள்ளுவன் சொன்னதெல்லாம்
வழக்கொழிந்து போயிற்று
வடிவேலு சொன்னதுதான்
வரலாற்றில் ஏறிற்று
விரைவில் தமிழ் இனிச் சாகும்!

தோடுடைய செவியன்தெரிந்தவர்கள் எத்தனைபேர்
வை திஸ் கொலைவெறி டிவாய்முணுப்போர் எத்தனைபேர்
ஆறுமுக நாவலரை அறிந்தவர்கள் எத்தனைபேர்
ஆயுத எழுத்தைஅறியாதோர் எத்தனைபேர்?

நீறு பூத்த நெருப்பு




நீறு பூத்த நெருப்பு

பாலைவனத்தின்
பகல் வெப்பத்தை
உணர்ந்ததுண்டா
பாடல்களில்
ஒப்பாரி மட்டுமே
பாடுவோரைக் கண்டதுண்டா?

றோடும் அழகை
இரசித்திருப்பாய் நீ
குருதி ஓடிய ஆறைக்
கண்டிருப்பாயா?

சுதந்திரம் அற்றவர்க்கு
வாசல் கதவு எதற்கு?
செல்லுமிடம் அற்றவர்க்கு
சுதந்திரம் எதற்கு?

ன்று
சுதந்திரம் கேட்டவனைக்
கொன்றவன் குற்றவாளி,
நாளை
கொன்றவனைக் கொன்றவன்
குற்றவாளி!

ஸ்ரேலுக்கு மட்டுமே சொரியும்
ஐநாவின் விந்து அதில்
இலங்கைக்கும் கொஞ்சம்
சுவறுவது முண்டு.

காடையர் அரசு
குதூகலிக்கிறது
கோத்தபாயாவின்
சால்வைத் தலைப்பில்
கைதுடைப்பாளாம் கிலாரி!

ரிகிற நாட்டில்
பிடுங்குகிறது இந்தியா அது
இலங்கையில் செய்வது
வியாபாரம் அல்ல
விபச்சாரம்!

ன்மோகன் சிங்க் தன்
மூளையில் முளைக்கும்
முட்களை மறைக்கவா
மூடிக் கட்டுகிறார்?

ஞ்சகச் சிரிப்பை
மறைக்கலாமென்றா
தாடி வளர்க்கிறார் இந்த
சிங்க் போலச்
சீக்கியர் எவரும்
சீர்கெட்டுப் போனதில்லை!

சீனாக்காரன் சங்கதி
தெரிந்த விஷயம்தானே!
தண்டவாளம் போடவந்தால்
திரும்பிப் போகமாட்டான்
தெருவைக் கட்டவந்தால்
தெருவையே வாங்கிவிடுவான்.

சீனாவில் வீட்டுக்கொரு எஞ்சினியர்
எங்களுக்கு வீடென்பதே கிடையாது!

புரிந்துகொள்,
பெற்றோல் இல்லாத
நாட்டின் சார்பில்
போர் தொடுக்காது அமெரிக்கா எனவே
புட்டிசம் போடுவதில்
பயனில்லை நண்பா!

ட்டாவாவும் வாஷிங்டனும்
ஒன்றென்று அறிந்துகொள்
இஸ்ரேலின் கைப்பொம்மைகள்
இவைகளேன்று தெரிந்துகொள்!

பாமாவின் நாக்கேன் கறுத்துப்போயிருக்கிறது
இஸ்ரேலியரின் பூட்சுகளை நக்குவதாயிருக்கலாம்.

ப்கானிஸ்தானில் குழந்தைகள்
அன்னையின் தாலாட்டுக்குப் பதில்
துப்பாக்கி வெடிகளைக் கேட்டே
தூங்கப் பழகிக்கொண்டார்கள்.



என் தங்கை



ங்கையென்றால் எனக்குத்
தாளாத அன்பு கேளீர்!
தம்பிமார் தோள்களென்றால்
தங்கைமார் துணிவு அன்றோ!

என்தங்கை என்னைப் போல்
இருப்பாளென் றெண்ணாதீர்
அம்மாவைப் போல் மிகவும்
அழகாகத் தானிருப்பாள்.

அம்மா தன் அழகையெல்லாம்
அவளுக்கே எழுதிவைத்து
நாளெல்லாம் மிளகாய் சுற்றி
நாவூறு தீர்த்து வைப்பாள்.

கண்ணுக்கு மை வேண்டாம்
கழுத்துக்கு நகையும் வேண்டாம்.
காதிலுள்ள குச்சுவொன்றே
காணும் இவள் அழகுக்கு.

கோயில் மதிலிடுக்கில்
குடியிருக்கும் வெள்ளைப் புறா.
குத்து விளக்கின் மேல்
குவிந்திருக்கும் செம்பருத்தி.

தையல் பெட்டிக்குள்
தினமிருக்கும் நெல்லிக் காய்
பாடப் புத்தகத்துள்
புன்னகைக்கும் மயில் இறகு.

தேனில் குழைத் தெடுத்தும்
திகட்டாத தெம்மாங்கு
வானை விட்டிறங்கி
வளைய வரும் வெண்ணிலவு.

அள்ளி முடித்த கூந்தலில்
அரங்கேறும் கனகாம்பரம்
கதிரவனை வரவேற்கக்
காத்திருக்கும் மாக் கோலம்.

வளையல்கள் ஒதுங்கி நின்று
வாய்விட்டு நகையெழுப்பும்
விரல் யாவும் மருதாணி
விருந்தாடித் திளைத்திருக்கும்.

பாவாடை தாவணியில்
பவனி வரும் மகாராணி
செல்லும் இடமெல்லாம்
சிம்மாசனம் சேர்ந்து வரும்.

அப்பாவின் அதி காரமெல்லாம்
அலுவலகத்தோடு மட்டும்
அம்மாவின் அரசாட்சி
அடுக்களையோடு நின்று விடும்.

என்தங்கை ராச்சியமோ
ஊரெல்லாம் தூள் பறக்கும்
கோயிலுக்குப் போக வர
கொடிபிடித்து முன் செல்வேன்.

நண்பர்கள் வந்து கேட்டால்
நம்பும்படி பொய்கள் சொல்வாள்.
கவலைக்கு மருந்து கேட்டால்
காதலிக்குத் தூதுபோவாள்

தலையிடி வந்தால் போதும்
தலைமாட்டில் இருப்பாள் தானாய்
காய்ச்சலில் விழுந்தாலோ என்
காலடியில் கண் துயில்வாள்.

ஆசிரியனாய் நின்றென்னை
அதட்டவும் செய்வாள் நாளும்
அன்புடைத் தோழியுமாய்
ஆறுதலும் தருவாளன்றோ!

பாட்டொன்று பாடு என்றால்
பாரதியை முதலழைப்பாள்
கண்ணன்மேல் உள்ளகாதல்
கண்களில் கனவாய் மிதக்கும்.

கொஞ்சும் குரலினிமை
கொள்ளைகொள்ளும் சொல்லினிமை.
பண்ணின் பொருளினிமை
பாவையிவள் பண் இனிமை.

காற்றினிலே வரும் கீதம்
கனிந்துருகப் பாடுகையில்
கண்களில் நீர் வடியக்
காலடியில் நானிருப்பேன்.

காலையில் போனால் நேரம்
கடந்துதான் வருவேன் வாசல்
கதவடி தேய்ந்து போகும்
கால்களும் சோர்ந்து நோகும்

கண்களில் நீரைத் தேக்கிக்
காத்திருப்பாளென் செல்லம்.

ஆயிரம் பெயர்கள் சொல்லி
அழைத்திடு வேனெனினும் அவளின்
“அண்ணா!” எனும்சொல்லில் மட்டும்
அகிலமே அடங்குமம்மா!

அன்றோருநாள் என்னை
அநாதையாய் விட்டு ஏகித்
தனக்கொரு துணையைத் தேடி
தனியளாய்ப் போனாள், அம்மா!

என்முன் துயிலெழுந்து
எனை எழுப்புவாளே அன்று
மறந்துதான் போனாளோ
மல்லிகையால் எனை வருட.

காலையில் அவளைத் தேடிக்
கண்டது கடிதமொன்றே
“காதலனுடன் கூடிச்செல்கிறேன்
கவலை கொள்ளாதே, அண்ணா”.

எனக்கென்றே அன்புகாட்டும்
உறவென்று நம்பி வந்தேன்
தங்கையின் காதல் உள்ளம்
தெரியாத குருடனானேன்.

தங்கையே உனைப் பிரிந்து
தனியனாய்ப் போகேன் தாயே
என்தலை எழுத் திதென்றால்
எழுதியவனையே கொல்வேன்.

கால்விரலில் கல்லிடித்து
குருதி சொட்டுக் கசிந்ததற்கு
அம்மாவிடம் ஓடிப் போய்
அழுதழுது சொன்னாயே!

பற்களொன்றும் முளைக்காத
பருவத்தில் நானுனக்கு
சப்பிக் தந்த கச்சானை
எச்சிலென்றும் பாராமல்
எத்தனைமுறை தின்றிருப்பாய்!

பெரியபிள்ளை யானபோது
பெற்றோரை வணங்கும் முன்னால்
வந்தென் பாதம்தொட்டு
வணங்கியதை ஏன் மறந்தாய்?

கண்ணுக் கினியவனைக்
கண்டறிந்தேன் என்ற சொல்லைப்
பாட்டாலும் பொருளாலும்
பலமுறை நீ சொன்னதெல்லாம்
பயனறியத் தெரியாத
பேயனாய்ப் போனேன் அம்மா!

ஆழ்கடலில் முத்து
உறங்குவதா லென்ன பயன்
அணங்குகளின் கழுத்தை
அலங்கரித்தா லன்றோ புகழ்.

கானகத்தில் சந்தனம்
கரந்துறைந்தா லென்ன பயன்
செங்கமல மேனியாளைச்
சேர்வதன்றோ சிறந்த புகழ்.

கன்னியரை வீட்டில்
காத்து வைத்தல் அழகாமோ
காதலனின் கைபிடிக்கக்
கடை திறத்தல்தான் அழகு!

தங்கையே உயிரே உன்னைத்
தாயாகக் கொண்டேனம்மா
அன்பையே தந்து என்னை
ஆட்கொண்டு விட்டாயம்மா!

இயமன் என் உயிரைத்தேடி
ஏமாந்து போவான் காண்பீர்!
என்னுயிர் என் தங்கையிடம்
இருப்பதை அறிந்திடாமல்.


Saturday, November 10, 2012

இதற்குமேல் என்ன வேண்டும்




குடியிருக்கக் குடிசை
குந்தவொரு திண்ணை
படுத்துறங்கப் பாய்
படித்தறிய நூல்கள்

பாசத்துக்கொரு பெற்றார்
ஆசைக்கொரு மனைவி
அன்புக்கொரு பிள்ளை
ஆத்திக்கொரு பெண்

கிடைக்கும் வரை உழைப்பு
கையில் கிடைத்ததே பிழைப்பு
கிடைத்தால் உலையில் அரிசி
கிடைக்காவிடில் கிணற்றுத் தண்ணீர்

கூடிவாழக் கிராமம்
கிராமம் நடுவில் கோயில்
கோயில் வீதியில் அரசு
அரசு நிழலில் அரட்டை.
பழகித் திரிய நண்பர்
பேசி மதிக்க ஆசான்
பாடித் திளைக்கப் பெண்டிர்
பார்த்து ரசிக்கச் சிறுவர்.

நனைந்து மகிழச் சாரல்
நினைந்து மகிழ இளமை
பகிர்ந்து மகிழ முதுமை
பாடி மகிழப் பஜனை.

சிந்தை குளிரப் பாடல்
சேர்ந்து மகிழ ஆடல்
பகிடி சொல்லப் பெண்கள்
பாதை நெடுகத் தென்றல்.

இந்த நாளே நிச்சயம்
எது வரினும் துச்சம்
அறிவு காட்டும் பாதை
ஆற்றலே எனது கீதை.

காதலில் காண்பது சொர்க்கம்
கனிவால் உணர்வது கடவுள்
சாதலே இறுதியில் உண்மை
கனவினில் வாழேன் திண்மை.

பொறுமைதான் எனது கோயில்
பொய்மையே அகலாப் பேய்கள்
சாதியம் அழிந்தது பரணில்
சமத்துவம் அமர்ந்தது அரணில்.

மானிடம் போற்றுதல் மேன்மை
மனிதவுயிரே என்றும் அருமை
வானமே எமது எல்லை
வாராதுகாண் என்றும் தொல்லை.

மரங்களும் உயிர்களும் சேர்
மனிதர்கள் அனைவரும் நேர்
தமிழ்மொழி அறிவே வேர்
பலமொழி அறிவே நீர்!


1985